search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்
    X

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்

    • வந்தே பாரத் ரெயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறைந்து விடும்.
    • ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது. இதுவரை இந்தியா முழுவதும் 35 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் கோவை-சென்னை இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நெல்லை-சென்னை இடையேயும் ரெயில் இயக்கப்படுகிறது.

    கோவை-சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதை போன்று, கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று தற்போது கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்தபடி காணொலி வாயிலாக கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    கோவையில் இருந்து புறப்படும் ரெயில் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்கிறது. கோவையில் இருந்து பெங்களூரு 380 கி.மீ தூரத்தில் உள்ளது. சாதாரண ரெயில்களில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 7 மணி நேரம் வரை ஆகும்.

    இந்த வந்தே பாரத் ரெயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறைந்து விடும். அதன்படி 5 மணி 40 நிமிடத்தில் ரெயில் பெங்களூருவுக்கு சென்றுவிடும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வந்தே பாரத் ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 32 இருக்கைகள் கொண்ட ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், தலா 72 இருக்கைகள் கொண்ட 5 ஏ.சி. சேர் கார் பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    இதுதவிர என்ஜினுடன் இணைந்த வகையில் மேலும் 2 ஏ.சி. சேர் கார் பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 40 இருக்கைகள் உள்ளது.

    இந்த ரெயிலில் உணவு, ஸ்நாக்ஸ் (நொறுக்குத்தீனி) உடன் கூடிய ஏ.சி. சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1000-ம் ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் ரூ.1,850 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் சேவை 30-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும், இதன் தொடர் சேவையானது ஜனவரி 1-ந் தேதி முதல் கோவையில் இருந்து இயக்கப்படும்.

    காலை 6.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரெயில், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரை சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. இதற்காக நேற்று கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரெயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இதில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.

    கோவையில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் காலை 7.40 மணிக்கு ஓமலூர் ரெயில் நிலையத்திலும், 8.30 மணிக்கு தருமபுரியிலும், 10.03 மணிக்கு ஓசூர் ரெயில் நிலையத்திற்கும் சென்று, அதன்பின்னர் 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அறிந்து கோவை மக்களும், தொழில் முனைவோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Next Story
    ×