என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால் விபத்து நடந்திருக்காது.

    கோவை:

    சில ரகசியங்களை வெளியிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்ல நேரிடும் என நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * ஓ.பன்னீர் செல்வம் சிறைக்கு செல்வது உறுதியாகிவிட்டது. அவர் மீதான வழக்கை விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.

    * ஜெயலலிதாவிற்கு ரூ.2 கோடி கடன் கொடுத்ததாக ஓபிஎஸ் சொன்னது, மோசமான வார்த்தை.

    * போடி தொகுதியில் ஜெயலலிதாவிற்கு எதிராக வேலை பார்த்தவர் ஓபிஎஸ்.

    * தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துச் சொன்னது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம்.


    * வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால் விபத்து நடந்திருக்காது.

    * எண்ணூரில் எண்ணெய் மற்றும் வாயுக்கசிவால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வந்தே பாரத் ரெயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறைந்து விடும்.
    • ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது. இதுவரை இந்தியா முழுவதும் 35 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் கோவை-சென்னை இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நெல்லை-சென்னை இடையேயும் ரெயில் இயக்கப்படுகிறது.

    கோவை-சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதை போன்று, கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று தற்போது கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்தபடி காணொலி வாயிலாக கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    கோவையில் இருந்து புறப்படும் ரெயில் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்கிறது. கோவையில் இருந்து பெங்களூரு 380 கி.மீ தூரத்தில் உள்ளது. சாதாரண ரெயில்களில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 7 மணி நேரம் வரை ஆகும்.

    இந்த வந்தே பாரத் ரெயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறைந்து விடும். அதன்படி 5 மணி 40 நிமிடத்தில் ரெயில் பெங்களூருவுக்கு சென்றுவிடும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வந்தே பாரத் ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 32 இருக்கைகள் கொண்ட ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், தலா 72 இருக்கைகள் கொண்ட 5 ஏ.சி. சேர் கார் பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    இதுதவிர என்ஜினுடன் இணைந்த வகையில் மேலும் 2 ஏ.சி. சேர் கார் பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 40 இருக்கைகள் உள்ளது.

    இந்த ரெயிலில் உணவு, ஸ்நாக்ஸ் (நொறுக்குத்தீனி) உடன் கூடிய ஏ.சி. சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1000-ம் ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் ரூ.1,850 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் சேவை 30-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும், இதன் தொடர் சேவையானது ஜனவரி 1-ந் தேதி முதல் கோவையில் இருந்து இயக்கப்படும்.

    காலை 6.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரெயில், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரை சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. இதற்காக நேற்று கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரெயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இதில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.

    கோவையில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் காலை 7.40 மணிக்கு ஓமலூர் ரெயில் நிலையத்திலும், 8.30 மணிக்கு தருமபுரியிலும், 10.03 மணிக்கு ஓசூர் ரெயில் நிலையத்திற்கும் சென்று, அதன்பின்னர் 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அறிந்து கோவை மக்களும், தொழில் முனைவோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது.
    • புத்தாண்டு அன்று இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்தக்கூடாது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி பல்வேறு ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவை அமைந்து உள்ளன. இங்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    எனவே கோவையின் வனப்பகுதியை ஒட்டிய விடுதிகளில் தங்கியிருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புத்தாண்டு கொண்டாட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அவர்கள் அங்குள்ள ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்யத்தொடங்கி உள்ளனர். இதனால் கோவையின் வனப்பகுதியை ஓட்டி அமைந்து உள்ள ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன.

    இதற்கிடையே கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    அதன்படி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள், நடத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும்வகையில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

    விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளை நிகழ்த்தக்கூடாது. கேம்ப் பயர் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மேலும் வாகனங்களில் அதிக ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. மது குடித்துவிட்டு வனப்பகுதியில் வாகனங்களை இயக்கக்கூடாது. மேலும் புத்தாண்டு அன்று இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்தக்கூடாது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வீணாகும் உணவுப்பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் கொட்டக்கூடாது. தங்கும் விடுதிகளுக்கு அருகில் வன விலங்குகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக விரட்ட முயலாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவையின் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள விடுதி உரிமையானர்கள் மேற்கண்ட அறிவிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட விடுதிகளின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இது வனப்பகுதியை ஒட்டி புத்தாண்டு கொண்டாடுவதற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க.வுடன் நான் கூட்டு என சொல்பவர்கள் முட்டாள்கள்.
    • சிறப்பான ஆட்சி செய்யும் மோடியே பிரதமராக தொடர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    கோவை:

    சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ஜன.19-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் தான் பொதுக்குழு தீர்மானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வரும்.

