என் மலர்
கோயம்புத்தூர்
- கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உளவுப்பிரிவுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- கடந்த 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேரின் சுயவிவரங்கள் மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
கோவை:
கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகிய உளவுப்பிரிவுகள் உள்ளன.
மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் இப்பிரிவுக்கென தனி காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் தொடர்பாக களத்துக்கு சென்று தகவல்களை சேகரித்து போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உளவுப்பிரிவுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் உளவுப்பிரிவுகளின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யும் வகையிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்கவும், வி.ஐ.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தனியார் உதவியுடன் மாநகர போலீஸ் துறை சார்பில் ஆக்டோபஸ் என்ற பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மென்பொருள் மூலம் 1000 பேரின் சுயவிவரங்கள் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த மென்பொருள் மூலம் மிக முக்கிய நபர்கள், அவர்களின் புகைப்படங்கள், குடியிருப்பு விவரங்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கையாகும்.
அதேபோல் மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்கள் வாரியாக உள்ள கல்லூரிகள், அரசு, தனியார் பள்ளிகள், பெட்டிக்கடைகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களின் எண்ணிக்கை விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 200 பேரின் சுய விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து அப்டேட் செய்து வருகிறோம். அதன்படி கடந்த 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேரின் சுயவிவரங்கள் இந்த மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதில் உள்ள விவரங்களை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்கள் பார்க்கலாம். இதற்காக ரூ.10 லட்சம் செலவு செய்து பிரத்யேக சர்வர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக்டோபஸ் மென்பொருளில் உள்ள ஆவணங்கள் உளவுத்துறை தகவல்களை சரி பார்க்க அதிகாரிகளுக்கு உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
- பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
கோவை:
தமிழகத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான தொடக்க விழா கோவையில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி எஸ்.என்.ஆர் கல்லூரி, கருமத்தம் பட்டி கொங்கு வேளாளர் திருமண மண்டபம், பேரூர் ராமலிங்கஅடிகளார் அரங்கம், மலுமிச்சம்பட்டி திவ்யம் மகால் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது பொதுமக்கள் திரண்டுவந்து கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு சென்றனர். அந்த வகையில் மட்டும் 1026 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதுதவிர மற்ற அரசுத்துறைகள் தொடர்பான 1284 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன. அவை தற்போது முதல்வரின் முகவரி துறையின்கீழ் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.
கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாயிலாக கடந்த 18-ந்தேதி மட்டும் 2310 கோரிக்கை மனுக்கள் குவிந்து உள்ளன. அவை உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டலம் வடவள்ளி காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபம், வடக்கு மண்டலம் சரவணம்பட்டி சமுதாயக்கூடம், மத்திய மண்டலம் செம்பட்டி காலனி மாநகராட்சி பள்ளி, கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர் திருமண மண்டபம், பொள்ளாச்சி நகராட்சி மகால், காரமடை மேட்டுப்பாளையம் சிவன்புரம் காலனி கொங்கு மகால் மற்றும் அன்னூர், கிணத்துக்கடவு, ஆனைமலை டவுன் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் பொதுமக்களிடம் இருந்து 1579 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதுதவிர முதல்வ ரின் முகவரி துறைக்கு வந்திருந்த 816 மனுக்களையும் சேர்த்து மொத்தம் 2396 கோரிக்கை மனுக்கள் வந்து சேர்ந்து உள்ளன.
கோவை மாவட்டத்தில் கடந்த 18, 19-ந்தேதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில் மட்டும், பொதுமக்களிடம் இருந்து 4705 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று உள்ளன.
இதுதொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 18-ந்தேதி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் 2310 கோரிக்கை மனுக்கள் கிடைக்கப்பெற்று உள்ளன. அதேபோல நேற்று நடந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு 2395 மனுக்களை அளித்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களின் வாயி =லாக 4705 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
இதுதவிர் சிறப்பு முகாம்கள் நடக்கும் பகுதியில் இ-சேவை மையம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தேவையான ஆவணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு 13 அரசு துறைகளுடன் தொடர்புடைய 52 விதமான சேவைகளை உடனடியாக பெற இயலும். மேலும் பொது மக்கள் அளிக்கும் மனுக்களில் தகுதியான விண்ணப்பங்களுக்கு 30 நாட்களில் தீர்வு பெற்றுதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதிவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- மலைரெயில், அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.
- அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்களுடன் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மலைப்பாதை மட்டுமல்லாமல், மலை ரெயில் பாதையிலும் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
மழை ஒய்ந்த பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் ரெயிலில் பயணித்து வந்தனர்.
வழக்கம் போல இன்று காலை 7.10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது.
மலைரெயில் கல்லார்-ஹில்குரோவ் இடையே சென்ற போது தண்டவாள பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது.
இதை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர், ரெயிலை சில அடி தூரத்திற்கு முன்பு நிறுத்தி விட்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்களுடன் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மலைரெயில், அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.
சுற்றுலா பயணிகள் அங்கிருந்து பஸ் மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இன்று மட்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது.
- கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.
கோவை:
கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது.
இதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசும்போது, கோவையில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
தொடர்ந்து கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவுகூறும் வகையில் பிரத்யேக நடைபாதை, கூட்ட அரங்கு உள்ளிட்ட அம்சங்களுடன், கோவை மாநகரில் தற்போது முதல்கட்டமாக ரூ.133 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப்பூங்கா அமைய உள்ளது.

செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல்லை நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைத்தார்.
செம்மொழி பூங்காவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது தொடர்பாக, கோவை மாவட்ட தோட்டக்க லைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கையை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மேலாண்மையை நிலைநிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும்.
செம்மொழி பூங்காவில் பிரத்யேக அம்சமாக செம்மொழிவனம், மக ரந்தவனம், மூலிகைவனம், நீர்வனம், நட்சத்திரவனம், நலம்தரும்வனம், நறுமணவனம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மேலும் நீலகிரி தாவரவியல் பூங்கா போல செம்மொழி பூங்காவிலும் ரோஜாத்தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர செம்மொழி பூங்காவில் இயற்கை அருங்காட்சியகம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், 1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், நர்சரி தோட்டம், பாறைத்தோட்டம், பல்லடுக்கு வாகனநிறுத்தம் ஆகிய அம்சங்களும் இடம்பெற உள்ளன.
அடுத்த சில ஆண்டுகளில் கோவை செம்மொழி பூங்காவை 2-வது கட்டமாக மேலும் 120 ஏக்கர் பரப்பளவில் விஸ்தரிப்பது எனவும் திட்டமிட்டு உள்ளோம்.
இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ பூங்கா, உலகின் முதல் தாவர உயிரியல் வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகும். அதன்பிறகு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதல்முறையாக கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.
மேலும் கோவை மாநகரின் தனித்துவ அடையாளமாக செம்மொழி பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழகஅரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செம்மொழி பூங்கா பணிகள் நிறைவுறும் போது அது கோவையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்பதில் அய்யமில்லை.
- மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க முடிவு.
- பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, கோவையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதற்கிகடையே, மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கவும், தென் மாவட்ட மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குடிநீர் பாசன ஆதாரங்களை மேம்படுத்துவது தான் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டமாகும்.
- கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரி:
தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே காவிரி உமிழ்நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்று விட்டது. நிலத்தடி நீர் இல்லாததால் 4.50 லட்சம் எக்டேர் விவசாயம் அழியும் தருவாயில் இருக்கிறது. இதனால் தருமபுரி மாவட்டம் வழியாக ஓடும் காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 50 முதல் 100 டிஎம்சி தண்ணீர் உபரிநீராக கடலில் கலக்கிறது. அதில் 3 டிஎம்சி நீரை பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பாசன ஆதாரங்களை மேம்படுத்துவது தான் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டமாகும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும் 15 லட்சம் மக்களுக்கு புளோரைடு பாதிப்பு இல்லாத குடிநீர் கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் இருக்கும் கிணறுகளில் 50 அடிக்கும் ஆழ்துளை கிணறுகளில் 100 அடிக்கும் நீர்மட்டம் உயரும். ஆனால் மேற்கில் காவிரியும் வடக்கில் தென்பெண்ணை யாரும் ஓடிய போதிலும் குடிப்பதற்கும் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லாமல் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அவதி அடைகின்றனர்.

