search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் கலெக்டர்"

    • கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
    • பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நாளை நடைப்பெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள,

    1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம், 4. அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும் 9.எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது.

    • பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    • புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24*7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம். மேலும் பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டினை மட்டும் பின் தொடருமாறும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நடைபயிற்சி செய்பவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
    • நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமரவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி இன்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து அவரும் நடந்து சென்றார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் தொகுதி எம்பி க. செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழில ரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மற்றும் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் மற்றும் பொதுமக்கள், நடைபயிற்சி செய்பவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமரவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டுசாலை வரை சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் வரை சென்று நிறைவடைந்தது.

    • திம்மசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
    • பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமில் 218 பயனாளிகளுக்கு ரூ.3.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்த முகாமில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ரம்யா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஷ்வரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன்கடையை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு நிலையை கேட்டறிந்தார். மேலும் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23 -ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் 'மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக 2022-23-ம் ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலையரசன், கலையரசி விருதுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

    பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும் கலை அரங்கம் செயல்பாடுகள் மூலம் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனி நபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு: கவின்கலை / நுண்கலை,

    இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை - தோற் கருவி, 4. கருவி இசை துளை காற்றுக்கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள் 6. இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் போட்டி நடைபெறும்.

    11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, தோற் கருவி, கருவி இசை துளை / காற்றுக்கருவி, கருவி இசை தந்திக் கருவிகள், இசைச்சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    போட்டிகள் தனி நபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம் ஒரு மாணவர் ஏதேனும் 3 தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக பங்கு பெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் இரண்டாமிடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.

    பள்ளி அளவில் வருகிற 14-ந்தேதிக்குள், வட்டார அளவில் 18-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள், மாவட்ட அளவில் 26-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள், வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    • மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.

    ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    எங்கள் வீட்டில் குறைந்த அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் மின் கட்டணம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்து உள்ளது.

    அப்போது முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் மீட்டரை மாற்றித் தரக்கோரி முறையிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில்தான் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக ரூ.26,850 மின் கட்டணம் வந்துள்ளது.

    இவ்வளவு மின் கட்ட ணத்தை என்னால் செலுத்த இயலாது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மகள்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    எனவே அதிக அளவிலான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது கூலி தொழிலாளி பழனியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • நிர்வாக காரணங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
    • 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக்கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விவசாயிகளுக்கான வேளாண் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, கூட்டுறவு துறை சார்பில், 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.6,18,791 மதிப்பீட்டில் பயிர் கடன்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒரு விவசாய பயனாளிக்கு ஒரு விசைத்தெளிப்பான், ஒரு விவசாய பயனாளிக்கு உயிர் உரங்கள், 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவையொட்டி, மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
    • அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    காஞ்சிபுரம்:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப். 1-ந் தேதி முதல் செப். 30-ந் தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தில் பிரத்யேக தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் இணை உணவு அளித்தல், இரண்டாவது வாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து, முன்பருவக் கல்வி, யோகா, உள்ளூர் உணவு போன்ற ஆயுஷ் நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின் பற்றுதல் நடைபெறுகிறது.

    மூன்றாவது வாரத்தில் என் மனம் என் நாடு மற்றும் பழங்குடியினரை மையமாகக் கொண்டு ஊட்டச்சத்து உணர்திறன் நிகழ்ச்சியில் நான்காவது வாரத்தில் ரத்தசோகை பரிசோதனை, சிகிச்சை, ஒட்டுமொத்த ஊட்டச் சத்து நடவடிக்கைகள் மற்றும் சமுதாய தோட்டங்கள் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் மற்ற துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கி ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.சங்கீதா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

    மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவல கங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    அவர்களுக்கு பதிலாக வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம்.
    • நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் பொறியியல் துறையில் வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவு பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250 என்ற அடிப்படையில் ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625 ம் புன்செய் உழவுக்கு ரூ.1250 ம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று. நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

    செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. செல்போன் எண் 99529 52253.

    உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, செல்போன் எண்: 90030 90440.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×