என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி காஞ்சீபுரத்தில் மளிகை பொருள்களை அதிக விலைக்கு விற்ற கடைக்கு நகராட்சியினர் சீல் வைத்தனர்.
    காஞ்சீபுரம்:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில், மளிகை பொருட்கள் காய்கறிகள், எண்ணெய் ஆகியவை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்து இருந்தார். காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக காஞ்சீபுரம் நகராட்சிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி சுகாதாரத்துறையினரிடம் அந்த கடையில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார். ஆய்வில், அதிக விலைக்கு அந்த மளிகை கடைகாரர் விற்பனை செய்ததது தெரிந்தது. இதையொட்டி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, காஞ்சீபுரம் நகர் நல அலுவலர் டாக்டர் முத்து, மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த மளிகை கடைக்கு சென்றனர். அப்போது அதிக விலைக்கு விற்பனை செய்ததாக அந்த கடைக்கு நகராட்சியினர் ‘சீல்’ வைத்தனர். 
    சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு 110 பேருடன் சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.
    ஆலந்தூர்:

    அமெரிக்க நாட்டில் இருந்து பயணிகள் சிலர் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தனர். பின்னர் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்து செல்லவும் மத்திய அரசு தடை விதித்தது.

    இதனால் சுற்றுலா வந்த அமெரிக்க பயணிகள், மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாமல் தவித்தனர்.

    இந்தநிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் சுற்றுலா வந்த பயணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அமெரிக்க நாட்டு பயணிகளை சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்ல மத்திய அரசும் அனுமதி அளித்தது.

    இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு மும்பை வழியாக சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 110 பயணிகள் சென்றனர். மும்பை சென்று அங்குள்ள அமெரிக்கர்களும் சேர்த்து அழைத்து செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கின்போது அவசர பயணம் மேற்கொள்ள இணையதளம் மூலம் அனுமதி பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்களுக்காக அவசரமாக பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்களுக்காக மட்டும் பயணம் செய்ய வேண்டி இருப்பின் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் அனுமதி வேண்டி https://kanchi.nic.in என்ற முகவரியில் இணையதளம் மூலமாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    இந்த விண்ணப்பங்கள் முறையான விசாரணைக்குபின் விண்ணப்பதாரர்களின் அனுமதி விவரம் மின்னஞ்சல் மூலமாகவும், குறுஞ்செய்தியாக விண்ணப்பதாரரின் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சேவைக்காக பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கோ அல்லது வேறு எந்த அரசு அலுவலகங்களுக்கோ நேரிடையாக செல்ல வேண்டிய தேவையில்லை.

    இவ்வாறு அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் அனைத்து சூழ்நிலைகளிலும் கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு நோய்த்தொற்று பரவுதலை தடுக்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    சுங்குவார்சத்திரம் அருகே டயர்வெடித்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் பலியானார். போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 24). இவர், சென்னை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். செய்யாறு போலீஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு ஏட்டுவாக வேலை செய்பவர் சன்னிலாயத் (45). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை செய்யாறில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.

    காரை சன்னிலாயத் ஓட்டினார். அவருக்கு அருகில் துரைராஜ் அமர்ந்து பயணம் செய்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் அருகே வேகமாக வந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்ததுடன், சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதே வேகத்தில் அந்த பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக சாலையோரம் கால்வாய் பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் பாய்ந்த கார், அங்கு கால்வாய் பாலத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் கவிழ்ந்தது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பின்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் போலீஸ்காரர் துரைராஜ், உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    போலீஸ் ஏட்டு சன்னிலாயத், படுகாயத்துடன் காருக்குள் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சன்னிலாயத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுபற்றி சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து, பலியான போலீஸ்காரர் துரைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் காண்காணிக்கப்பட்டது.
    மாமல்லபுரம்,

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் காவல்துறை சார்பில் மாமல்லபுரம் துணை கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் அர்ச்சுணன் தபசு சாலை, கடற்கரைசாலை, ஐந்துரதம் சாலை, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, பஸ் நிலைய சாலை, டி.கே.எம். சாலை உள்ளிட்ட மாமல்லபுரம் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் காண்காணிக்கப்பட்டது.

    பொதுமக்கள் ஊரடங்கை மதித்து வீட்டில் இருக்கிறார்களா? குறிப்பிட்ட மருந்து கடை, காய்கறி கடை, மளிகை கடை தவிர மற்ற கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்து போலீசார் பதிவு செய்தனர்.
    தையல் பயிற்சி பெற்ற மகளிர் குழு பெண்கள் மூலம் பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கியுள்ளார்.
    மாமல்லபுரம்:

    கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் விரோனிக்கா (வயது 57) என்பவர் கடந்த 15 வருடமாக மகளிர் குழு பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி, அவர்கள் மூலம் துணிகள் தைத்து தன் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

    தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் துணி ஏற்றுமதி தொழில் முடங்கியது. இதையடுத்து அவர், தன்னிடம் பணிபுரியும் தையல் பயிற்சி பெற்ற மகளிர் குழு பெண்கள் மூலம் தற்போது முக கவசம் தயாரித்து 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கும் பணியினை தொடங்கி உள்ளார்.

