என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலன் கேட் ரேசன் கடையில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.500 மதிப்பில் 19 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலன் கேட் ரேசன் கடையில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.500 மதிப்பில் 19 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து கூறியதாவது:

    “இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பினை பெறுவதற்கு குடும்ப அட்டைகள் ஏதும் தேவையில்லை.

    மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 620  முழு மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகளில் தலா ரூ.500 மதிப்பிலான  மளிகைப்பொருட்கள் தொகுப்பு பைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரும்புலியூரியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    வாலாஜாபாத்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் விவசாயம் சார்ந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரும்புலியூரியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழத்தின் மூலமாக 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது வரை 21,898 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற மே 30-ந் தேதி வரை நீட்டித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    மேலும் கடந்தாண்டு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்போது 36 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டதும், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 36 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு கொள்முதலான 24, 728 மெட்ரிக் டன்னை காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமே தற்போது நெருங்கி விட்டதாகவும், இன்னும் 12,048 மெட்ரிக் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதனால் 50 சதவீதம் கூடுதலாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் விவசாய கொள்முதல் நிலையங்களின் தினசரி 800 மூட்டைகள் வாங்கி கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வி.செந்தில்குமார், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மகேஸ்வரி, துணை மண்டல மேலாளர் அருள்வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஒரகடம் அருகே வட மாநில வாலிபர் திடீர் மூச்சு திணறு காரணமாக உயிரிழந்தார், மேலும் கொரோனா தொற்றால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிப்ருல் இஸ்லாம் (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து உடன் பணிபுரிந்து வருபவர்கள் இவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்திலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த நிலையில் இறந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என அவருடைய ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலை கண்டுபிடிக்க வழங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் மூலம் பரிசோதனை தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலை கண்டுபிடிக்க வழங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்வதை காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள 300 ரேபிட் டெஸ்ட் கிட்டில் காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதிக்கு 50, காவல்துறைக்கு- 50 தூய்மை பணியாளர்களுக்கு -65, சுகாதாரப் பணியாளர்களுக்கு- 33 என காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு 198-ம், மொளச்சூர் பகுதிக்கு - 51, நந்தம்பாக்கம் பகுதிக்கு 51-ம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 9 பேர் பாதிக்கப்பட்டு 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் 1060 பேர் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரத்தில் போலீசாரின் தடுப்புகளால் ஆம்புலன்ஸ் செல்ல தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவற்றை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், காஞ்சீபுரம் நகரில் பாதிக்கப்பட்ட நபர் உள்ள பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளது. மேலும் தடுப்புகளில் கதவு அமைத்து உரிய காரணங்களுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் அந்த தடுப்புகளை கடந்து செல்ல சுமார் 1 மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இதனால் ஆம்புலன்ஸ் மட்டும் விரைவாக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    படப்பை அருகே ஏரியில் குளித்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை கத்தியால் வெட்டி செல்போன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    படப்பை: 

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்கி இருந்து ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவநாத்சிங் (வயது 26), குல்தீப் கேர்வால் (21), மந்தீப்சிங் (21) உள்பட மொத்தம் 6 பேர் புதுநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் குல்தீப் கேர்வாலிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்தனர். மேலும் பணம் கேட்டு மிரட்டிய அவர்கள் சிவனாத் சிங், மற்றும் மந்தீப்சிங், ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