    கட்சியில் இருந்து என்னை நீக்கியதற்கான காரணம் என்ன? நான் என்ன குற்றம் செய்தேன் சொல்ல முடியுமா? யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன். சொல்லமுடியுமா? யார் பதவி தந்தாலும் அவர்களுக்கு திருப்பி தந்துவிட்டு அம்மாவின் விசுவாச தொண்டனாக இப்போது வரைக்கும் இருந்து கொண்டு இருக்கிறேன்.

    தி.மு.க.வுடன் நான் கூட்டு என சொல்பவர்கள் முட்டாள்கள். சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டும் தான் உள்ளது.

    சிறப்பான ஆட்சி செய்யும் மோடியே பிரதமராக தொடர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    சில விஷயங்களை நான் கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்று விடுவார். அவை அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டு விட்டேன்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    • சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நகர் மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக வந்திருக்க முடியுமா?
    • அதிமுகவின் சரித்திரத்தில் 12 ஆண்டுகள் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கோவை :

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.

    சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    உன்னைத்தான் தம்பி நான் நம்பியிருக்கிறேன் என்று எம்.ஜி.ஆரும் அம்மா அவர்களும் தாய்பாச உணர்வோடு ஒன்றரை கோடி தொண்டர்களையும் தான் பெற்ற பிள்ளைகள் என்று பாவித்து தான் வளர்த்தார்கள். இல்லையென்றால் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நகர் மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக வந்திருக்க முடியுமா?

    அதிமுகவின் சரித்திரத்தில் 12 ஆண்டுகள் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த பொறுப்பை என்னிடம் அம்மா தரும்போது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் அது 4 கோடியாக ஆயிற்று.

    அம்மா அவர்கள் ஒருநாள் என்னை அழைத்து, பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் எனக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. வழக்குகள் எல்லாம் என்மேல் போட்டு இருக்கார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் வங்கிகள் மூலம் பணம் தரவேண்டும். 2கோடி ரூபாய் கழக நிதி எனக்கு தர கேட்டார். உடனே நான் ஒரு வருடத்தில் திருப்பி தந்துவிடுகிறேன் என்றார்.

    உடனே 2 கோடி ரூபாய் கொடுத்தேன். ஒரே மாதத்தில் அம்மாவும் அந்த 2 கோடி ரூபாய் கொடுத்தார். இதுதான் வரலாறு.

    இன்றைக்கு எங்களை எல்லாம் வெளியேற்றி விட்டு வன்முறை மூலமாக 228 பேரை கூட்டி பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார்கள். இந்த 228 பேரை வைத்து கழகத்தை அபகரிப்பு செய்து மீண்டும் நாலரை வருடம் முதலமைச்சராக இருந்த ருசி அவரை விடவில்லை. திரும்ப வந்து நாட்டையே சூறையாடி கொள்ளையடித்து செல்ல வேண்டும் என்பது தான் அந்த கூட்டம் இன்றைக்கும் பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நிதர்சமான உண்மை என கூறினர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
    • ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    கோவை:

    அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி தனது ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.

    சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

    கோவையில் ஆலோசனை கூட்டம் முடிந்ததும், இன்று மாலை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியதாவது:-

    மக்களவை தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைக்கும் பணியை இன்று கோவையில் தொடங்கியுள்ளோம். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த மாதம் வரை இந்த பணிகள் நடக்க உள்ளது.மேலும் கோவையில் ஒரு மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    அ.தி.மு.க ஒருங்கிணை ப்பாளராகத் தான் இன்னும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பெயர் உள்ளது. மக்களவை தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
    • இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    கோவை:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தி.மு.க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை.

    மொத்தத்தில் தி.மு.க அரசு வெள்ள பாதிப்பை சரியாக கையாளவில்லை என்றே கூற வேண்டும்.

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவித்து கொண்டிருந்த போது, முதலமைச்சர் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார்.

    மத்தியக்குழு கடந்த 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து நெல்லையிலும் ஆய்வு பணி மேற்கொண்டனர். ஆய்வு பணியை முடித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் கொடுக்கும் பணியை மத்திய குழு செய்து வருகிறது.


    மத்திய அரசு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கடந்த 21-ந் தேதி தான் முதலமைச்சர் வெள்ள பாதிப்பை பார்வையிட தூத்துக்குடி செல்கிறார். தமிழக முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.

    மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மழை வெள்ள பாதிப்பு பணியில் அவர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அதனை விடுத்து, உதயநிதி, மத்திய அரசுடன் வம்புக்கு இழுத்து வருகிறார்.

