என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி மாவட்டம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரம் முதல் 2 ஆயிரம் டன் வரை உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    ஆனால் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தூரில் இருந்து வழக்கமாக 45 டன் உருளைக்கிழங்கு வரத்து இருக்கும். தற்போது 15 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வரத்து குறைவால் உருளைக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது. 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு முன்பு ரூ.800-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1,000-க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.
    • சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து கோவை காளப்பட்டி பகுதியில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிறுவனம் மற்றும் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராமநாதன் வீடு, அவருடைய மகன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த 2-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடந்தது. நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    கோவை காளப்பட்டியில் உள்ள கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இன்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதேபோல் பட்டணத்தை சேர்ந்த ராமநாதனின் வீடு, அவருடைய அலுவலகம், மகன் வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. வீட்டில் உள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

    இதுதவிர ராமநாதனின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்கி இருக்கும் நாயக்கன்பானையம், ராமலிங்கம் நகரில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பம்புசெட் நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் இன்று 3-வது நாளாக சோதனை நடந்தது.

    சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

    சோதனை முடிவடைந்த பிறகே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரியவரும். சோதனை நடைபெற்று வரும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 1-ந் தேதி முதல் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • வந்தே பாரத் ரெயிலுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கோவை:

    இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    தமிழகத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி தொடங்கியது. கோவை-சென்னை இடையே இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. தமிழகத்துக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுதான். அதனை தொடர்ந்து நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.

    கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது கோவை பொதுமக்கள் மற்றும் இங்கு தொழில் செய்து வரக்கூடியவர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    அடிக்கடி தொழில்முனைவோர்கள் வேலை விஷயமாக சென்னை சென்று வர வேண்டிய சூழல் இருந்தது. இவர்களின் முதல் விருப்பமாக ரெயில்கள் தான் உள்ளன. ஆனால் சாதாரண ரெயில்கள் சென்று சேருவதற்கு வெகுநேரம் ஆகி வந்தது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலால் 5 மணி 38 நிமிடங்களில் சென்று விடுகிறது. இதனால் இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் உற்சாக வரவேற்பு உள்ளது. தற்போதும் இந்த வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் முழுவதும் நிரம்பி சென்ற வண்ணம் இருக்கிறது.

    கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தென்னக ரெயில்வே கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவித்தது.

    அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் மோடி கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

    1-ந் தேதி முதல் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து 1.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரெயில் 6 அரைமணி நேரத்தில் பெங்களூருவை சென்றடைந்து வருகிறது. இந்த ரெயில் மொத்தம் 540 இருக்கைகளை கொண்டது.

    இந்த ரெயிலில் பயணிக்க சாதாரண சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1860-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது கோவை மக்கள் மற்றும் தொழில் முனைவோர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இருந்த போதிலும் ரெயில் செல்லும் நேரத்தால் கோவை-சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு பயணிகளிடம் குறைவாகவே உள்ளது. ரெயில் இயக்கம் தொடங்கிய 1 மற்றும் 2-ந் தேதிகளில் மட்டுமே ரெயிலில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டினர். ரெயில் பெட்டிகளும் பயணிகளால் நிரம்பி வழிந்தது. ஆனால் அதன்பிறகு 3-ந் தேதியில் இருந்து இந்த ரெயிலில் பயணிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. மொத்தம் உள்ள இருக்கைகளில் 350 இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இருக்கைகள் காலியாக கிடக்கின்றன. இதற்கு ரெயில் புறப்படக்கூடிய நேரம் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.

    கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.

    இங்கிருந்து அவசர தேவை மற்றும் வேலை விஷயமாக செல்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், ரெயில் புறப்படும் நேரம் தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு ரெயில் புறப்படுகிறது. அப்படி என்றால் நாம் நள்ளிரவிலேயே புறப்பட்டு ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வாறு வருவது மிகவும் சிரமம்.

    5 மணிக்கு பதிலாக 6 அல்லது 7 மணிக்கு ரெயில் இயக்கினால் நன்றாக இருக்கும். பயணிகளிடமும் இந்த ரெயிலுக்கு கோவை-சென்னை ரெயிலை போன்று வரவேற்பு கிடைக்கும்.

    கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் தினமும் கோவையில் இருந்து 6.10 மணிக்கு புறப்படுகிறது. இதனால் அந்த ரெயிலில் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். எனவே அதுபோன்று கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையின் நேரத்தை மாற்ற வேண்டும்.

    மேலும் வந்தே பாரத் ரெயில் என்றால் சாதாரண ரெயில்களில் இருந்து வேகமாக செல்லக்கூடியது. கோவை-சென்னை இடையே சாதாரண ரெயிலில் பயணிக்க 8 மணி நேரமாக இருக்கிறது. அதுவே வந்தே பாரத் ரெயிலில் 5 மணி 38 நிமிடங்களில் சென்று விடலாம். இதன் மூலம் 2 அரைமணி நேரம் மிச்சமாகிறது.

    அதுபோன்று பெங்களூரு செல்வதற்கு சாதாரண ரெயில்களில் 7 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரெயில் 5 மணி நேரத்தில் சென்றால் 2 மணி நேரம் மிச்சமாகும். ஆனால் இந்த வந்தே பாரத் ரெயில் 6 அரைமணி நேரத்தில் தான் செல்கிறது. இதுவும் பயணிகளிடம், மற்ற ரெயில்கள் 7 மணி நேரத்தில் சென்று விடுகிறது.

    இது வெறும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தான் செல்கிறது. அதற்கு இந்த ரெயிலில் பயணிப்பதை விட, மற்ற ரெயில்களிலேயே பயணித்து விடலாம் என தோன்றுகிறது.

    இதனாலும் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது. எனவே நேரத்தை மாற்றி அமைப்பதுடன், ரெயிலின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில் மற்றும் விமான பயணிகள் நலச்சங்க தலைவர் ஜமீல் கூறியதாவது:-

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். கோவையில் இருந்து ஏற்கனவே பெங்களூருவுக்கு டபுள் டக்கர் (உதய் எக்ஸ்பிரஸ்) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுதவிர மும்பை லோக்மான்ய திலக் ரெயிலும் சென்று வருகிறது.

    இந்த ரெயில்களிலும் பயணிகள் பயணித்து வருகின்றன. தற்போது வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

    தொடர்ந்து குறிப்பிட்ட சில மணி இடைவெளிகளில் பெங்களூருவுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயில் அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படுவதால் தான் அந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. மேலும் இந்த ரெயிலுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதனால் ரெயில் பயணிகள் அதிகளவில் உதய் எக்ஸ்பிரசை பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு இல்லாமல் போவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இரவு நேரத்தில் பெங்களூருவுக்கு போதுமான ரெயில்கள் இல்லை. எஸ்.ஆர்.டி.சி சார்பில் 11 வண்டிகள் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசனுக்கு செல்கிறது. இதில் 500 பயணிகள் தினமும் பயணிக்கின்றனர்.

    எனவே டபுள் டக்கர் எக்ஸ்பிரசை இரவு நேரத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் இரவில் பெங்களூரு பயணம் மேற்கொள்வோர் இந்த ரெயிலை பயன்படுத்துவார்கள்.

