search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
    X
    பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

    கூடுவாஞ்சேரி-பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

    பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால் கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
    தாம்பரம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த வாரம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து நேற்று முதல் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.

    நேற்று மாலை முதல் அதிக அளவு வாகனங்கள் சென்னையை நோக்கி வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன. இதனால் சுங்கச்சாவடிகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இன்று அதிகாலை சென்னையின் நுழைவு வாயிலான வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் அதிக அளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் ஸ்தம்பித்து நின்றன.

    கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. பெருங்களத்தூர் - வண்டலூர் இடையே வாகனங்கள் நகராமல் அப்படியே நின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் அதிகாலை தொடங்கி காலை 10 மணி வரை நீடித்தது.

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் காலை 5 மணி முதல் பணியில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக வண்டலூர் மேம்பாலம் அருகில் பெருங்களத்தூர் நோக்கி சென்ற கனரக வாகனங்களை இடது புறமாகத் திருப்பி வெளிவட்ட சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    பெருங்களத்தூர் வந்து இறங்கிய பயணிகள் சென்னை நோக்கி செல்வதற்கு மாநகர பஸ் வசதி குறைவாக இருந்ததால் பெருங்களத்தூர் பஸ் நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதி வருகிறது.

    அதிக அளவு வாகனங்கள் வந்ததால் அச்சரபாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி மற்றும் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    இதையடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இலவசமாக செல்ல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து தென் மாவட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் இன்று காலை 10 மணி வரை இலவசமாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

    சேலம் மாவட்டம் கருப்பூர், தர்மபுரி மாவட்டம் தொப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வாகனங்கள் அந்த சுங்கச்சாவடியை கடக்க அரைமணி நேரத்திற்கும் மேலானது.

    சென்னையில் இருந்து பெங்களூரு செல்லவும், சேலம், தர்மபுரியில் இருந்து பெங்களூரு செல்லவும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    நேற்று மாலை முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. வழக்கத்தைவிட 5 மடங்கு வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்ததாலும், ஒரு கவுண்டர் தவிர மற்ற கவுண்டர்களில் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாலும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

    ஒவ்வொரு வாகனத்திலும் உள்ள பாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் ஒப்பிட்ட பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    Next Story
    ×