    மக்களை காப்பதை விட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதிலேயே தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    மேலும் மழை பாதிப்பு ஏற்பட்ட போது நெல்லை மாநகராட்சி மேயர் கூட அங்கு இல்லை. அவர் சேலத்தில் மாநாடு பணிகளை கவனித்து கொண்டிருந்தார். தி.மு.கவினருக்கு மக்களை விட சேலத்தில் நடைபெற உள்ள மாநாடும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தினாலேயே மத்திய அரசு அந்த பணிகளை பொறுப்பெடுத்து செய்து வருகிறது.

    சென்னை வெள்ளத்திற்கு ரூ.450 கோடியும், பிறகு ரூ.550 கோடி என மொத்தம் ரூ.ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழக அரசு கொடுத்துள்ளது. தென் மாவட்ட வெள்ளத்தை ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை கொடுத்த பின்னர், அதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கும்.


    அதற்குள்ளாகவே மழை பாதிப்புக்கு நாங்கள் கேட்ட நிதியை விட குறைவாகவே தந்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் புயல் ஏற்பட்ட போது அந்த மாநில அரசு ரூ.9 ஆயிரத்து 836 கோடி மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி மட்டுமே கொடுத்தது.

    மேலும் 2020-21-ல் கொரோனா காலகட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள குஜராத்திற்கு ரூ.304 கோடியும், தமிழகத்திற்கும் ரூ.868 கோடியும் கொடுக்கப்பட்டது. அந்த நிதி தொடர்பாக தமிழக அரசு இன்னும் ஏன் கணக்கு கொடுக்கவில்லை.

    இப்படி ஒவ்வொன்றாக கணக்கெடுத்து சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தி.மு.கவின் பொய்யை தோலுரிக்க விரும்பவில்லை.

    அவர்கள் தங்கள் மீது உள்ள தவறை மறைக்க மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தான் வானிலை மையத்தின் மீது பழியை தூக்கி போட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் கொடுத்து இருந்தது. ஆனால் அப்போது அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை. இப்போது வானிலை மையத்தின் மீது குறை சொல்லி வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்டுள்ளது. அந்த நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என நம்புகிறேன். நாளை மறுநாள் தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகிறார்.

    அவர் தென் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மத்திய அரசிடம் தெரிவித்து, நிதியை பெற்றுத்தருவார்.

    பொருளாதார மாநிலத்தில் தமிழகத்தை உத்தரபிரதேசம் முந்தி விட்டது. உத்தரபிரதேசம் முதல் இடத்தையும், தமிழகம் 3-வது இடத்திலும் உள்ளது.

    தமிழகத்திற்கு புதிதாக தொழில் தொடங்க எந்த நிறுவனம் முன்வரவில்லை. காரணம் தி.மு.க அரசு அவர்களிடம் லஞ்சம், கமிஷன் போன்றவற்றை கேட்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்திற்கு முதல் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பாலும் மாநிலத்திற்கு வரக்கூடிய வருவாயில் இழப்பு ஏற்படும்.

    உதயநிதி ஸ்டாலின் சனதானத்தை பற்றி தப்பாக பேசவில்லை என்றார். மேலும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி வந்தனர். ஆனால் தி.மு.க.வினருக்கு பாடம் எடுக்கும் வகையில் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என முதல்வர் இருந்த போதே கூறிவிட்டார். தி.மு.க.வை மூட்டை கட்டி கடலில் போடும் வேலையை தான் உதயநிதி செய்து வருகிறார். அவர் வடிவேலு காமெடியை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பில் என்னை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை என்ற சாதியே இருக்க கூடாது என்பது தான்.

    கம்யூனிஸ்டு கட்சி என்பது மக்களுக்கான கட்சி இல்லை. அது தி.மு.கவிற்கான கட்சியாக மாறி விட்டது. அவர்களுக்காக தான் கட்சி நடத்துகிறார்கள். பொன்முடி தீர்ப்பு விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது கேவலமான விஷயம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர்.
    • வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை

    ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" சிறப்பாக நடைபெற்றது.

    இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. ஈஷாவில் இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளான நேற்று விமர்சையாக நடைபெற்றது.


    இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவக்கினர்.

    அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 8:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது. இந்தாண்டு சயன ஆரத்தியை காசி உபாசகர்களுடன் முதன் முறையாக ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் முழுநேர தன்னார்வலர்களும் சேர்ந்து நடத்தினர்.


    வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.

    • 22 நாட்களுக்கு பின்னர் கடந்த 14-ந் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.
    • கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனிடையே கடந்த மாதம் பெய்த கன மழையால் மலைப்பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    22 நாட்களுக்கு பின்னர் கடந்த 14-ந் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.

    இந்நிலையில் மீண்டும் கடந்த 20-ந் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடர்லி-ஹில்குரோவ் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதனால் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வழக்கம் போல் இன்று காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து ஊட்டி மலை ரெயில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார்.
    • ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.