    இதனைத்தொடர்ந்து, காயம் அடைந்த நிலையில் கிடந்த சிவநாத்சிங்கை நண்பர்கள் மீட்டு, காட்ரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், உத்தரவின்பேரில், சோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நல்லூர் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சோமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த எலியாப் என்றவிக்னேஷ் (18), அதே பகுதியை சேர்ந்த கொரில்லா என்ற விக்னேஷ் (19) மற்றும் சிறுவர்கள் உள்பட 4 பேர் என தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன், மற்றும் மோட்டார் சைக்கிள், கத்தி, ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். மேலும் பிடிபட்ட 2 சிறுவர்களை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊருக்குள் செல்லும் நபர்கள் அனைவரும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களும் மூடப்பட்டு, அவசர தேவைகளுக்கு ஒரு வழி பாதை மட்டும் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கிராமத்திலும் அனைத்து தெருக்கள் மூடப்பட்டு, ஊருக்குள் செல்ல பெரிய தெரு வழி மட்டும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி மக்கள் தெருவின் முகப்பில் பெரிய பேரலில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீர் வைத்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊருக்குள் செல்லும் நபர்கள் அனைவரும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களிலும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அத்துடன் அந்த தெரு முழுவதும் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
    காஞ்சிபுரம் நகராட்சியில் 51 வார்டுகளில் தெருக்கள் மூடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் தேவையின்றி வெளியேறுவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கம்புகள் கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தெருக்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் அவசர தேவைக்காக ஒரு வழிபாதை மட்டும் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும் என்று காஞ்சிபுரம் போலீசார் அறிவித்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்பவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிகிறார்கள். அனாவசியமாக சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், நூதன தண்டனைகளையும் வழங்கி எச்சரித்து வருகின்றனர்.

    ஆனாலும் பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி இருசக்கர வாகனங்களில் 2 பேர் என வெளியே சுற்றி திரிகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்வாறு அதிகளவில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் கூட்டம் கூடுகின்றனர்.

    இதையடுத்து போலீசார், இதுபோன்று வரும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இனிமேல் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும். மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்தால், அந்த இருசக்கர வானம் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்து உள்ளனர்.

    அதன்படி நேற்று காஞ்சீபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட் பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் 2 பேராக வந்தவர்களை போலீசார் நிறுத்தி ஒருவரை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு ஒருவர் மட்டுமே மார்க்கெட் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் மார்க்கெட் பகுதியில் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் பகுதியில் 2 பேராக சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூரில் கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்ற வடமாநிலத்தை சேர்ந்த பீடா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித்(வயது 43). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பக்கத்தில் தங்கி, அதே பகுதியில் பீடா கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இந்திரஜித், வருமானம் இல்லாமல் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்தார்.

    இதனால் அவர், வலி நிவாரணி மாத்திரை, சளி, காய்ச்சல் மாத்திரை மற்றும் இருமல் மாத்திரைகளை பொடியாக்கி அவற்றை சிறிய கவரில் போட்டு, கொரோனா வைரசுக்கு மருந்து என்று கூறி விற்றால் பொதுமக்கள் வாங்கி விடுவார்கள். அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டார்.

    இதையடுத்து இந்த போலி மருந்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் பொதுமக்களிடம் கூவி கூவி விற்க தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    போலீசாரை கண்டதும் இந்தரஜித் ஓட தொடங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்திரஜித்தை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
    விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பணத்திற்கு பதிலாக ஓராண்டுக்குள் பயணம் செய்யலாம் என டுவிட்டரில் விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விமான சேவைகள் முடக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி பன்னாட்டு விமான சேவையும், மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டது.

    இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகை முழுவதும் விமான நிறுவனங்களின் இருப்பில் இருக்கும்.

    டிக்கெட் முன்பதிவு செய்து ஊரடங்கால் ரத்து ஆனதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

    பணத்துக்கு பதிலாக அந்த டிக்கெட்டை 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பயன்படுத்தி கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் டுவிட்டரில் அறிவித்து உள்ளன.

    ஆனால் ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டின் முழு தொகையையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. ஆனால் பிப்ரவரி மாதம் முதல் விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டன.