எனவே, தருமபுரியில் காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பா.ம.க. சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்த கோரி தருமபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் மக்கள் திரள் போராட்டம் இன்று காலை 11 மணிக்கு தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பா.ம.க. தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. வரவேற்றார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் வரவேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி பா.ம.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன், மேற்கு மாவட்ட தலைவர் செல்வ குமார், கிழக்கு மாவட்ட தலைவர் அல்லிமுத்து, சத்தியமூர்த்தி, பாடி செல்வம், சண்முகம், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மற்றும் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ம.க.வினர் கலெக்டர் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- 4 மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று வரை நீடித்தது.
இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுத்து வரும் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
- சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை:
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
* மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென் மாவட்ட மக்களை காப்போம்.
* மீட்பு பணி தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.
* தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது.
* தற்போது தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
* சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* அரசின் சேவைகளை எளிதில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு மக்களுடன் முதல்வர் திட்டம் உதவியாக இருக்கும்.
* முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
* மக்களுடன் முதல்வர் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.
* மக்கள் அடிக்கடி அணுகும் துறைகளாக 13 துறைகள் கண்டறியப்பட்டு அதன் வாயிலாக தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவை மாநகராட்சி 27 மற்றும் 28-வது வார்டு பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
- மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார்.
கோவை:
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கோவை மாநகராட்சி 27 மற்றும் 28-வது வார்டு பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார்.
இந்த விழா முடிந்ததும் எஸ்.என்.ஆர் கல்லூரியில் இருந்து கார் மூலமாக காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்துக்கு செல்கிறார். அங்கு மாநகராட்சி சார்பில் 47 ஏக்கர் பரப்பளவில் ரூ.133.21 கோடி மதிப்பில் அமைய உள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்கும் எஸ்.என்.ஆர் கல்லூரி பகுதி, காந்திபுரம் நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை உள்பட அனைத்து பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் விழா நடைபெறும் இடங்கள், முக்கிய பகுதிகளில் சோதனையும் மேற்கொண்டனர்.
- கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.
- முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை இன்று கோவையில் தொடங்கி வைத்தார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த அதே விமானத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் வந்தார். அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் திருச்செங்கோடு சென்றார்.
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அந்த கருத்துக்களுக்கு முதலமைச்சரும், தி.மு.க அமைச்சர்களும் பதில் கருத்துக்களையும் கொடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து கோர்ட்டு கருத்து தெரிவித்தன் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் தான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் இருந்து கோவைக்கு ஒரே விமானத்தில் இன்று வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.
- தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிங்கோனா எஸ்டேட் பகுதியில் அந்த யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி திரிகிறது. அவற்றை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை கடந்த சில நாட்களாக சின்கோனா பகுதியில் சுற்றி திரிகிறது. அது இரவுநேரத்தில் பஸ்சை வழிமறிப்பதும், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவதுமாக அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் சின்கோனா- பெரியகல்லார் சாலையில் நேற்று மதியம் ஒற்றை காட்டுயானை பட்டப்பகலில் உலா வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேயிலை பறிக்கும் தொழி லாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடம் தேடி தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே காட்டு யானை நடமாட்டம் பற்றி தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வால்பாறை சின்கோனா ரோட்டில் ஒற்றை காட்டு யானை பட்டப்பகலில் நடந்துசென்ற சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கோவை:
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.
கோவையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டு வரும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மைதானத்துக்கு செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டை நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அவர் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை 9.20 மணிக்கு கோவை வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் வந்து செல்லும் இடங்களில் திரளாக கூடி நின்று வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் செம்மொழி பூங்கா நடைபெறும் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை போலீசாருடன் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.






