search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாய் யானையுடன் சேர்ந்த மகிழ்ச்சியில் ஆற்றில் குளித்து ஆட்டம் போட்ட குட்டி யானை
    X

    வால்பாறையில் ஆற்றில் குளியலிட்டு மகிழ்ந்த குட்டி யானை

    தாய் யானையுடன் சேர்ந்த மகிழ்ச்சியில் ஆற்றில் குளித்து ஆட்டம் போட்ட குட்டி யானை

    • 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது.
    • காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் அவை இரவுநேரத்தில் அடர்ந்த காட்டுக்கு திரும்பி சென்றன.

    ஒரு குட்டியானை மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து, வழிதவறி பன்னிமடை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்தது. இதனை அடுத்த நாள் காலையில் பார்த்த தேயிலை தொழிலாளர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த குட்டி யானையை மீட்டு உணவளித்து பராமரித்தனர்.

    தொடர்ந்து பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாய் யானையுடன் சேர்ப்பதென வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக அந்த குட்டி யானையின் தாயை இனம் கண்டறியும் வகையில் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது காட்டு யானைகள் கூட்டம், பன்னிமடை அடிவாரப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர். குட்டியானை தாயுடன் ஒன்றுசேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது. அந்த கூட்டத்தில் தாயுடன் சேர்ந்த குட்டி யானையும் இருந்தது. பின்னர் அவை அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தன. அப்போது குட்டியானை தண்ணீரை கண்டதும் உற்சாகம் அடைந்தது. தொடர்ந்து ஆற்றுக்குள் இறங்கி உற்சாகமாக நீச்சல் அடித்து குளியல் போட்டது.

    அப்போது குட்டி யானைக்கு பாதுகாவலாக தாயும் ஆற்றுக்குள் இறங்கி குளித்தது. பின்னர் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றுவிட்டன.

    ஆற்றங்கரை பகுதியில் குட்டி யானை தண்ணீரில் நீந்தி விளையாடி மகிழும் அரிய காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். இதற்காக அவை அடிவாரப்பகுதியில் ஓடும் ஆற்றுக்கு வந்து செல்லும்.

    குறிப்பாக மதியம் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவும் செய்யும். இதன் ஒரு பகுதியாகதான் இந்த குட்டி யானை ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து குளித்துவிட்டு சென்று உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×