என் மலர்
கோயம்புத்தூர்
- விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது
- ஐயப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார்.
கோவை:
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4½ கிலோ நகை கொள்ளை போனது. போலீஸ் விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவர் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விஜய்யின் மனைவி நர்மதாவை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விஜய் கொள்ளையடித்த நகையை குப்பை மற்றும் சாலையோரம் புதைத்து வைத்த விஜய்யின் மாமியார் யோகராணியும் கைது செய்யப்பட்டார். அவர் புதைத்து வைத்து இருந்த 4 கிலோ 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் விஜய் சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் சென்னை வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விஜய்யை கைது செய்தனர்.
அப்போது அய்யப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார். ஆனாலும் போலீசார் அவரை அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். இதையடுத்து விஜய்யை கோவைக்கு அழைத்து சென்றனர்.
- ரெயில், தண்டவாளத்தில் இருந்த இந்த கம்பியில் மோதியது தெரியவந்தது.
- போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
மதுரையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் மதுரையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு செல்கிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்தது.
பின்னர் அங்கிருந்து கேரளா நோக்கி சென்றது.
இந்த ரெயில் இரவு 8 மணியளவில் ஆனைமலை அருகே உள்ள மீனாட்சி புரம்-முதலமடை இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று தண்டவாளத்தில் ஒரு அடி உயரம் கொண்ட கம்பி கிடந்தது. அந்த கம்பியில் ரெயில் மோதியது. ரெயில் பெட்டிகளும் குலுங்கின. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர்.
ரெயிலில் இருந்து ஏதோ ஒரு சத்தம் வருவதை கேட்டதும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.
பின்னர் அவர் கீழே இறங்கி பார்த்தார். மேலும் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போத்தனூர் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது ரெயில் நின்ற இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் இரும்பால் ஆன கம்பி ஒன்று கிடந்தது. ரெயில், தண்டவாளத்தில் இருந்த இந்த கம்பியில் மோதியது தெரியவந்தது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் மூலம் ரெயில் சரி செய்யப்பட்டு 1 அரை மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கேரளா நோக்கி சென்றது. ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரி தும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தின் மீது இரும்பு கம்பியை வைத்த நபர்கள் யார்? சதிவேலையில் ஈடுபட இதனை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் அங்கு யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
பொதுவாக தண்டவாளத்தின் ஒரத்தில் தூரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஒரு கி.மீ தூரத்துக்கு ஒரு அடி உயரத்துக்கு இரும்பால் ஆன கம்பி வைக்கப்பட்டு இருக்கும்.
அந்த கம்பியை தான் யாரோ எடுத்து, ரெயில்வே தண்டவாளத்தில் வைத்துள்ளனர். அதன் மீது தான் ரெயில் மோதி உள்ளது. இந்த கம்பியை எடுத்து வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.
- போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெகமம் போலீசார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து வரும் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த முரளிகுமார்(51), ஆனைமலை அடுத்த சேத்துமடையை சேர்ந்த சுரேஷ்(29), பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ஜலீல்(46) ஆகியோர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முரளிகுமார், கோவையில் உள்ள மருந்துகடைகளில் வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதாக கூறி வாங்கி உள்ளார்.
பின்னர் அதனை சுரேஷ் மற்றும் ஜலீல் ஆகியோரிடம் கொடுத்து, நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
முரளி குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில் போதை மருந்து மாத்திரைகள், டையாஜீபம் ஊசி 10, தூக்க மாத்திரை 180, சிரிங்ச் 50, என மொத்தம் ரூ.25000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
மேலும் இவர்கள் போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.
- யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.
வால்பாறையில் இருந்து நேற்று மாலை சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை பென்னட் என்பவர் இயக்கி வந்தார். பயணிகள் 15 பேர் பயணித்தனர்.
சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.
சாலையில் யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான டிரைவர், சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை சில அடி தூரத்தில் நிறுத்தி விட்டார்.
யானை அங்கிருந்து நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
அப்போது பஸ்சில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் பஸ்சை விட்டு கீழே இறங்கி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டார். அவருடன் பயணிகளும் இணைந்து யானையை விரட்ட முயன்றனர்.