    மேலும் வந்தே பாரத் ரெயில் அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படுகிறது. அதிகாலையிலேயே ரெயில் நிலையத்திற்கு வருவது என்பது இயலாத காரியம். அதற்கு பதிலாக காலை 7 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    அவ்வாறு இயக்கும் பட்சத்தில் இந்த ரெயிலிலும் அதிகமான பயணிகள் பயணிப்பார்கள். எனவே ரெயில்வே நிர்வாகம், டபுள் டக்கர் எக்ஸ்பிரசை இரவு நேரத்துக்கு மாற்றுவதுடன், வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து புறப்படும் நேரத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை:

    தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

    கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் வரத்துடன் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன்கள் பெரிய வெங்காயமும், சுமார் 100 டன்கள் சின்ன வெங்காயமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கடந்த டிசம்பர் முதல் வாரம் வரையிலும் கூட கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலையில் கடந்த சில நாட்களாக தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் சின்னவெங்காயத்தின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.35-க்கும், அதிகபட்சம் ரூ.38-க்கும் விற்பனையானது. அதேபோல் சரிவை சந்தித்து வரும் பெரிய வெங்காயமும் குறைந்தபட்சம் ரூ.25-க்கும், அதிகபட்சம் ரூ.29-க்கும் விற்பனையானது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலத்தின் பல பகுதியில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் காய்கறிகளின் விலை சரிவடைய தொடங்கி உள்ளது.

    நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாத வேளாண் விளை பொருட்களை எந்த வழியிலாவது விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை விலக்கிக் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் பரிசுத் தொகையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
    • தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கோவை:

    பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது:-

    தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். தமிழகத்தில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தது ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000-மும் நிறுத்தப்பட்டிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது.
    • நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம்.

    குனியமுத்தூர்:

    டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

    இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் தனது ஆதரவு பா.ஜ.க.வுக்கா? அல்லது அ.தி.மு.க.வுக்கா? என்பதை முடிவு செய்யாமல் இருந்து வருகிறது.

    நேற்று பிரதமர் மோடி திருச்சி வருகை தந்தார். அவரை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்க செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.

    இதனால் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்தித்தோம். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்கியது.

    ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் நான் நட்பு ரீதியாகவே பழகி வருகிறேன்.

    கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் எடப்பாடி, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்கூட்டணி பலமாக உள்ளது. நமது கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் தமிழகம் வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது கூட்டணியும் பலப்படும் என தெரிவித்தார். அவரும் வருவதாக உறுதியளித்தார். ஆனால் கடைசி வரை வரவே இல்லை.

    மேலும் அண்ணாமலை பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பு வரை அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி நீடித்தது. அவர் நடைபயணம் ஆரம்பித்த பின்னர் தான் கூட்டணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள், பிளவுகள் ஏற்பட்டன. குறிப்பாக அ.தி.மு.கவினர் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    பொதுவாக மாநில கட்சியுடன் தேசிய கட்சி கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிக்கு மாநிலத்தில் இருக்க கூடிய கட்சி தான் தலைமை தாங்கும்.

    நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம். கூட்டணி குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை தெரியப்படுத்துவோம்.

    தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எளிதாக தி.மு.கவை வென்று விட முடியும்.

    தி.மு.க தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளில் எதையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை. பாதிபாதியாகவே நிற்கிறது. மேலும் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. தி.மு.க. ஆட்சி ஏற்ற 4 மாதங்களிலேயே இது தெரிந்து விட்டது.

    இதனை பயன்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் முதலில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குட்டியானை யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து அந்த பகுதியில் உள்ள சாலையில் தனியாக சுற்றி திரிந்தது.
    • யானைகள் பன்னிமேடு பகுதியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் இருப்பது தெரியவரவே குட்டியானை அங்கு அழைத்து சென்று விட்டனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனசரகத்திற்குட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 13 காட்டு யானைகள் குட்டி யானை ஒன்றுடன் சுற்றி திரிந்தது.

    வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை கூட்டம் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது. ஆனால் குட்டியானை யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து அந்த பகுதியில் உள்ள சாலையில் தனியாக சுற்றி திரிந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து குட்டியானையை மீட்டனர்.

    அதனை தொடர்ந்து, குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணியை தொடங்கினர். யானை எங்கிருக்கிறது என்பதை கண்காணித்தனர்.

    அப்போது யானைகள் பன்னிமேடு பகுதியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் இருப்பது தெரியவரவே குட்டியானை அங்கு அழைத்து சென்று விட்டனர்.

