என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதை தவிர காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
    • கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    • தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
    • முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற் றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கும் 2023-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும், அதே ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பினமாக மகளிர் ஒருவருக்கும் 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து சுகிதா சாரங்கராஜிக்கும் வழங்கப்பட்டது.

    அவற்றின் தொடர்ச்சியாக, 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

    டி.இ.ஆர்.சுகுமார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து நேர்முகமாகப் பேட்டிகண்டு சுவையான செய்திகளை மக்களுக்கு வழங்கியவர் ஆவார். தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும் அவர் எழுதி வரும் "தலையங்கம்", வாரம் ஒருமுறை "பேனா மன்னன்" என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்து வரும் பதில்களும் மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்று உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் டி.இ.ஆர்.சுகுமார், உலக அளவில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சிறப்பான நிகழ்வுகளின்போது, அந்தந்த நாடுகளுக்குச் சென்று, செய்திகளைத் திரட்டி, தினத்தந்தி வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பான இதழியல் துறை அனுபவங்களையும் கொண்டுள்ளார். அத்துடன் முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நேர்மையுடனும் நெஞ்சுறுதியோடும் தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றிவரும் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றையதினம் 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 லட்சம் ரூபாய் பொற்கிழி ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு அச்சகப் பணியாளர்களுக்கு தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கையில், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 79 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.

    இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
    • மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அதாவது "மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத் திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.

    மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும்.
    • வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உண்மையில் தி.மு.க. அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை.
    • தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை 5-ம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நெய்யின் விலையை அரை கிலோ வுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.40, 5 கிலோவுக்கு ரூ.350, 15 கிலோவுக்கு ரூ.1155 வீதம் நேற்று முதல் உயர்த்தியுள்ளது. அதேபோல், ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் முதல் நெய், பன்னீர் ஆகிய பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி இப்போது திரும்பப் பெறப்பட்டிருப்பதன் மூலம் தான் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான நாடகம். இந்த ஏமாற்று வேலையை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    உண்மையில் தி.மு.க. அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை. மாறாக, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்காக செப்டம்பர் 22-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை நடத்தி வந்த ஏமாற்று நாடகத்தை இப்போது தி.மு.க. அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

    நெய்யுக்கும், பன்னீருக்கும் வழங்கி வந்த தள்ளுபடியை தி.மு.க. அரசு திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு முன் நெய், பன்னீர் ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டனவோ, அதே விலை மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை. அதனால் தான் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டண உயர்வு, 175 சதவீதம் வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, வாகன வரி உயர்வு, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு மறைமுகமாக உயர்வு என அடுக்கடுக்காக மக்கள் மீது சுமைகளை சுமத்தியது. அவற்றின் தொடர்ச்சியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் நெய் விலையை தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து தி.மு.க. தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.
    • இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    215 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மழை பாதிப்பால் இதுவரையில் முகாம்களில் யாரும் தங்க வைக்கப்படவில்லை. உணவு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.

    நேற்றிரவு ஒரு லட்சத்து 54 ஆயிரம் பாக்கெட் இரவு உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.

    மாநகராட்சி சமையல் கூடங்களில் சுகாதாரமாக உணவு தயாரிக்கப்பட்டு சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 5 லட்சத்து 1,600 உணவு பொட்டலங்கள் இதுவரையில் வழங்கப்பட்டன.

    • சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
    • கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை எழிலகத்தில உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

    * ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம்.

    * நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    * பயிர்சேத விவரங்களை உடனடியாக கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    * கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    * தற்போதைய மழையில் 85 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    * கனமழையால் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * நீர்நிலைகள் தூர்வாராதது தொடர்பாக இ.பி.எஸ். அரசியலுக்காக பேசுகிறார்.

    * நாளை காலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.
    • ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி கி.வீரமணி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு #DravidianModel நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது.
    • பேசின்பாலம், மணலி புதுநகரில் தலா 20 செ.மீ., நுங்கம்பாக்கம் 17. செ.மீ. என அதிகனமழை பெய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 13 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ்அவுஸ் 23 செ.மீ., பேசின்பாலம், மணலி புதுநகரில் தலா 20 செ.மீ., நுங்கம்பாக்கம் 17. செ.மீ. என அதிகனமழை பெய்துள்ளது.

    தமிழகத்தல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் எண்ணூரில் 26 செ.மீ. மழை பெய்து உள்ளது.

    பாரிமுனை-25 செ.மீ., ஐஸ்அவுஸ்-22, மணலிபுதூர், பொன்னேரி தலா 21 செ.மீ., பேசின்பாலம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர் தலா 20 செ.மீ., மணலி, செங்குன்றம் தலா 19 செ.மீ., விம்கோ நகர், வடபழனி, டி.ஜி.பி. ஆபிஸ், மேடவாக்கம் தலா 18 செ.மீ., அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கத்திவாக்கம் தலா 17 செ.மீ.,

    புழல், சாலிகிராமம், சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம் தலா 16 செ.மீ., பெரம்பூர், அமைந்தகரை தலா 15 செ.மீ., எம்.ஜி.ஆர். நகர், சோழவரம், நாராயணபுரம், அடையார் தலா 14 செ.மீ., காசிமேடு, வேளச்சேரி, அண்ணா பல்கலைக்கழகம் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும்.
    • கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

    பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்தனர். பல கடிதங்கள் அளிக்கப்பட்டன.

    இதையடுத்து, பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் கடந்த 28-5-2025 அன்று காலாவதியாகிவிட்டது என்றும், புதிய தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 30-5-2025 முதல் ராமதாஸ் கட்சியின் புதிய தலைவராக இருப்பதாகவும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும். மேலும் அன்புமணி ராமதாசே கட்சியின் தலைவராக உள்ளார்.

    ராமதாஸ் கட்சியின் தலைவராக இருப்பதாகக் கூறினால், கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான விஷயத்தைத் தீர்க்க பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

    இந்நிலையில், பா.ம.க.வை மீட்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குழு அமைத்துள்ளார். குழுவில் ஜி.கே.மணி, சதாசிவம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    அன்புமணியிடம் இருந்து பா.ம.க.வை மீட்க ராமதாஸ் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×