என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மக்கள் மற்றும் விவசாயிகள் காட்டு யானைகளை சாமி என்று அழைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
    • யானை சென்ற பின்னர் விவசாயி மணி தனது வழக்கமான வேலைகளை தொடர்ந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டி பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

    இதனால் அவ்வப்போது காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    இருந்த போதிலும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் காட்டு யானைகளை சாமி என்று அழைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    தேக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி. இவருக்கு அங்குள்ள வனப்பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளது. இங்கு பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    நேற்று காலை மணியும், அவரது மனைவியும் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்தை விட்டு வெளியில் வந்த ஒற்றை காட்டு யானை, மணியின் விவசாய நிலத்தை நோக்கி வேகமாக வந்தது.

    வந்த வேகத்தில் விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றது. இதை பார்த்ததும் விவசாயி மணியும், அவரது மனைவியும் அச்சப்பட்டனர்.

    இருந்த போதிலும் யானை சொன்னால் கேட்டுக்கொள்ளும் என நினைத்து, யானையை அன்போடும், பாசத்தோடும், ஒரு சகோதரன், நண்பனை அழைப்பது போல போ சாமி போ, அதே தான் பார்த்து போன பாசத்துடன் 2 பேரும் கூறினர்.

    இதை கேட்ட யானை விளை நிலத்திற்குள் நுழையவில்லை. மாறாக தனது வழித்தடத்தை மாற்றி அருகில் இருந்த நீரோடை பகுதி வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    யானை சென்ற பின்னர் விவசாயி மணி தனது வழக்கமான வேலைகளை தொடர்ந்தார்.

    விளை நிலத்தில் பயிர்களை உட்கொள்ள வந்த ஒற்றை காட்டு யானையை பாசத்துடன் விவசாயி பேசியே வழியனுப்பி வைத்த நிகழ்வு விவசாயிகளுக்கும், யானைகளுக்குமான நட்புறவை உணர்த்துவதாக அமைந்தது.

    இதனை அந்த பகுதியில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.



    • தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்களிடம் மனுக்கள் வாங்கிய 30 நாட்களுக்குள் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பது தான் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கம்.

    இதற்காக அன்று காலை 9.10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வருகிறார்.

    விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சர் அங்கிருந்து காரில் கோவை நவ இந்தியாவில் உள்ள கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார்.

    அங்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மனு வாங்கப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை மக்களுக்கு வழங்குகிறார்.


    அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, காரில் கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதான பகுதிக்கு வருகிறார்.

    அங்கு கோவை மத்திய ஜெயில் பகுதியில் அமைய உள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார்.

    செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்தில் நடக்க உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் மேடை, பந்தல், இருக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவை-அவினாசி சாலை, நவ இந்தியா பகுதி, காந்திபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகளும் நடக்கின்றன. கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையோரம் இருந்த புற்கள், செடி, கொடிகளை அப்புறப்படுத்தியும், சாலைளிலும் ஆங்காங்கே இருந்த பள்ளங்களும் மூடப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.
    • முகாம்களில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவை:

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கி அனைத்து மனுக்களுக்கும் 100 நாளில் தீர்வு கண்டு சாதனை படைத்தார்.

    அதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை திறம்பட கையாண்டு அவற்றை நிறைவேற்றிடும் வகையில், முதல்வரின் முகவரி துறை என்ற தனித்துறையை உருவாக்க உத்தரவிட்டார்.

    இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    தற்போது திராவிட மாடல் ஆட்சியில் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே பொதுமக்களின் பிரச்சனையை குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பது தான். அதாவது மனுக்கள் வாங்கப்பட்டு 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும்.

    இந்த உன்னதமான திட்டத்தின் தொடக்க விழா கோவை மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உள்ள அரங்கில் நடைபெற உள்ள இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு,குறு, நடுத்தர தொழில்கள் போன்ற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பெறுவதற்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

    முதற்கட்டமாக வருகிற 18-ந்தேதி முதல் வருகிற ஜனவரி 6-ந்தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,745 முகாம்கள் நடத்தப்படும்.

    இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடிவுற்றவுடன், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 31-ந்தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து மனுக்களை பெற வசதியாக இருக்கைகள் போடப்பட்டு இருந்த காட்சி.


    மக்களுடன் முதல்வர் திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் நடத்தப்படும். இந்த முகாம்கள் முடிவடைந்த பின்னர், அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும்.

    இந்த முகாம்களில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அனைவரும் ஒரே குடையின் கீழ் மக்களின் கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள்.

    முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

    முதலமைச்சர் இந்த திட்டத்தை கோவையில் தொடங்கி வைக்க கூடிய அதே நேரத்தில் அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் இந்த முகாம்களை தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த முகாம்களில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளை பெற்றுக்கொள்ளவும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும், எளிதாகவும் உரிய முறையில் தீர்வு காணவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    • மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர்.
    • விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன்.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் (வயது 30). இவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிப்பை ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் ஆசிப் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று ஜெயில் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயில் அலுவலர் சிவராசன் தலைமையில் போலீசார் ஜெயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆசிப், போலீசாரை சோதனை செய்யவிடாமல் தடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அறை முழுவதும் சோதனை செய்தனர்.

    ஆசிப்பின் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில் கருப்பு மையால் ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டு இருந்தது. அந்த கொடியை ஆசிப்பே வரைந்து வைத்திருந்தார். இதனை போலீசார் கைப்பற்றினர்.

    அப்போது ஆசிப் உங்கள் நாட்டு தேசிய கொடியை நீங்கள் வைத்துள்ளீர்கள். எனக்கு விருப்பமான கொடியை நான் வைத்து உள்ளேன். இதனை எதற்காக எடுத்து செல்கிறீர்கள், கொடியை திருப்பி தரவில்லை என்றால் கட்டாயம் இதற்கு பதில் சொல்ல நேரிடும் என மிரட்டல் விடுத்தார். விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த ஜெயிலும் இருக்காது என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஜெயில் அலுவலர் சிவராசன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை.
    • கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    கோவை:

    தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவம் மன வருத்தம் அளிக்கிறது. அங்கு ரத்தம் சிந்தி இருக்கிறது. வைகுண்ட ஏகாதசி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

    ரத்தம் சிந்தும் அளவிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து இருப்பது, பாதுகாப்பு சீர்கேடுகளை காட்டுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். வேறு மாநிலத்தவர்கள் நம் கோவிலுக்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் கடமை.

    பெரியாரை, தேசிய விரோத கருத்துகளை பகிர்வதற்கு கேடயமாக தி.மு.க.வினர் பயன்படுத்துகின்றனர். பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை. பெரியாரின் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்வோம் என முதலமைச்சர் தெரிவிக்கின்றார். பெண்களுக்கு உரிமை கொடுக்கும் ஆட்சிதான் மத்தியில் இப்போது நடக்கின்றது. தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தாரை வார்த்ததை மத்திய அரசு மீட்டு எடுத்து கொண்டு வருகின்றது. காஷ்மீர், கவர்னர், கட்சத்தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது செய்யாத விஷயங்களை இப்போது தி.மு.க. பேசிக்கொண்டு இருக்கிறது.

    கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். கேரள கவர்னர் மீது தாக்குதல் முயற்சி வன்மையாக கண்டிக்கதக்கது.


    மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு உதயநிதி வார்த்தைகளை அடக்கி பேச வேண்டும். அடக்கவில்லை என்றால் அவர் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியிலும், மற்ற இடங்களிலும் வருவார்.

    கலைஞரின் பேரனா நீங்க? அவர் இப்படியா பேசினார்? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் திட்டுவார். தி.மு.க. யாரோட அப்பன் வீட்டு சொத்து. தி.மு.க. தொண்டர்கள் முதலில் இதை உதயநிதியிடம் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு அவரே வழி செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
    • தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    கோவை:

    கோவை நகரில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், முத்தணன் குளம், உக்கடம் பெரிய குளம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    செயற்கை நீரூற்றுகள், பிரமாண்ட டவர்கள், பொம்மை சிற்பங்கள், குளத்துக்குள் நடைபாதை, படகு சவாரி என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    சமீபத்தில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களை தேர்வு செய்து விருது வழங்கியது. அதில் பில்ட் என் விரான்மென்ட் என்ற தலைப்பில் கோவைக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கோவையில் வருகிற 16-ந் தேதி தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    அதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 150 நகரைச் சேர்ந்த மேயர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் கமிஷனர்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம் கருத்தரங்கு முடிந்ததும் உக்கடம் பெரியகுளத்தில் அமைந்துள்ள அனுபவ மையம் மற்றும் ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், வாலாங்குளத்தில் மேம்பாலத்துக்கு கீழ் அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலையை அக்குழுவினர் சுற்றி பார்க்கிறார்கள்.

    இதையொட்டி ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்வதற்கு உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் கொண்ட குழு நியமித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    • கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை:

    மதுரையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். திருமணம் ஆனவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் கோவைக்கு வேலைக்கு வந்தபோது சிங்காநல்லூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கதிர்வேல் (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண் கணவரை பிரிந்து கதிர்வேலுடன் வந்து குடும்பம் நடத்தினார். சிங்காநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

    அதன்பின்னர் இளம்பெண்ணுக்கு மதுரையை சேர்ந்த கூலித் தொழிலாளி பாக்கியராஜ் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கதிர்வேல் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண், பாக்கியராஜை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் கதிர்வேலுக்கு தெரியவரவே அவர் இளம்பெண்ணை கண்டித்தார்.

    இதனால் இளம்பெண் கதிர்வேலுவை பிரிந்து பாக்கியராஜூடன் சென்றார். அந்த பெண்ணும், பாக்கியராஜூவும் ஆனையங்காடு வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கதிர்வேலை பார்க்கும்போது உன் காதலி என்னுடன் தான் உள்ளார் என பாக்கியராஜ் ஏளமாக பேசி வந்துள்ளார். இதனால் கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு பாக்கியராஜூவும், அவரது கள்ளக்காதலியும் வீட்டில் அமர்ந்து மதுகுடித்துக் கொண்டு இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த போது வீட்டிற்குள் கதிர்வேல் அத்துமீறி நுழைந்தார். அவரும் மதுபோதையில் இருந்தார். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு பாக்கியராஜ் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல், பாக்கியராஜை கீழே தள்ளினார். நிலை தடுமாறி கீழே விழுந்த போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் கதிர்வேல் அங்கு இருந்த மின்சார டெஸ்டர் கம்பியை எடுத்து பாக்கியராஜின் கழுத்தில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கதிர்வேல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொலை செய்யப்பட்ட பாக்கியராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாக்கியராஜை குத்தி கொலை செய்த கதிர்வேலுவை கைது செய்தனர்.

    • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

    சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

    இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 2021 நவம்பர் 22-ந்தேதி நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

    சிறையை வேறு இடத்துக்கு மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால் செம்மொழி பூங்கா திட்டத்தை பேஸ்-1, பேஸ்-2 என பிரித்து முதல்கட்டமாக சிறைத்துறை வழங்கிய 41 ஏக்கர் நிலத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.172 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

    இதைத்தொடர்ந்து காந்திபுரம் மத்திய சிறை அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 18-ந் தேதி கோவையில் நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் எஸ்.என்.ஆர். கல்லூரியில் நடைபெறும் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அன்றைய தினம் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு கோவைக்கு வருகிறார். நிகழ்ச்சிகள் முடிந்து அன்று பிற்பகல் 2.10 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். மேலும் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக கேரளாவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி ஜனனி பிரியா தலைமையில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு போலி மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படும் எரி சாராயம் உள்பட அனைத்து உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வீட்டில் இருந்த கேரளாவை சேர்ந்த அருண் (29), சந்தோஷ்குமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண் என்பவர், தனது நண்பரான அனில்குமார் (50) என்பவருடன் சேர்ந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை வந்தார்.

    பின்னர் காரமடை அருகே உள்ள செந்தூர் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். அடிக்கடி இவர்கள் வெளியில் சென்று விடுவதால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் வரவே அவர் அவர்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் கேரளாவில் வியாபாரம் செய்து வருகிறோம். அதனால் வாரத்தில் 2-3 நாட்கள் அங்கு சென்று விடுவோம் என தெரிவித்துள்ளனர். அவரும் அதனை நம்பி விட்டார்.

    இதனை தொடர்ந்து, அவர்கள் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக அவர்கள் கேரளாவில் இருந்து எரிசாராயம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளனர்.

    மதுபானம் தயாரித்த பின்னர் அந்த பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஓட்டி, மதுக்கடைகளில் பெட்டிகளில் அடுக்கி வைப்பது போன்று, பெட்டிகளை வாங்கி அதில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து கேரளாவுக்கு அனுப்பி விற்பனை செய்ததும், இவர்களுக்கு சந்தோஷ் உதவியாக இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், வீட்டில் இருந்த 1600 போலி மதுபான பாட்டில்கள், தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களில் இருந்த 175 லிட்டர் எரிசாராயம், மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த உபகரணங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இதில் தொடர்புடைய அனில்குமார் என்பவரை தேடி வந்தனர். அப்போது, அவர் ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தது தெரியவந்தது.

    மேலும் விடுதலையான பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான், காரமடை அருகே போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்த தகவல் தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×