    குட்டி யானையின் சத்தத்தை கேட்டு, தாய் யானையும் மற்ற யானைகளும் வந்து குட்டி யானையை தங்களுடன் அழைத்து சென்றன.

    தாயை பார்த்ததும் குட்டி யானை துள்ளி குதித்து ஓடி தனது தாயுடன் சேர்ந்து கொண்டு வனத்திற்குள் பயணித்தது. சம்பவத்தன்று மீண்டும் குட்டி யானையுடன் யானை கூட்டம் பன்னிமேடு பகுதியில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக வந்தன.

    தண்ணீரை பார்த்ததும் குட்டி யானைக்கு அலாதி சந்தோஷம் ஏற்பட்டது. சந்தோஷத்தில் துள்ளி குதித்த யானை ஆற்று தண்ணீருக்குள் குதித்து, அங்குமிங்கும் நீச்சல் அடித்து உற்சாக குளியல் போட்டது.

    ஒருகரையில் இருந்து மறு கரைக்கு செல்வது, அங்கிருந்து தாயை நோக்கி வருவதுமாக நீச்சல் அடித்து குளியல் போட்டது குட்டி யானை. தாய் யானை தனது குழந்தைக்கு பாதுகாப்பு அரணாக தண்ணீருக்குள் இறங்கி நின்று கொண்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

    வனத்துறையினர் தொடர்ந்து யானை கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் யானைகளை கண்காணிக்கின்றனர்.

    அப்போது தோணிமூடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அருகே உள்ள பாறையில் குட்டி யானை தனது தாயுடன் படுத்து உறங்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அதில் தாய் யானை படுத்துகொண்டிருக்க, சிறிது நேரம் தனது தாயை சுற்றிய குட்டி யானை, தனது தாயின் அருகே வந்து படுத்து கொண்டது.

    உடனே தாய் யானை, தனது துதிக்கையால் குட்டி யானையை அரவணைத்து கொண்டது. 2யானைகளும் அங்கேயே படுத்து சில மணி நேரங்கள் உறங்கின. இந்த வீடியோ காட்சிகளை தற்போது வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கவுண்டம்பாளையம் பகுதியில் 40 குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
    • எங்களிடம் முக்கால் அடி முதல் மண்பானைகள் உள்ளன.

    கவுண்டம்பாளையம்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன.

    இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வர்ணம் பூசுவது, பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதிற்கு தயாராகி வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையில் முக்கியம் வகிப்பது, மண்பானை தான். மண்பானை பயன்பாடு குறைந்திருந்தாலும், பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை மண்பாண்டம் தான் பிடிக்கிறது. ஏனென்றால் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பொங்கல் அன்று மண்பானையில் பொங்கல் வைப்பது தொடர்ந்து வருகிறது.

    பித்தளை, சில்வர் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் தற்போது இருந்தாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கமானது இருந்து தான் வருகிறது.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், பொங்கலிடுவதற்கு பயன்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி கோவை கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்திலேயே தொழிலாளர்கள் தொடங்கி விட்டனர்.

    இருந்தபோதிலும் மாவட்டத்தில் பெய்த பருவமழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மண்பானை தயாரிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    ஒரு அடி முதல் பெரிய அளவிலான மண்பானைகள் வரை என சிறியதும், பெரியதுமாக மண்பானைகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகிறார்கள்.

    இந்த பானைகள் தயாரிக்கப்பட்டு, கோவை மட்டுமின்றி பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தாங்கள் தயாரிக்கும் பானைகளை ரூ.70-ல் இருந்து ரூ.100 வரைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இவர்களிடம் வாங்கி செல்லும் வியாபாரிகள் அதனை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    மண்பானைகள் தயாரிப்பு ஒருபுறம் மும்முரமாக நடந்து வந்தாலும், மண்பானை தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான மண் கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மண்பானை தொழிலாளர் வெங்கடாஜலம் என்பவர் கூறியதாவது:-

    கவுண்டம்பாளையம் பகுதியில் 40 குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் மண்பானை தயாரிப்பதற்கு மாங்கரை, கணுவாய், தடகாம் உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து தொழிலில் ஈடுபட்டு வந்தோம்.