ஆனால் யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் ஓடி சென்று பஸ்சில் ஏறி கொண்டார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து சத்தம் எழுப்பினர். இதனால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, கடந்த சில தினங்களாக இங்கு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
- காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.
குனியமுத்தூர்:
கோவை பாலக்காடு ரோடு திருமலையாம் பாளையம் பிரிவு அருகே கியாஸ் நிரப்பப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கக்கூடிய பார்க்கிங் பகுதி ஒன்று உள்ளது.
இங்கு எந்த நேரமும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சற்று நேரம் இளைப்பாரி விட்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை லாரிகள் நிற்கும் பார்க்கிங் பகுதியில், பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் மலையில் இடிந்து விழுந்தது.
அதில் ஒரு செங்கல் கியாஸ், நிரப்பப்பட்ட லாரியின் வால்வு பகுதியில் விழுந்ததால், அந்த வால்வு உடைந்தது. இதனால் அதில் இருந்து கியாஸ் கசிய ஆரம்பித்தது.
இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சற்று அச்சம் அடைந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து கியாஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கியாஸ் கசிவை நிறுத்தி சீராக்கினார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இது மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இல்லை என்றால் மூச்சு திணறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.
இதுதவிர கியாஸ் கசிவு காரணமாக ஒருவேளை தீப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
- தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று காலை சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
இந்த மழைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் அதிகமான குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மருதூர் ஊராட்சிக்குட்பட்ட ஏழு சுழி தடுப்பணையில் அணை நிரம்பி, கசிவு ஏற்பட்டது. இதையறிந்ததும் மருதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு கருதி அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக 50-க்கும் அதிகமான சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கி அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு மீண்டும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சியில் கொட்டிய கனமழைக்கு இரும்பறை முதல் சிறுமுகை செல்லும் சாலையில் மேடூர் என்ற பகுதியில் மழைநீர் கடல் நீரை போல சாலைகள் தெரியாத அளவுக்கு மூழ்கடித்தபடி சென்றது.
இந்த சாலையினை 50 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இலுப்பநத்தம் ஊராட்சியில் உள்ள அன்னதாசம்பாளையம் கிராமத்தில் பெய்த மழைக்கு அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார், தாமோதரன் ஆகியோர் பயிரிட்டிருந்த 10 ஏக்கர் அளவிலான வாழை பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது.
சில வாழைகள் தண்ணீரிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கனமழைக்கு அண்ணாநகர் சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மிதந்தன. தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மக்கள் வீட்டில் உள்ள வாளி, பாத்திரங்களை வைத்து, வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 40 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே இரும்பறை முதல் சிறுமுகை சாலையில் மேடூர் என்ற இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், கணபதி, ரெயில் நிலையம், டவுன்ஹால், உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்தி பார்க், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டியது.
இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
பீளமேடு பகுதியில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், சில இடங்களில் தேங்கியும் நின்றது.
கனமழைக்கு நஞ்சுண்டாபுரம் ராமலிங்கம் ஜோதிநகர், சுங்கம் சிவராம் நகர், பீளமேடு வரதராஜபுரம், சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
நள்ளிரவில் கொட்டிய கனமழையால் உடையாம்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள பொருட்கள் தண்ணீரில் மிதந்தன.
நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை இருந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, அங்கிருந்த மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் உடையாம்பாளையம் கக்கன் நகர் பகுதியில் கார் ஒன்று மழைவெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதில் 3 பேர் சிக்கியிருந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு பகுதியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
- நீலகவுண்டன்புதூரில் உள்ள குளத்தின் தடுப்பணையில் மழைநீரானது வழிந்தோடியது.
- செங்கப்பள்ளி வழியாக அவினாசி வட்டம், ராமநாதபுரம் வழியாக அவினாசி தாமரை குளத்திற்கு செல்லும்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.
மழையால் பல இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவுள்ள எருக்கன்குளம் உள்ளது.
கொட்டி தீர்த்த கனமழையால் இந்த குளம் 47 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக நிரம்பியது.
