search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைபிடிக்கிறது- அண்ணாமலை
    X

    தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைபிடிக்கிறது- அண்ணாமலை

    • சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
    • இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    கோவை:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தி.மு.க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை.

    மொத்தத்தில் தி.மு.க அரசு வெள்ள பாதிப்பை சரியாக கையாளவில்லை என்றே கூற வேண்டும்.

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவித்து கொண்டிருந்த போது, முதலமைச்சர் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார்.

    மத்தியக்குழு கடந்த 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து நெல்லையிலும் ஆய்வு பணி மேற்கொண்டனர். ஆய்வு பணியை முடித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் கொடுக்கும் பணியை மத்திய குழு செய்து வருகிறது.


    மத்திய அரசு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கடந்த 21-ந் தேதி தான் முதலமைச்சர் வெள்ள பாதிப்பை பார்வையிட தூத்துக்குடி செல்கிறார். தமிழக முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.

    மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மழை வெள்ள பாதிப்பு பணியில் அவர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அதனை விடுத்து, உதயநிதி, மத்திய அரசுடன் வம்புக்கு இழுத்து வருகிறார்.

    மக்களை காப்பதை விட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதிலேயே தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    மேலும் மழை பாதிப்பு ஏற்பட்ட போது நெல்லை மாநகராட்சி மேயர் கூட அங்கு இல்லை. அவர் சேலத்தில் மாநாடு பணிகளை கவனித்து கொண்டிருந்தார். தி.மு.கவினருக்கு மக்களை விட சேலத்தில் நடைபெற உள்ள மாநாடும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தினாலேயே மத்திய அரசு அந்த பணிகளை பொறுப்பெடுத்து செய்து வருகிறது.

    சென்னை வெள்ளத்திற்கு ரூ.450 கோடியும், பிறகு ரூ.550 கோடி என மொத்தம் ரூ.ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழக அரசு கொடுத்துள்ளது. தென் மாவட்ட வெள்ளத்தை ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை கொடுத்த பின்னர், அதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கும்.


    அதற்குள்ளாகவே மழை பாதிப்புக்கு நாங்கள் கேட்ட நிதியை விட குறைவாகவே தந்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் புயல் ஏற்பட்ட போது அந்த மாநில அரசு ரூ.9 ஆயிரத்து 836 கோடி மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி மட்டுமே கொடுத்தது.

    மேலும் 2020-21-ல் கொரோனா காலகட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள குஜராத்திற்கு ரூ.304 கோடியும், தமிழகத்திற்கும் ரூ.868 கோடியும் கொடுக்கப்பட்டது. அந்த நிதி தொடர்பாக தமிழக அரசு இன்னும் ஏன் கணக்கு கொடுக்கவில்லை.

    இப்படி ஒவ்வொன்றாக கணக்கெடுத்து சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தி.மு.கவின் பொய்யை தோலுரிக்க விரும்பவில்லை.

    அவர்கள் தங்கள் மீது உள்ள தவறை மறைக்க மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தான் வானிலை மையத்தின் மீது பழியை தூக்கி போட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் கொடுத்து இருந்தது. ஆனால் அப்போது அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை. இப்போது வானிலை மையத்தின் மீது குறை சொல்லி வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்டுள்ளது. அந்த நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என நம்புகிறேன். நாளை மறுநாள் தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகிறார்.

    அவர் தென் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மத்திய அரசிடம் தெரிவித்து, நிதியை பெற்றுத்தருவார்.

    பொருளாதார மாநிலத்தில் தமிழகத்தை உத்தரபிரதேசம் முந்தி விட்டது. உத்தரபிரதேசம் முதல் இடத்தையும், தமிழகம் 3-வது இடத்திலும் உள்ளது.

    தமிழகத்திற்கு புதிதாக தொழில் தொடங்க எந்த நிறுவனம் முன்வரவில்லை. காரணம் தி.மு.க அரசு அவர்களிடம் லஞ்சம், கமிஷன் போன்றவற்றை கேட்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்திற்கு முதல் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பாலும் மாநிலத்திற்கு வரக்கூடிய வருவாயில் இழப்பு ஏற்படும்.

    உதயநிதி ஸ்டாலின் சனதானத்தை பற்றி தப்பாக பேசவில்லை என்றார். மேலும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி வந்தனர். ஆனால் தி.மு.க.வினருக்கு பாடம் எடுக்கும் வகையில் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என முதல்வர் இருந்த போதே கூறிவிட்டார். தி.மு.க.வை மூட்டை கட்டி கடலில் போடும் வேலையை தான் உதயநிதி செய்து வருகிறார். அவர் வடிவேலு காமெடியை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பில் என்னை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை என்ற சாதியே இருக்க கூடாது என்பது தான்.

    கம்யூனிஸ்டு கட்சி என்பது மக்களுக்கான கட்சி இல்லை. அது தி.மு.கவிற்கான கட்சியாக மாறி விட்டது. அவர்களுக்காக தான் கட்சி நடத்துகிறார்கள். பொன்முடி தீர்ப்பு விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது கேவலமான விஷயம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×