search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய தமிழகம் கட்சி கூட்டணி பா.ஜ.க.வுடனா, அ.தி.மு.க.வுடனா?: கிருஷ்ணசாமி பேட்டி
    X

    புதிய தமிழகம் கட்சி கூட்டணி பா.ஜ.க.வுடனா, அ.தி.மு.க.வுடனா?: கிருஷ்ணசாமி பேட்டி

    • கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது.
    • நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம்.

    குனியமுத்தூர்:

    டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

    இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் தனது ஆதரவு பா.ஜ.க.வுக்கா? அல்லது அ.தி.மு.க.வுக்கா? என்பதை முடிவு செய்யாமல் இருந்து வருகிறது.

    நேற்று பிரதமர் மோடி திருச்சி வருகை தந்தார். அவரை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்க செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.

    இதனால் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்தித்தோம். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்கியது.

    ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் நான் நட்பு ரீதியாகவே பழகி வருகிறேன்.

    கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் எடப்பாடி, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்கூட்டணி பலமாக உள்ளது. நமது கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் தமிழகம் வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது கூட்டணியும் பலப்படும் என தெரிவித்தார். அவரும் வருவதாக உறுதியளித்தார். ஆனால் கடைசி வரை வரவே இல்லை.

    மேலும் அண்ணாமலை பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பு வரை அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி நீடித்தது. அவர் நடைபயணம் ஆரம்பித்த பின்னர் தான் கூட்டணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள், பிளவுகள் ஏற்பட்டன. குறிப்பாக அ.தி.மு.கவினர் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    பொதுவாக மாநில கட்சியுடன் தேசிய கட்சி கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிக்கு மாநிலத்தில் இருக்க கூடிய கட்சி தான் தலைமை தாங்கும்.

    நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம். கூட்டணி குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை தெரியப்படுத்துவோம்.

    தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எளிதாக தி.மு.கவை வென்று விட முடியும்.

    தி.மு.க தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளில் எதையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை. பாதிபாதியாகவே நிற்கிறது. மேலும் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. தி.மு.க. ஆட்சி ஏற்ற 4 மாதங்களிலேயே இது தெரிந்து விட்டது.

    இதனை பயன்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் முதலில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×