என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டியில் ஒடும் பஸ்சில் பிணமாக கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    வடலூரில் இருந்து இன்று காலை தனியார் பஸ் ஒன்று பண்ருட்டிக்கு வந்தது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர் பின்னர் ஒரு சீட்டில் முதியவர் ஒருவர் இறங்காமல் அமர்ந்து இருந்ததை கண்ட பஸ் கண்டக்டர் அவரை எழுப்பியுள்ளார்.

    அப்போது அவர் இறந்து இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பஸ் கண்டக்டர் பண்ருட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பண்ருட்டி போலீசார் ஒடும் பஸ்சில் உயிரிழந்த முதியவர் உடலை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒடும் பஸ்சில் உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்மகாய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

    இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிதம்பரம் அருகே இளம்பெண் ஒருவர் இறந்துள்ளார்.

    சிதம்பரத்தை அடுத்த அய்யனூர் மங்காகுளம் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 22). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனைத்தொடர்ந்து அவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரிக்கவே புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று மதியம் மாலதி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.
    நெய்வேலி ரெயில்வே நிலையத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம கடிதத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக காரைக்காலில் இருந்து பெங்களூர் வரை செல்லும் ரெயிலும், கடலூரிலிருந்து திருச்சி வரை செல்லும் ரெயிலும் தினசரி இயக்கப்படுகிறது.

    மேலும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு நிலக்கரி ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயிலும் மந்தாரக்குப்பம் ரெயில் நிலையத்தின் வழியாகத் தான் செல்கிறது.

    இந்தநிலையில் மந்தாரக்குப்பம் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு நேற்று மாலை ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அந்த கடிதத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த மீனாட்சிப்பேட்டை கேசவன் என்பவர் எழுதியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எனது தந்தைக்கும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

    கடந்த 24-ந்தேதி இருவரும் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ரெயில் பாதையில் 4, 5 இடங்களில் வெடிகுண்டுகளை ஒரு அட்டை பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

    வருகிற டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த கடிதம் குறித்து ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சிதம்பரம் ரெயில்வே கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மந்தாரக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி அதை சுற்றியுள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் நெய்வேலி ரெயில் நிலையத்தில் உள்ள 2 லெவல் கிராசிங்களிலும், நிலக்கரி சேமிப்பு கிடங்குகளிலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில்வே நிலையத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம கடிதத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    சிதம்பரத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் .
    கடலூர்:

    சிதம்பரம் பொய்யாபிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் கடந்த மாதம் 26-ந் தேதி ஓமக்குளம் கீழக்கரையைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது37) நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அவரை உசுப்பூர் அம்மாபேட்டையைச்சேர்ந்த சிவா என்ற சிவராஜ்(21) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்தார்.

    இது தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தார்.

    சிவா தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி சிவா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதேப்போல் கடந்த 7-ந்தேதி பரங்கிப்பேட்டையில் ஜாகிர்உசேன் என்பவரை பி.முட்லூர் மேட்டுத்தெருவைசேர்ந்த கனகராஜ்(32) என்பவர் வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்தார்.

    இது தொடர்பாக கனகராஜை பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் கைது செய்தார். கனகராஜ் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இதனால் அவரை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்ய உத்தரவிடு மாறு கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கனகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கனகராஜை கைது செய்யப்பட்டார்.

    கடலூர் சில்வச்பீச்சில் கடல் திடீரென 40 அடி தூரத்துக்கு உள் வாங்கியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர்பீச் கடலில் சுனாமிக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென கடல் உள்வாங்குவதும், சீற்றமாக காணப்படுவதும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் சில்வச்பீச்சில் கடல் திடீரென 40 அடி தூரத்துக்கு உள் வாங்கியது. இன்று காலையும் அதே நிலை நீடித்தது.

    இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பீதியடைந்தனர். கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடல் உள்ளே யாரையும் அனுமதிக்க வில்லை.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது, “சில்வர்பீச் கடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சரியான காரணத்தை கண்டறிந்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

    கடலூரில் தனியாக இருந்த பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் ஆர்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 58). இவர் தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இன்று அதிகாலை ஜெயலட்சுமி வீட்டுக்கு ஒரு வாலிபர் குடிபோதையில் வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்த ஜெயலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டார். இதையடுத்து அந்த வாலிபர் ஜெயலட்சுமியை துணியால் கழுத்தை இறுக்கினார்.

    பின்னர் வீட்டில் இருந்த விளக்கை எடுத்து ஜெயலட்சுமியின் கன்னத்தில் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    காயம் அடைந்த ஜெயலட்சுமி வலியால் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ நடந்த இடத்துக்கு போலீசார் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர்.

    அவர்கள் புதுநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் புதுவை-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கைது செய்ய கோரி கோ‌ஷமிட்டனர். பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறியதாவது:-

    தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய மர்ம வாலிபர் முயன்றுள்ளார். அந்த வாலிபரை உடனே கைது செய்ய வேண்டும்.

    மேலும் எங்கள் பகுதியில் கஞ்சா, சாராயம் போன்றவை அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போலீசார் அவர்களிடம் சம்பந்தப்பட்ட வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தி உடனே கைது செய்வோம். மேலும் கஞ்சா, சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    இதை ஏற்றுக்கொண்ட மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தனியாக இருந்த பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன் மீது வழக்கு போட்டு கைது செய்ததை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அறிவுடை நம்பி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் நிர்வாகிகள் பாவாணன், ஜெகன், சுபாஷ், முரளி, தமிழருவி, ஜெயசீலன், வினோத்,தமிழரசன், சுரேஷ்பாபு மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
    கடலூர்:

    கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படும்.

    அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி குறைந்துள்ளது என கண்டறியப்படும். பின்னர் அந்த பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


    சென்னையில் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை திறக்கப்பட உள்ளது. இங்கு 80 கம்பெனிகள் வர உள்ளன. இதன் மூலம் 10 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவர்.

    மேலும் பாப்ஸ்கான், மோட்டோரோலா இன்னோவா உள்ளிட்ட பல கம்பெனிகள் புதியதாக வர உள்ளன. அதன் மூலம் வருகின்ற 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விருத்தாசலம் அருகே குளத்தில் பிணமாக மிதந்த விவசாயி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கோபுராபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 40). விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்தநிலையில் அங்குள்ள குளத்தில் ஆண்பிணம் ஒன்று கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று குளத்தில் பிணமாக மிதந்த உடலை மீட்டனர். விசாரணையில் அவர் கோபுராபுரத்தை சேர்ந்த விவசாயி ரங்கசாமி என்பது தெரியவந்தது.

    அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை குளத்தில் வீசி சென்றார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிஷா (30). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் நிஷா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    பின்னர் நிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்ததகவல் நிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே உறவினர்களுடன் நிஷாவின் பெற்றோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கு நின்ற ஆம்புலன்ஸ் டிரைவரிடம் எங்களுக்கு தெரியாமல் பிணத்தை எப்படி? கொண்டு வரலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிஷாவின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நிஷாவின் பெற்றோர் எனது மகள் தற்கொலை செய்து கொள்ளமாட்டாள். அவள் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.

    உடனே போலீசார் நீங்கள் இதுகுறித்து போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் நிஷாவின் தந்தை நடேசன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே இளம்பெண் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார். விவசாயி. இவரது மகள் அம்மு(வயது22). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் எலி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அம்மு இறந்து விட்டார்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகள் சினேகா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

    காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறன் என்று கருணாகரன் ஆசை வார்த்தை கூறி சினோகாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சிவாஜிக்கு தெரிய வந்தது.

    அப்போது சினோகா நடந்த விவரத்தை தந்தையிடம் கூறி அழுதார். உடனே அவர் கருணாகரனை சந்தித்து தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு கருணாகரன் மறுத்து விட்டார்.

    இதுகுறித்து சிவாஜி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கருணாகரனை கைது செய்தார்.
    ×