அதனால் நீலகவுண்டன்புதூரில் உள்ள குளத்தின் தடுப்பணையில் மழைநீரானது வழிந்தோடியது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இணைந்து கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து தடுப்பணைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிந்தோடிய மழைநீரில் வெற்றிலை, பாக்கு, பூ வைத்தும், குளத்தில் உள்ள மழைநீரில் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.
வழிந்தோடும் மழைநீரானது தடையில்லாமல் செல்வதற்காக ஊராட்சி நிர்வாகம் அந்த நீர்வழிப்பாதைகளில் உள்ள செடிகளை அகற்றினர். செங்கப்பள்ளி வழியாக அவினாசி வட்டம், ராமநாதபுரம் வழியாக அவினாசி தாமரை குளத்திற்கு செல்லும்.
ஓட்டர்பாளையம் ஊராட்சியில் 65 ஏக்கர் பரப்பளவுள்ள பூலுவபாளையம் குளம் 90 சதவீதம் நிரம்பியுள்ளது.
- வால்வு உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவை கட்டுப்படுத்த ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயு உடன் நின்றிருந்த லாரி மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. வால்வு உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவை கட்டுப்படுத்த ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
அப்பகுதியில் லாரியை சுற்றி 500 மீட்டர் தொலைவு வரை தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
- கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது.
கோவை:
கோவை கருமத்தம்பட் டியை சேர்ந்தவர் தாரணி (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் ஆனது. சுரேஷ்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார்.
இதையடுத்து திருமணம் ஆனதும், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சுரேஷ்குமார் அமெரிக்கா சென்றார். அங்கு 2 பேரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தாரணிக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாரணி அமெரிக்காவில் இருந்து தனது சொந்த ஊரான கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு வந்தார்.
இங்கு தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இங்கிருந்தபடியே தனது உடல்நலன் பாதிப்புக்கு சித்தாபுதூரில் உள்ள சித்தா மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் தனது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தனது பெற்றோரிடம் சென்னியாண்டவர் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். கோவிலுக்கு சென்றும் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது. அதனை அவர்கள் எடுத்தனர். இதுகுறித்து தாரணியின் தாய் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் அந்த வழக்கை கைவிட்டு விட்ட னர்.
இந்த நிலையில், தாரணியின் தாய் சாந்தாமணி, தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரியும், இந்த வழக்கினை கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மாயமான பெண் வழக்கினை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண்ணை தேடும் பணியை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கினர்.
கோவை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சிவக்குமார் மேற்பார்வையில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இளம்பெண்ணின் கணவர், கோவில் பூசாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவாகி இருந்த காட்சிகளை கேட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போன பெண்களின் விவரங்களை கேட்டும் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
- இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
கோவை:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, அரவேணு, அருவங்காடு, பர்லியார், காந்தல், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் வேறு வழியின்றி, மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர்.
இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிளாஸ்டிக் கவரினை அணிந்தபடி தேயிலை பறிப்பில் ஈடுபட்டனர். மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பெரும்பாலானவா்கள் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்தவாறு வெளியில் நடமாடினர். வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே வாகனத்தை இயக்கி சென்றனர்.
கோத்தகிரியில் 9 மி.மீட்டர் மழையும், கொடநாட்டில் 2 மி.மீ, கீழ்கோத்தகிரியில் 69 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்றும் வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வெயில் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவியது.
இன்று காலை முதல் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
வால்பாறையில் நேற்று இரவு நேரத்தில் வால்பாறை, அக்காமலை, பச்சமலை, நடுமலை, கருமலை, கவர்கள், சோலையார் அணை, முடீஷ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தோட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி சின்கோனாவில் 31 மில்லி மீட்டர் மழையும்,சின்னக்கல்லார் 16 மில்லிமீட்டர் மழையும், வால்பாறையில் 19 மில்லி மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர். குடைபிடித்தபடி அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை:
கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
தடையையும் மீறி இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கோவையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை போலீசார் பீளமேடு பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள்.
கோவை:
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. 1 அரை லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, 1 டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3 ஆயிரம் மெழுகுவர்த்தி, 13 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
இவை அனைத்தும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் லாரி மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை கொண்ட தனி விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை சென்றதும் அங்கு மண்டலவாரியாக பிரித்து சரியான முறையில் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






