search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "small onion"

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை:

    தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

    கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் வரத்துடன் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன்கள் பெரிய வெங்காயமும், சுமார் 100 டன்கள் சின்ன வெங்காயமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கடந்த டிசம்பர் முதல் வாரம் வரையிலும் கூட கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலையில் கடந்த சில நாட்களாக தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் சின்னவெங்காயத்தின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.35-க்கும், அதிகபட்சம் ரூ.38-க்கும் விற்பனையானது. அதேபோல் சரிவை சந்தித்து வரும் பெரிய வெங்காயமும் குறைந்தபட்சம் ரூ.25-க்கும், அதிகபட்சம் ரூ.29-க்கும் விற்பனையானது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலத்தின் பல பகுதியில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் காய்கறிகளின் விலை சரிவடைய தொடங்கி உள்ளது.

    நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாத வேளாண் விளை பொருட்களை எந்த வழியிலாவது விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை விலக்கிக் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .
    • காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள்,மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் ,தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.

    நேற்று கூடிய வார சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.90-க்கும், தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.40 அதிகரித்து காணப்பட்டது. பெரிய வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.30 குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டது.

    • தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது.
    • பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அதன் விலை உச்சம் அடைந்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.80வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    • சின்ன வெங்காயத்தை தேடித்தேடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சின்ன வெங்காயம் முதல் தரம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறது
    • இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் கீரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    ஐப்பசி பிறப்பு, அடுத்தடுத்த சுபமுகூர்த்த தினங்கள் வருகையால் உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க கூட்டம் அதிகரித்துள்ளது.சின்ன வெங்காயத்தை தேடித்தேடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சின்ன வெங்காயம் முதல் தரம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறது. இரண்டாம் தரம் 70 முதல் 80 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

    இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் கீரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 5 முதல் 6 ரூபாய்க்கு விற்கும் கீரை விலை, ஒரு ரூபாய் உயர்ந்து 7 ரூபாயாகியுள்ளது.இதனால் மொத்தமாக வாங்குவோர் குறைந்த அளவே கீரை வாங்கி செல்கின்றனர்.  

    • மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    திருப்பூர்:

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் மாநில நிறுவன தலைவா் வக்கீல் ஈசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை நிலவரத்தை அனுசரித்து ஏற்றுமதிக்காக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் ஏற்றுமதி செய்ய இயலாமல் மிகக் கடுமையான நஷ்டத்தை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

    பெரிய வெங்காயம் என்பது இந்திய அளவிலான பிரச்னை, உலக அளவிலான சந்தையும் கூட. ஆனால் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடைகளை விதித்தும், வரிகளை விதிப்பதும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏற்றுமதி செய்யப்படும்போது கொடுக்கப்படும் எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கு ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதை பிரித்து சின்ன வெங்காயத்திற்கு தனி எண்ணை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் 40 சதவீத வரி விதிப்பு சின்னவெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாயை குறைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    எனவே, மத்திய அரசு 40 சதவீத வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், பெரிய வெங்காயத்தில் இருந்து சின்ன வெங்காயத்தைப் பிரித்து அதற்கு தனியாக ஏற்றுமதி எண் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் நாளை 26ந் தேதியும், குடிமங்கலத்தில் 28-ந் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சின்ன வெங்கயம் அதிக அளவில் பயிரிட்டிருந்ததால், விரைவாக அவற்றை எடுத்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயம் விலை ரூ.70 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் செய்யவேண்டிய சின்ன வெங்காயம் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்துவிட்டது. அங்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள சுமார் 500 ஏக்கர் அளவிலான நிலங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

    விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களையெடுத்தல், மழை பொய்த்தால் விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட வகையில் அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது.

    அதற்கு தகுந்த மாதிரி அறுவடை தொடங்கிய காலத்தில் சென்ற மாதம் விலை ரூ.140 வரை விலை கிடைத்ததால் லாபகரமாக இருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் விலை போகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். மழை காலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
    • சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தக்காளி, வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தநிலையில், போதிய விலை கிடைக்காததால் சமீப காலங்களாக அவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. இந்தநிலையில் தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சொட்டுநீர்ப் பாசனத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி என்பது விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக உள்ளது. சின்ன வெங்காய விதையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுதவிர உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்துவிதமான இடுபொருட்களும் விலை உயர்ந்துள்ளது.அந்தவகையில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு பிடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொண்டுள்ளோம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் பாசன நீரின் தேவை குறைகிறது. மேலும் நீரில் கரையும் உரங்களை சொட்டுநீருடன் கலந்து வழங்கும் போது, குறைந்த அளவு பயன்பாட்டில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    ஆனால் விவசாய விளைபொருட்கள் விலை உயர்வு என்பது மட்டும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறுவது வேதனை தருகிறது.தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்கிறது.

    அதுபோல தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் விலை குறையும் போது ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.இதன்மூலம் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறும் நிலையை மாற்ற உதவும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
    • பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை:

    சமீப காலமாக காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் காய்கறி உற்பத்தி அதிகளவில் செய்யப்பட்டாலும் மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக காய்கறி மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் காய்கறி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

    நாட்டு காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டை, புடலை மற்றும் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.

    தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உழவர் சந்தைகளில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி வெளிமார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக கிலோ 50 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று கிடுகிடுவென விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உழவர் சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    இதுபோல இஞ்சி கிலோ 220 ரூபாய்க்கு உழவர் சந்தைகளில் விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் 260 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சமீப காலமாக கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய் இன்று திடீரென விலை எகிறியது.

