search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பயணிகளிடம் வரவேற்பு இல்லாத கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்
    X

    கோவையில் இருந்து பெங்களூரு புறப்பட்டுச்சென்ற வந்தே பாரத் ரெயில்

    பயணிகளிடம் வரவேற்பு இல்லாத கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்

    • 1-ந் தேதி முதல் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • வந்தே பாரத் ரெயிலுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கோவை:

    இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    தமிழகத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி தொடங்கியது. கோவை-சென்னை இடையே இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. தமிழகத்துக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுதான். அதனை தொடர்ந்து நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.

    கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது கோவை பொதுமக்கள் மற்றும் இங்கு தொழில் செய்து வரக்கூடியவர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    அடிக்கடி தொழில்முனைவோர்கள் வேலை விஷயமாக சென்னை சென்று வர வேண்டிய சூழல் இருந்தது. இவர்களின் முதல் விருப்பமாக ரெயில்கள் தான் உள்ளன. ஆனால் சாதாரண ரெயில்கள் சென்று சேருவதற்கு வெகுநேரம் ஆகி வந்தது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலால் 5 மணி 38 நிமிடங்களில் சென்று விடுகிறது. இதனால் இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் உற்சாக வரவேற்பு உள்ளது. தற்போதும் இந்த வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் முழுவதும் நிரம்பி சென்ற வண்ணம் இருக்கிறது.

    கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தென்னக ரெயில்வே கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவித்தது.

    அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் மோடி கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

    1-ந் தேதி முதல் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து 1.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரெயில் 6 அரைமணி நேரத்தில் பெங்களூருவை சென்றடைந்து வருகிறது. இந்த ரெயில் மொத்தம் 540 இருக்கைகளை கொண்டது.

    இந்த ரெயிலில் பயணிக்க சாதாரண சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1860-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது கோவை மக்கள் மற்றும் தொழில் முனைவோர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இருந்த போதிலும் ரெயில் செல்லும் நேரத்தால் கோவை-சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு பயணிகளிடம் குறைவாகவே உள்ளது. ரெயில் இயக்கம் தொடங்கிய 1 மற்றும் 2-ந் தேதிகளில் மட்டுமே ரெயிலில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டினர். ரெயில் பெட்டிகளும் பயணிகளால் நிரம்பி வழிந்தது. ஆனால் அதன்பிறகு 3-ந் தேதியில் இருந்து இந்த ரெயிலில் பயணிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. மொத்தம் உள்ள இருக்கைகளில் 350 இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இருக்கைகள் காலியாக கிடக்கின்றன. இதற்கு ரெயில் புறப்படக்கூடிய நேரம் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.

    கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.

    இங்கிருந்து அவசர தேவை மற்றும் வேலை விஷயமாக செல்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், ரெயில் புறப்படும் நேரம் தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு ரெயில் புறப்படுகிறது. அப்படி என்றால் நாம் நள்ளிரவிலேயே புறப்பட்டு ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வாறு வருவது மிகவும் சிரமம்.

    5 மணிக்கு பதிலாக 6 அல்லது 7 மணிக்கு ரெயில் இயக்கினால் நன்றாக இருக்கும். பயணிகளிடமும் இந்த ரெயிலுக்கு கோவை-சென்னை ரெயிலை போன்று வரவேற்பு கிடைக்கும்.

    கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் தினமும் கோவையில் இருந்து 6.10 மணிக்கு புறப்படுகிறது. இதனால் அந்த ரெயிலில் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். எனவே அதுபோன்று கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையின் நேரத்தை மாற்ற வேண்டும்.

    மேலும் வந்தே பாரத் ரெயில் என்றால் சாதாரண ரெயில்களில் இருந்து வேகமாக செல்லக்கூடியது. கோவை-சென்னை இடையே சாதாரண ரெயிலில் பயணிக்க 8 மணி நேரமாக இருக்கிறது. அதுவே வந்தே பாரத் ரெயிலில் 5 மணி 38 நிமிடங்களில் சென்று விடலாம். இதன் மூலம் 2 அரைமணி நேரம் மிச்சமாகிறது.

    அதுபோன்று பெங்களூரு செல்வதற்கு சாதாரண ரெயில்களில் 7 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரெயில் 5 மணி நேரத்தில் சென்றால் 2 மணி நேரம் மிச்சமாகும். ஆனால் இந்த வந்தே பாரத் ரெயில் 6 அரைமணி நேரத்தில் தான் செல்கிறது. இதுவும் பயணிகளிடம், மற்ற ரெயில்கள் 7 மணி நேரத்தில் சென்று விடுகிறது.

    இது வெறும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தான் செல்கிறது. அதற்கு இந்த ரெயிலில் பயணிப்பதை விட, மற்ற ரெயில்களிலேயே பயணித்து விடலாம் என தோன்றுகிறது.

    இதனாலும் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது. எனவே நேரத்தை மாற்றி அமைப்பதுடன், ரெயிலின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில் மற்றும் விமான பயணிகள் நலச்சங்க தலைவர் ஜமீல் கூறியதாவது:-

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். கோவையில் இருந்து ஏற்கனவே பெங்களூருவுக்கு டபுள் டக்கர் (உதய் எக்ஸ்பிரஸ்) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுதவிர மும்பை லோக்மான்ய திலக் ரெயிலும் சென்று வருகிறது.

    இந்த ரெயில்களிலும் பயணிகள் பயணித்து வருகின்றன. தற்போது வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

    தொடர்ந்து குறிப்பிட்ட சில மணி இடைவெளிகளில் பெங்களூருவுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயில் அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படுவதால் தான் அந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. மேலும் இந்த ரெயிலுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதனால் ரெயில் பயணிகள் அதிகளவில் உதய் எக்ஸ்பிரசை பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு இல்லாமல் போவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இரவு நேரத்தில் பெங்களூருவுக்கு போதுமான ரெயில்கள் இல்லை. எஸ்.ஆர்.டி.சி சார்பில் 11 வண்டிகள் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசனுக்கு செல்கிறது. இதில் 500 பயணிகள் தினமும் பயணிக்கின்றனர்.

    எனவே டபுள் டக்கர் எக்ஸ்பிரசை இரவு நேரத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் இரவில் பெங்களூரு பயணம் மேற்கொள்வோர் இந்த ரெயிலை பயன்படுத்துவார்கள்.

    மேலும் வந்தே பாரத் ரெயில் அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படுகிறது. அதிகாலையிலேயே ரெயில் நிலையத்திற்கு வருவது என்பது இயலாத காரியம். அதற்கு பதிலாக காலை 7 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    அவ்வாறு இயக்கும் பட்சத்தில் இந்த ரெயிலிலும் அதிகமான பயணிகள் பயணிப்பார்கள். எனவே ரெயில்வே நிர்வாகம், டபுள் டக்கர் எக்ஸ்பிரசை இரவு நேரத்துக்கு மாற்றுவதுடன், வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து புறப்படும் நேரத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×