search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக அரசு பூங்காவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் காட்சி
    X
    கர்நாடக அரசு பூங்காவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் காட்சி

    காய்ச்சல், இருமல் உள்ள சுற்றுலா பயணிகள் கர்நாடக அரசு பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை

    காய்ச்சல், இருமல் உள்ள சுற்றுலா பயணிகள் கர்நாடக அரசு பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. நீலகிரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரளா, கர்நாடகா மாநிலங்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள், கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசு பூங்கா உள்ளது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசம் அணிந்த பணியாளர்கள் கிருமிநாசினி வழங்குகின்றனர். டிக்கெட் பெறும் இடத்தில் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால் பூங்கா உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அங்கு வந்து செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கர்நாடக அரசு பூங்காவில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு டிக்கெட் பெறும் இடத்தில் சுற்றுலா பயணிகள் கை வைக்கும் பகுதிகள் மற்றும் குடிநீர் வழங்கும் எந்திரத்தில் இருந்த 2 டம்ளர்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தார். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காய்ச்சல், இருமல் இருந்தால் எல்லை சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சொகுசு பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. அம்மாநில அரசு சுகாதாரத்துறையினர் மற்றும் நீலகிரி எல்லையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் கூட்டம் நடத்த வயநாடு மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் முரளிசங்கர், தோட்டக்கலை உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×