search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு- காஞ்சிபுரத்தில் முககவசத்துக்கு திடீர்  தட்டுப்பாடு

    கொரோனா பீதி காரணமாக காஞ்சிபுரத்தில் முக கவசங்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    ஓமன் நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

    அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என 22 பேருக்கு காஞ்சிபுரம் சுகாதாரதுறை சார்பில் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவர்களும் கண்காணிக்கப்பில் இருந்து வருகின்றனர்.

    என்ஜினீயர் வீடு இருந்த தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக காஞ்சிபுரத்தில் முக கவசங்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மருந்து கடைகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் முக கவசங்களை கூடுதலாக கேட்டு வாங்கி செல்கிறார்கள். இதனால் சில மருந்து கடைகளில் எண்-95 வகை முக கவசம் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

    காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை நலபணிகள் துணை இயக்குனர் பழனி கூறியதாவது:-

    காஞ்சிபுரம் நகர் முழுவதும் சுகாதார பணியாளர் குழு அமைத்து பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை எடுத்து கூறி வருகின்றனர்.

    பள்ளி மாணவ-மாணவிகள் இடையே கைகழுவும் செயல்முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சுகாதார துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×