என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் வராததற்கு தி.மு.க அரசின் ஊழல் தான் காரணம் - அன்புமணி
- தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரியில் பா.ம.க. மூத்த நிர்வாகி இல்ல திருமணத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. தி.மு.க. ஒரு துரும்பை கூட செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை.
தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது. அதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வருகிற டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதற்கு தி.மு.க.வை தவிர, அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே காரணம். தமிழ்நாட்டில் சமூக நீதியை மு.க.ஸ்டாலின் குழித் தோண்டி புதைந்துள்ளார்.
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக நீதி.
தமிழ்நாட்டில் நகாராட்சி துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையை, காவல் துறைக்கு கொடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் வரை ஹவாலா பணம் வந்ததாக 232 பக்கம் அறிக்கை கொடுத்தும் இந்த அரசு விசாரணை நடத்தவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியானதற்கு விசாரணை நடத்துகிறார்கள். மணல் கொள்ளை நடந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
தொழிலாளர்கள் முதலீடு முழுமையாக வந்ததாக முதலமைச்சரும், அமைச்சரும் பொய்யாக கூறுகிறார்கள். 9 விழுக்காடு தான் முதலீடு வந்துள்ளது. 80 முதலீடு வந்ததாக சொன்னவர்கள். தற்போது 23 சதவீதம் வந்துள்ளது என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு வராமல், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு, தொழில் நிறுவனங்கள் செல்கிறது. இதற்கு தி.மு.க.வின், கலெக்சன், கமிசன் கராப்சன் அதிகம் என்பதால், இங்கு வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






