search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனா பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர் எச்சரிக்கை

    கொரோனா தாக்கம் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் கண்காணிப்பு அதிகாரி திருப்புகழ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அவருடன் தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் சுனில் தத், விமான நிலைய பொது மேலாளர்கள் தீபக், பாலன் உள்பட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள், விமான நிலைய மருத்துவ குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்துக் கொண்டு இருந்தனர்.

    மத்திய அரசின் அறிவுரை பேரில் விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து தமிழக பொது சுகாதார துறை டாக்டர்கள் பரிசோதனை பலப்படுத்தப்பட்டு உள்ளது. நவீன கருவிகளுடன், கைகளை சுத்தம் செய்ய கூடிய கருவிகளும் வைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக பொது சுகாதார துறை மற்றும் விமான நிலைய மருத்துவ குழு இணைந்து 100 பேர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    சீனா, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு செய்யப்படுவதால் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உள்ளது.

    முதலமைச்சர் விரிவான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். மாநில பேரிடரில் இருந்து ரூ. 60 கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கி உள்ளார். எல்லா துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா வைரஸ் உலக அளவில் அவசர நிலை நோய்யாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார துறை முலமாக அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளதால் சட்டப்பாதுகாப்பு எடுக்க உதவியாக இருக்கும்.

    கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றனர். வரும் 15 தினங்களுக்கு மக்கள் ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

    கன்னியாகுமரி, தேனி, கோவை உள்பட 16 மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் உடல்நலம் தேறி வருகிறார். 2 தினங்களில் வீடு திரும்புவார். தற்போதைக்கு தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலை உள்ளது.

    மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்து உள்ளது. வெளிநாட்டிற்கு சென்று விட்டு திரும்பும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்படும். வருங்காலத்தில் அது போல் பதட்டத்துடன் வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

    ஒரு நாளுக்கு 100 ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். தமிழகம் முழுவதும் 4 பரிசோதனை கூடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    தாம்பரத்தில் சிகிச்சை அளிக்க கூடிய மையம் தயாராகி வருகிறது. திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளிலும் சிகிச்சை மையங்கள் சிறப்பாக உள்ளது.

    சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை பொது சுகாதார துறை முலம் எடுக்கப்படும். தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×