    தற்போது கிராம மக்கள், போலீசார், அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் மக்கள் என பல தரப்பினருக்கும் பிரான்ஸ் நாட்டு பெண் விரோனிக்கா நேரில் சென்று இலவசமாக முக கவசம் வழங்கி சமூக சேவையாற்றி வருகிறார்.
    மதுராந்தகம் அருகே கொரோனா வைரஸ் பாதித்த பகுதியில் கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.
    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் வட்டத்தில் கொரோனா வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பகுதியான பி.என். சாரி தெருவில் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.

    அப்போது சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள், ஆட்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கக் கூடாது, அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி லட்சுமி பிரியா உடன் இருந்தனர்.
    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் :

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து துணி கடைகள் மற்றும் பட்டு கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூடப்பட்டு விட்டன.

    இதன் காரணமாக 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி காஞ்சீபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நெசவாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத்தொழிலாளர் சங்கத்தின் சி.ஐ.டி.யு. பிரிவு தலைவர் ஜி.லெட்சுமிபதி, செயலாளர் கே.ஜீவா ஆகியோர் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைத்தறி நெசவாளர்கள் வரவேற்கிறோம். அதற்கு முழுமையான ஒத்துழைப்பும் தருகிறோம். அதே நேரத்தில் காஞ்சீபுரத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

    சேலைகளை தயாரித்து வழங்கும் துணி கடைகளும், பட்டு விற்பனை செய்யும் அரசின் கூட்டுறவு சங்கங்களும் முழுமையாக மூடப்பட்டிருப்பதால் உற்பத்தி செய்த சேலைகளை யாரிடம் கொண்டு போய் கொடுப்பது என தெரியவில்லை.

    நெசவுத்தொழில் முடங்கி போய் இருக்கிறது. எனவே நெசவாளர் குடும்பங்களை காப்பாற்ற மானியமாக ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 806 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என 861 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதில் 55 பேருக்கு 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பு முடிந்தது.

    அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தற்போது 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி தெரிவித்தார்.
    ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரம், ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காட்சி அளித்து வருகிறது.

    ஊரடங்கின் 6-வது நாளான நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்ன மையங்கள் 6-வது நாளாக வெறிச்சோடி கிடக்கிறது.

    மாமல்லபுரம் கடற்கரையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, கடல் அலையின் ஓசை மட்டும் கேட்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் மயானம் போல் அந்த பகுதி அமைதியாக காட்சி அளித்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் நகரப்பகுதியில் காய்கறி கடை, மளிகை கடை, மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணி முதல் 8 மணி வரை தங்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர்.

    அதன்பிறகு சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாமலும், அங்குள்ள புராதன சிற்பங்கள் மட்டுமே காட்சி அளித்து கொண்டிருக்கின்றன. மாமல்லபுரம் ஊரே அமைதியாக காட்சி அளிக்கிறது.
    ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்போரூர் கோவிலில் இடைவெளி விட்டு அமர்ந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில் 6 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை 9 திருமணங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக 6 திருமண வீட்டார் தங்களது வீடுகளிலேயே திருமணம் செய்வதாக கூறி விட்டனர். 3 திருமணம் மட்டும் இன்று காலை திருப்போரூர் கோவிலில் நடந்தது.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்-வேளச்சேரியைச் சேர்ந்த முத்துமாரி, செங்கல்பட்டு மணிகண்டன்- அம்பத்தூர் கிருஷ்ணபிரியா, புதுபெருங்களத்தூர் சந்திரன்- செம்பாக்கம் அபிராமி ஆகியோர் திருமணம் சிறப்பான நடந்தது.

    மணமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இதற்காக தரையில் தனித்தனியாக வட்டம் போடப்பட்டு இருந்தது.

    திருமண வீட்டாரில் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதில் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

    சின்ன காஞ்சீபுரத்தில் பண்ருட்டியைச் சேர்ந்த பிரசன்னா-காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சண்முகபிரியா ஆகியோர் திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் உறவினர்கள் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

    பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தாம்பரம்:

    பல்லாவரம் பொழிச்சலூர் கமி‌ஷனர் காலனியில் 71 வயது மூதாட்டி கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

    இதையடுத்து கடந்த 25-ந்தேதி அவரை போரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவர் ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. உடனடியாக மூதாட்டிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மூதாட்டியின் கணவர் மற்றும் அவரது மகன், மருமகள், 2 பேரன்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ×