search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டுமான பணி- காண்டிராக்டருக்கு கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை
    X

    தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டுமான பணி- காண்டிராக்டருக்கு கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை

    • ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்‌ ஸ்ரீதேவியும் இருளர் குடியிருப்பு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் திட்ட அலுவலர் ஸ்ரீதேவியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதேபோல் சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகளும், குண்டுகுளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகளும், மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகளும் என மொத்தம் 443 குடியிருப்புகள் ரூ.19 கோடியே 37 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

    இந்த பணியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கயல்விழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே முன்னதாக ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு வீடுகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் தரமற்று இருப்பது தெரிந்தது. அவர் சுவரில் செங்கல்களுக்கு இடையே இருந்த சிமெண்டுகளில் கைவைத்தபோது அது பெயர்ந்து விழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ஆர்த்தி காண்டிராக்டரை கண்டித்தார். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக கட்டுமான பணி செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.

    இதேபோல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவியும் இருளர் குடியிருப்பு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பணிகள் மந்தமாகவும் தரமற்றும் இருப்பதை கண்டு அவர் அங்கிருந்த ஊழியர்களை கண்டித்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவிவருகிறது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் திட்ட அலுவலர் ஸ்ரீதேவியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். அனைத்து திட்டங்களிலும் இதேபால் அதிகாரிகள் ஆய்வு செய்தால் எந்த முறைகேடும் நடைபெறாமல் நலத்திட்டங்கள் முழுமையாக பயனாளிகளுக்கு கிடைக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×