    மேலும் ஊரடங்கு காலத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் தொகை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் சிறப்பு சலுகையாக அந்த தொகையில் ஓராண்டிற்குள் டிக்கெட் எடுத்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி யானை, மனித குரங்குகள் ஷவரில் குளித்து வருகின்றன.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாட்டி வதைக்கும் கோடை வெயிலை விலங்குகள் சமாளிக்கும் வகையில் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி பூங்காவில் உள்ள மனித குரங்கு வசிக்கும் இருப்பிடத்தில் குடை வடிவில் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து உச்சி வெயில் நேரத்தில் கொட்டும் குளிர்ந்த நீரில் கூண்டில் இருந்து வெளிவரும் மனித குரங்குகள் ஆனந்த குளியில் போட்டு தங்களது உடல் சூட்டை தணித்துக்கொள்கின்றன. அத்துடன் மனித குரங்குகளுக்கு தர்பூசணி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் உண்பதற்கு தரப்படுகிறது. இதனை மனித குரங்குகள் ருசித்து சாப்பிடுகின்றன. மனித குரங்களின் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக லஸ்ஸியும் தரப்படுகிறது. இதனால் பூங்காவில் மனித குரங்குகள் மகிழ்ச்சியில் குதிக்கின்றன.

    இதேபோல பூங்காவில் உள்ள யானைகளும் ஷவரில் குளித்து மகிழ்கின்றன. பூங்கா ஊழியர்கள் வாளியின் மூலமும் தண்ணீரை வாரி யானையின் மீது ஊற்றுகின்றனர். யானைகளுக்கு குளுகுளு தர்பீஸ் பழங்கள் மற்றும் இளநீரை ஊழியர்கள் தருகின்றனர். இதனை யானைகள் விரும்பி சாப்பிடுகின்றன.

    வெள்ளைப்புலி கூண்டில் ராட்சத பேன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளைப்புலி கூண்டு எப்போதும் குளுகுளு என்று இருப்பதால் வெள்ளைப்புலிகள் ஒய்யாரமாக கூண்டில் ஒய்வு எடுக்கின்றன. வெள்ளைப்புலிகள் இருக்கும் இடத்தில் சிறிய குளம்போல் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. தாய்ப்புலி மற்றும் அதனுடைய புலிக்குட்டிகள் தங்களை வெப்பத்தில் இருந்து காத்துகொள்வதற்காக அடிக்கடி இந்த சிறிய தண்ணீர் தொட்டியில் குளித்து விளையாடுகின்றன. வெள்ளைப்புலியின் கூண்டு அருகே ஒரு ஷவரும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஷவரில் வெயில் நேரத்தில் வெள்ளைப்புலிகள் குளித்து விளையாடுகின்றன.

    இதேபோல காண்டாமிருகம் இருப்பிடத்திலும் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது. பறவைகள் அடைக்கப்பட்டு உள்ள கூண்டுகளுக்கு மேல் கோணி பைகள் போடப்பட்டு அதன் மீது ஊழியர்கள் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் பறவைகள் கூண்டு எப்போதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது.

    சிறு கரடிகள் இருப்பிடத்தில் மரங்களிலிருந்து கீழே தொங்கும் வகையில் மண் பானைகளில் தேன் நிரப்பி துளைகள் இட்டு கீழே தேன் சொட்டும் வகையில் தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் இருந்து சொட்டும் தேன் துளிகளை சிறு கரடிகள் ருசித்து பருகி வருகிறது.

    நெருப்பு கோழி கூண்டிலும் ‘ஸ்பிரிங்க்லர்ஸ்’ வைக்கப்பட்டு நாலாபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதனால் நெருப்பு கோழிகள் கூண்டு குளுகுளு என்று உள்ளது. பூங்காவில் பல்வேறு விலங்குகள் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பூங்கா நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் பூங்கா மூடப்பட்டு உள்ளதால் பூங்காவில் உள்ள மனித குரங்கு, காண்டாமிருகம், யானை, வெள்ளப்புலிகள் ஆகிய விலங்குகள் ஷவரில் குளிக்கும் காட்சிகளை ரசித்து பார்க்கத்தான் ஆள் இல்லை.

    இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் காரணமாக பூங்கா முழுவதும் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நேற்று அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால்

    இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களின் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை உயிரியல் பூங்காவிற்கு வழங்கி உள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் பல்வேறு சோதனைகளை செய்த பிறகுதான் விலங்குகளுக்கு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×