    உழவர் சந்தையில் 130 ரூபாய்க்கு பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 160 ரூபாய் வரை விற்பனையானது. பச்சை மிளகாய் சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர மற்ற காய்கறிகள் உழவர் சந்தைகளில் இன்று விற்பனை செய்யப்பட்ட விலை விவரம் வருமாறு:-

    உருளைக்கிழங்கு-ரூ.50, கேரட்-ரூ. 70, முட்டைகோஸ்-ரூ.28, பீட்ரூட்-ரூ.40, சவ் சவ்-ரூ.24, முருங்கை பீன்ஸ்-ரூ.110, பட்டர் பீன்ஸ்-ரூ.110, சோயா பீன்ஸ்-ரூ.110, பச்சை பட்டாணி-ரூ.170, நூல்கோல்-ரூ.70, டர்ணிப்-ரூ.60, குடை மிளகாய்-ரூ.70, காளிபிளவர்-ரூ.35, வெள்ளைபூண்டு-ரூ.200,

    கத்தரிக்காய்-ரூ.42, வெண்டைக்காய்-ரூ.26, புடலை-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.60, சுரைக்காய்-ரூ.24, பெரிய வெங்காயம்-ரூ.25, பூசணி-ரூ.18, சர்க்கரை பூசணி-ரூ.24, அவரை-ரூ.90, சிறிய பாகற்காய்-ரூ.140, பெரிய பாகற்காய்-ரூ.60, கொத்தவரை-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.42, புதினா-ரூ.40, கொத்தமல்லி-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.25, மொச்சைக்காய்-ரூ.55, முள்ளங்கி-ரூ.24 ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன.

    கடந்த சில நாட்களில் விற்கப்பட்ட விலையை ஒப்பிடுகையில் ஒவ்வொரு காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை விலை அதிகரித்துள்ளது.

    உழவர் சந்தைகளில் இந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட்டாலும் காய்கறி மார்க்கெட்டுகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க உழவர் சந்தைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் மதுரை பீ.பி.குளம், பழங்காநத்தம், அண்ணாநகர் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    • விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
    • வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும்.

    உடுமலை :

    தற்போது வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. குளிர்ந்த காற்று, அளவான வெப்பநிலை காணப்படுவதால் இந்த சீசனில் வெங்காயம் ஆரோக்கியமாக வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை எதிர்பார்த்து விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்துவிலை 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஓராண்டு பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி போன்றவை இந்த சீசனில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் வருவாய் ஈட்டவும், முதன்மை பயிரை பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் இருப்பதாலும் விவசாயிகள் அதை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை இருக்காது. அந்த சீசனில் அதிக விலை கிடைக்கும்.

    இந்த ஆண்டு மழை அதிகம் பொழிந்ததால் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான நீர் வளம் உள்ளது. இந்த சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இது சின்ன வெங்காய சாகுபடிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றனர்.

    • நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    • காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதியில் சின்னவெங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து ள்ளனர்.

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பா சனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.நாற்று நடவு முறையை பின்பற்றுகின்றனர். பிற காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது. எனவே அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த தை பட்டத்திலும், பின்பட்டத்தி லும் நடவு செய்யப்பட்ட சின்னவெ ங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இந்தாண்டு அறுவடை செலவும் பல மடங்கு அதிக ரித்து விட்டது.நடப்பு சீசனில் போதிய மழை இல்லாததால் பயிரின் வளர்ச்சி பாதித்தது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், கிலோ 20 - 30 ரூபாய்க்கு நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.எனவே அறுவடை சீசனில் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர்.
    • நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குடிமங்கலம்:

    உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்கறி பயிர்களில் சின்னவெங்காயம் பிரதானமாக உள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் நாற்று நடவு முறை மற்றும் நேரடியாக காய் நடவு முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதிகளில் பிரதான சாகுபடியாக சின்ன வெங்காயம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நோய்த்தாக்குதல், விலை சரிவு, சாகுபடி செலவினம் என பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

    இப்பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.சாகுபடியில் விதைப்பு பருவத்தில் மழை குறைந்தது, தொடர்ந்து பெய்த அதிக பனிப்பொழிவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களினாலும், களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்கள் குறித்து தொழில் நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில் நடப்பாண்டு 4 டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஒட்டுமொத்த வெங்காய பயிரும் கருதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்களில் 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    சின்ன வெங்காயம் சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற இடு பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் நடப்பாண்டு கடுமையான பனிப்பொழிவு, வெயில், மழையில்லாதது என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மகசூல் குறைந்துள்ளதோடு விலையும் குறைவாக உள்ளது. பல இடங்களில் வெங்காயம் பயிர் கருகி வீணாகியுள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை பகுதிகளில் ஆண்டு தோறும் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. அதே போல் தக்காளி, புடலங்காய், அவரைக்காய், பாகற்காய் என பந்தல் சாகுபடியிலும், மஞ்சள் தேமல் நோய் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்புகள் ஏற்படுவதோடு விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.

    மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

    • ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.
    • அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.

     குண்டடம்

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்து வருகிறோம்.

    மேலும் இந்த பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்னவெங்காயத்தை 100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள சின்ன வெங்காய பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் அதிக லாபம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×