என் மலர்
தர்மபுரி
- தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
- மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை.
தருமபுரி:
தருமபுரி அருகே வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருமணம் மண்டபம் கட்ட, 80 லட்சம் ரூபாயை, பா.ம.க. தலைவர் அன்புமணி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதில், ஒன்றிய பொதுநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிதி உட்பட, 1.14 கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம், உணவருந்தும் கூடம், சுகாதார வளாகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதை, பா.ம.க. தலைவர் அன்புமணி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது, பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுப்பது என, மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
அதற்கு பணம் கொடுத்து விட்டால் தீர்வாகி விடாது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை. கடந்த, 2021-ல், தி.மு.க. அளித்த, 505 தேர்தல் வாக்குறுதியில், 66 மட்டும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.
கடந்த, 12 நாளில், 16,000 கோடி ரூபாய்க்கு, 4,385 ஒப்பந்த பணிகள் போடப்பட்டுள்ளன.
ஆட்சியின் கடைசி காலத்தில் கொள்ளையடிக்கும் வேலையை, தி.மு.க.வினர் செய்கின்றனர்.
2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் போட்டி. தமிழகத்தில் பெண்களால், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
- ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.
- ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
ஒகேனக்கல்:
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும்.
அதிகளவு நீர் ஓடும் போது அருவியில் குளித்து மகிழவும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வர்.
தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று 200 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால், காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது.
ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
கர்நாடக அணிகளில் இருந்து உபரி நீர் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன. அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று குறைந்துள்ளது.
கோடை காலம் துவங்கும் முன்பே கர்நாடகாவில் மழை குறைந்ததாலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
நீர்வரத்து மேலும் குறைந்ததால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கான தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் கோடை சுற்றுலா இந்த ஆண்டு கடுமையாக பாதிப்பு நிலை ஏற்படும்.
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.
- சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1200 கனஅடியாக வந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1500 கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- குற்றப்பரம்பரை என ஒரு பிரிவு இருந்ததை, சீர்மரபினர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான் மாற்றினார்.
- மண், மக்களை பாதுகாக்க திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும்.
தருமபுரி:
தருமபுரியில் திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற திராவிட கழக தலைவர் கி.வீரமணி, 'இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஆட்சி, இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி' என்ற தலைப்பில் மேலும் பேசியதாவது:-
தமிழகத்தில் திராவிட இயக்கமும், திராவிட மாடல் ஆட்சியும் இல்லை என்றால், நாம்யாரும் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது.
குற்றப்பரம்பரை என ஒரு பிரிவு இருந்ததை, சீர்மரபினர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான் மாற்றினார்.
அதேபோல திருநங்கைகள், பெண்களுக்கான அங்கீகாரத்தை அளித்தது திராவிட மாடல் ஆட்சிதான். எங்கெல்லாம் அநீதி ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் சமூக நீதி வேண்டும் என்பதற்கு தான் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார்.
தமிழக்தின் கவர்னர் எதிர்க்கட்சிகளை போல வெளிநடப்பு செய்கிறார். இவை சட்டப்படி தவறு. எனவே தான் அடுத்த ஆண்டு முதல் சட்டப் பேரவையில் கவர்னர் உரையே இருக்காது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்தாலும், பா.ஜ.க.வால் ஏதும் செய்ய இயலாது. மண், மக்களை பாதுகாக்க திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும் என்றார்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்தது.
- காவிரி ஆற்றில் தொடர்ந்து 5-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இந்தநிலையில் காவிரி ஆற்றில் தொடர்ந்து 5-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக நீடிக்கிறது.
இருப்பினும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர்.
- சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
ஒகேனக்கல்:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.
இதனிடையே தமிழக-கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- லாரி முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
- தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தருமபுரி:
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் புதூர் பகுதியில் இன்று காலை வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்தவர்கள் அய்யா.. அம்மா... என்று அலறினர்.
உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் இறந்தது ஈரோடு மாவட்டம், சங்கரியை சேர்ந்த முனியப்பன் (வயது40), தருமபுரி மாவட்டம், மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, சம்மனம்பட்டியை சேர்ந்த அருணகிரி ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. அவர்களது உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த விபத்தால் தருமபுரி-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
- தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் முத்தரசன், திருமாவளவன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
* எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
* வாக்குரிமையை காப்பாற்ற SIR பணிகளில் தி.மு.க.வினர் சுழன்று சுழன்று பணியாற்றினோம்.
* தேர்தல் முடியும் வரை தி.மு.க.வினரின் பணிகள் முடிவடையவில்லை.
* சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்த்து அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
* அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சட்டசபையில் ஒருபோதும் முறையாக பதில் அளித்தது இல்லை.
* தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.
* தமிழ்நாட்டில் 7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் ஒரு மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் பரவியதால் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள் அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்ய தொடர் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
- ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர்.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.
இந்த நிலையில் ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது கணவர் கண்ணன் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பரிசோதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
அதன்படி சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த நர்சு சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து ஸ்கேன் மூலம் ரம்யாவுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு 3-வதும் பெண் குழந்தை என்பதை நர்சு சுகன்யா உறுதிப்படுத்தி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து ரம்யாவிற்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்திட கண்ணன் திட்டமிட்டு உள்ளார். அதன்படி வீட்டில் கருக்கலைப்பின்போது ரம்யாவிற்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மாடிப்படியில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து காயம் அடைந்து விட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியபோது வழியில் கர்ப்பிணி இறந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ரம்யாவின் கணவர் கண்ணன், நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரியில் பா.ம.க. மூத்த நிர்வாகி இல்ல திருமணத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. தி.மு.க. ஒரு துரும்பை கூட செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை.
தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது. அதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வருகிற டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதற்கு தி.மு.க.வை தவிர, அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே காரணம். தமிழ்நாட்டில் சமூக நீதியை மு.க.ஸ்டாலின் குழித் தோண்டி புதைந்துள்ளார்.
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக நீதி.
தமிழ்நாட்டில் நகாராட்சி துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையை, காவல் துறைக்கு கொடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் வரை ஹவாலா பணம் வந்ததாக 232 பக்கம் அறிக்கை கொடுத்தும் இந்த அரசு விசாரணை நடத்தவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியானதற்கு விசாரணை நடத்துகிறார்கள். மணல் கொள்ளை நடந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
தொழிலாளர்கள் முதலீடு முழுமையாக வந்ததாக முதலமைச்சரும், அமைச்சரும் பொய்யாக கூறுகிறார்கள். 9 விழுக்காடு தான் முதலீடு வந்துள்ளது. 80 முதலீடு வந்ததாக சொன்னவர்கள். தற்போது 23 சதவீதம் வந்துள்ளது என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு வராமல், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு, தொழில் நிறுவனங்கள் செல்கிறது. இதற்கு தி.மு.க.வின், கலெக்சன், கமிசன் கராப்சன் அதிகம் என்பதால், இங்கு வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- தவெகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது பலரும் கேட் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு தவெகவினரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெகவினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.






