search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இ-சேவை மையங்களை தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இ-சேவை மையங்களை தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

    • தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகிறது.

    மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது இந்த திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in/www.tnega.tn.gov.in) இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் "அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×