    ஆனால் தற்போது எங்களுக்கு மண்பானை செய்வதற்கு தேவையான மண் கிடைப்பதில்லை. இதனால், நாங்கள் தற்போது வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது வரும் மண்ணை விலைக்கு வாங்கி மண்பானை செய்து வருகிறோம்.

    இந்த மணலில் மண்பானை செய்வது மிகவும் சிரமம். வேறுவழியின்றி இதனை செய்து வருகிறோம். இந்த மண்ணும் ஒரு மூட்டை ரூ.5100-ல் இருந்து ரூ.5400 வரை விற்கப்படுகிறது. ஒரு லோடு என்றால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் ஆகிறது.

    அப்படி வாங்கி தான் நாங்கள் மண்பானை செய்து வருகிறோம். எங்களிடம் முக்கால் அடி முதல் மண்பானைகள் உள்ளன. இந்த பானைகளை ரூ.70-ல் இருந்து ரூ.100 வரை விற்பனை செய்து வருகிறோம்.

    தொழிலுக்கு தேவையான மண் கிடைப்பதிலும், வாங்குவதிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது பொங்கலுக்கான பானைகள் தயாரித்து வருகிறோம்.

    இந்த தொழிலுக்கு தேவையான மண் மற்றும் அரவை எந்திரம், கலவை எந்திரங்களை அளித்து, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது.
    • காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் அவை இரவுநேரத்தில் அடர்ந்த காட்டுக்கு திரும்பி சென்றன.

    ஒரு குட்டியானை மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து, வழிதவறி பன்னிமடை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்தது. இதனை அடுத்த நாள் காலையில் பார்த்த தேயிலை தொழிலாளர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த குட்டி யானையை மீட்டு உணவளித்து பராமரித்தனர்.

    தொடர்ந்து பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாய் யானையுடன் சேர்ப்பதென வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக அந்த குட்டி யானையின் தாயை இனம் கண்டறியும் வகையில் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது காட்டு யானைகள் கூட்டம், பன்னிமடை அடிவாரப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர். குட்டியானை தாயுடன் ஒன்றுசேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது. அந்த கூட்டத்தில் தாயுடன் சேர்ந்த குட்டி யானையும் இருந்தது. பின்னர் அவை அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தன. அப்போது குட்டியானை தண்ணீரை கண்டதும் உற்சாகம் அடைந்தது. தொடர்ந்து ஆற்றுக்குள் இறங்கி உற்சாகமாக நீச்சல் அடித்து குளியல் போட்டது.

    அப்போது குட்டி யானைக்கு பாதுகாவலாக தாயும் ஆற்றுக்குள் இறங்கி குளித்தது. பின்னர் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றுவிட்டன.

    ஆற்றங்கரை பகுதியில் குட்டி யானை தண்ணீரில் நீந்தி விளையாடி மகிழும் அரிய காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். இதற்காக அவை அடிவாரப்பகுதியில் ஓடும் ஆற்றுக்கு வந்து செல்லும்.

    குறிப்பாக மதியம் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவும் செய்யும். இதன் ஒரு பகுதியாகதான் இந்த குட்டி யானை ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து குளித்துவிட்டு சென்று உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
    • கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

    கோவை:

    தமிழகத்தில் கோவை-சென்னை, நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களிடம் வரவேற்பு காணப்பட்டது.

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தொழில் விஷயமாகவும், வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பலரும் சென்று வருகின்றனர்.