    கோவை:

    பாரதிய ஜனதா மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி 2022-ல் சென்னை ஐகோர்ட்டு, அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.

    இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் தான் மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.


     தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவர் மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். இப்போது தி.மு.க அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, ஏற்கெனவே தி.மு.க.வே உருவாக்கிய முன்னுதாரணத்தின் படி தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றபோது அவரை பதவியில் இருந்து நீக்காமல், இலாகா இல்லாத அமைச்சராக இன்று வரை தொடரச் செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய அவமானம். குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் அனைவரையும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சர், தான் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும். நீதித்துறையில் நல்ல நபர்கள், எதற்கும் பயம் இல்லாத நபர்கள் இருக்கும் போது நல்ல தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

    • சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.
    • தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    கோவை:

    தி.மு.க முன்னாள் அமைச்சரும், சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி கோவை பீளமேட்டில் வசித்து வருகிறார்.

    இவரது பெயரில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு கற்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இவர் நடத்தி வரும் கல்குவாரிகள், அரசின் விதியை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கல்குவாரி உரிமையாளரான பொங்கலூர் பழனிசாமியின் வீட்டில் சோதனை நடத்த கர்நாடக மாநில போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து கர்நாடக மாநில போலீசார் 15 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோர்ட்டு ஆர்டருடன் கோவைக்கு வந்தனர்.

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று, கோர்ட்டு ஆர்டரை காண்பித்து விட்டு சோதனை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.

    இந்த வீட்டில் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வசித்து வருகிறார். இவர் தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இதேபோல் பீளமேட்டில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவையில் இருந்து முதலில் சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது.
    • கோவையில் இருந்து பெங்களூருவுக்கு எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சில ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தெற்கு ரெயில்வே சார்பில், சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே முதல் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து கோவை-சென்னை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா போன்ற பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயில்கள் ரெயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக சென்று விடுவதால் பயணிகளும் பெரும்பாலும் இந்த ரெயிலில் பயணிக்க விரும்புகின்றனர்.

    கோவையில் இருந்து முதலில் சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயில் சேவை தொடங்கியதும் பயணிகளும், தொழில்முனைவோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மற்ற ரெயில்களை விட அதிவேகமாக சென்று விடுவதால், தங்களின் பயண நேரம் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய நேரத்திற்கும் சென்றுவிடுவதால் பயணிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சில ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் பெங்களூருவுக்கு ரெயில்கள் கிடையாது. தொழில் நகரமான கோவையில் இருந்து மற்றொரு தொழில் நகரான கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கோவையை சேர்ந்த தொழில் முனைவோர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு இளைஞர்களும் அதிகளவில் செல்கின்றனர்.

    போதுமான அளவு ரெயில் இல்லாததால் இவர்கள் சிரமம் அடைந்தனர். கோவை-பெங்களூரு இடையே ரெயில்களை அதிகரிக்க வேண்டும் எனவும், கோவை-சென்னை இடையே இயக்கப்படுவது போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் கோட்டத்துக்கு, 8 பெட்டிகள் கொண்ட ரேக் வந்துள்ளது. இதனால் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது இந்த மாத இறுதி அல்லது புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கும் எனவும், இதற்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி இயக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப மையமான பெங்களூரு மற்றும் கோவை ஆகியவற்றை இணைப்பதுடன், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை நேரடியாக இணைக்கும் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையாக இது மாறும். இந்த தகவல் கேட்டு ரெயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை-பெங்களூரு இடையே சேலம்-ஜோலார்பேட்டை-குப்பம் வழியாக ஒரு தடமும், தர்மபுரி-ஓசூர் வழியாக ஒரு வழித்தடமும் உள்ளது. இவ்விரு வழித்தடங்களில் ஓசூர் வழித்தடம் குறைவான தொலைவை கொண்டிருந்தாலும் ஒற்றை ரெயில் பாதை மட்டுமே உள்ளது.

    ஜோலார்பேட்டை வழித்தடம் இரட்டை ரெயில் பாதை கொண்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கோவையில் இருந்து பெங்களூரு 385 கி.மீ தூரத்தில் உள்ளது. கோவையில் இருந்து சாதாரணமாக ரெயிலில் செல்ல வேண்டும் என்றால், 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது.

    வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் பட்சத்தில் அந்த ரெயில் 110 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்திற்கு இயக்கப்படும் என்பதால், பெங்களூருவுக்கு 5 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    உதாரணமாக கோவையில் காலை 6.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பெங்களூருவை காலை 11.30 மணிக்கு சென்றடைந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கு ஏசி நாற்காலி கார் வகுப்பில் ஒரு பயணத்திற்கு ரூ.1315 மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்ய ரூ.2275 வரை வசூலிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

    ×