search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையின் மற்றொரு அடையாளமாகும் செம்மொழி பூங்கா
    X

    கோவையின் மற்றொரு அடையாளமாகும் செம்மொழி பூங்கா

    • கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது.
    • கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    கோவை:

    கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

    இதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசும்போது, கோவையில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

    தொடர்ந்து கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவுகூறும் வகையில் பிரத்யேக நடைபாதை, கூட்ட அரங்கு உள்ளிட்ட அம்சங்களுடன், கோவை மாநகரில் தற்போது முதல்கட்டமாக ரூ.133 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப்பூங்கா அமைய உள்ளது.


    செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல்லை நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைத்தார்.

    செம்மொழி பூங்காவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது தொடர்பாக, கோவை மாவட்ட தோட்டக்க லைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கையை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மேலாண்மையை நிலைநிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும்.

    செம்மொழி பூங்காவில் பிரத்யேக அம்சமாக செம்மொழிவனம், மக ரந்தவனம், மூலிகைவனம், நீர்வனம், நட்சத்திரவனம், நலம்தரும்வனம், நறுமணவனம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மேலும் நீலகிரி தாவரவியல் பூங்கா போல செம்மொழி பூங்காவிலும் ரோஜாத்தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதுதவிர செம்மொழி பூங்காவில் இயற்கை அருங்காட்சியகம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், 1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், நர்சரி தோட்டம், பாறைத்தோட்டம், பல்லடுக்கு வாகனநிறுத்தம் ஆகிய அம்சங்களும் இடம்பெற உள்ளன.

    அடுத்த சில ஆண்டுகளில் கோவை செம்மொழி பூங்காவை 2-வது கட்டமாக மேலும் 120 ஏக்கர் பரப்பளவில் விஸ்தரிப்பது எனவும் திட்டமிட்டு உள்ளோம்.

    இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ பூங்கா, உலகின் முதல் தாவர உயிரியல் வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகும். அதன்பிறகு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதல்முறையாக கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    மேலும் கோவை மாநகரின் தனித்துவ அடையாளமாக செம்மொழி பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழகஅரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    செம்மொழி பூங்கா பணிகள் நிறைவுறும் போது அது கோவையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்பதில் அய்யமில்லை.

    Next Story
    ×