    எனவே கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் போன்று கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கோவை-பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 5 மணிக்கு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ரெயிலில் பிளாட்பாரத்திற்கு வந்ததும், பயணிகள் அனைவரும் டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    இந்த ரெயிலில் பயணம் செய்வது வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்த பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும், பயணிகளுக்கு ரெயில் நிர்வாகம் சார்பில் காபி மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டன.

    ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    கோவையில் இருந்து 5 மணிக்கு புறப்பட்ட ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    மறுமார்க்கமாக அங்கிருந்து 1.40 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8 மணிக்கு கோவையை வந்தடைய உள்ளது. கோவை-பெங்களூரு இடையேயான 380 கி.மீ தொலைவை 6 அரை மணி நேரத்தில் இந்த ரெயில் சென்றடைகிறது. இன்று முதல் தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் கோவை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. காலை 5 மணிக்கே கோவையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் சொகுசு பெட்டிகள், சிறப்பு சொகுசு பெட்டிகள் என 2 வகையான பெட்டிகள் உள்ளன.

    சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,860-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காபி, திண்பண்டங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ரெயில் 6 அரை மணி நேரத்தில் பெங்களூருவை சென்றடையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.
    • மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கோவை:

    2023-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 2024-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

    2024-ம் ஆண்டு பிறந்ததையொட்டி கோவையில் மக்கள் முக்கிய பகுதிகளில் திரண்டு புதிய ஆண்டை ஆடல், பாடல்களை இசைக்க விட்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதலே கோவை வாலாங்குளத்தில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குவிய தொடங்கினர்.

    அங்கு பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், இன்னிசை கச்சேரிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், லேசர்ஷோவும் நடத்தப்பட்டது. வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.

    மேலும் சின்னத்திரை நடிகர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி, மிமிக்கிரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் செண்டை மேளம், ஆங்காங்கே செல்பி ஸ்பாட், பூ போன்ற அலங்கார உடை, பிரமாண்ட பாண்டா கரடி உள்ளிட்ட வேடங்களில் பொதுமக்களை குஷிபடுத்தினர்.

    குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. பல்வேறு நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

    இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் கோவை வாலாங்குளக்கரையில், கண்ணை கவரக்கூடிய லேசர் ஷோ மற்றும் டிரோன் ஷோ நடத்தப்பட்டது. பல்வேறு வண்ண, வண்ண வடிவத்தில் ஜொலித்த இந்த நிகழ்ச்சி அங்கு திரண்டு இருந்த மக்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது. குறிப்பாக புத்தாண்டு பிறந்ததும் 15 நிமிடங்களுக்கு 250 டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது அங்கு குழுமியிருந்த மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    மக்கள் அதனை பார்த்து ரசித்து, தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அத்துடன் 300 வகையான வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டு, வாலாங்குளம் குளக்கரையே மின்னொளியிலும், லேசர் ஷோவிலும், வண்ண பட்டாசுகள் வெடித்தும் அந்த பகுதியே வண்ணமயமாக ஜொலித்து கொண்டிருந்தது.

    புத்தாண்டு பிறந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகளவிலான மக்கள் வாலாங்குளத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால், வாலாங்குளத்தில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.
    • புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கொரோனா தொற்று பாதிப்பு சில மாதங்களாக குறைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது.

    உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த 26-ந் தேதி வரை 69 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு புதிய வகை ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணை தனிமைப்படுத்தினர். மேலும் அவரது பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியும் மேற்கொள்ளப்பட்டது. அவரது பெற்றோரையும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து, புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அண்மையில் அவர் எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

    கோவையில் ஜே.என்.1 வகை கொரோனா ஒருவருக்கு உறுதியானதை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்பதுடன், பரிசோதனையும் மேற்கொள்கின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையம், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இதுதவிர மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்பது, கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக 100 வார்டிலும் எந்தெந்த பகுதியில் கொரோனா உள்ளதோ அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

    கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து கோவையில் பொது இடங்களில் மக்கள் கூடும்போது முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதும் 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தின் எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ×