என் மலர்
செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்- மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
மாமல்லபுரம்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும், பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், பட்டர் பால் போன்ற புராதண சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டு வந்த சுற்றுலா பயணிகள் சிற்பங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள உணவகங்கள், இளநீர், குளிர்பானம், மோர் வியாபாரிகள், மற்றும் சிற்பங்கள் செதுக்கும், சிற்பி, சங்கு விற்பவர்கள் வியாபாரம் இன்றி பாதிப்படைந்தனர். சாலையோர வியாபாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிந்துள்ளனர்.
ஐந்துரதம் பகுதியில் உள்ள பல கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.






