என் மலர்tooltip icon

    சென்னை

    • நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைச்சர் துரைமுருகன் இத்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள், அதேபோல், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அதேபோல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது.
    • தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணாசாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்

    சென்னை:

    சென்னை தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலங்கள் கடந்த 2 வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த 2 மேம்பாலங்களும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை சி.ஐ.டி. நகரில் தற்போது 1.2 கி.மீ நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சி.ஐ.டி. நகர் மேம்பாலத்தை, உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக உஸ்மான் சாலையின் வடக்கு பகுதியும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 2 மேம்பாலங்களும் ஒரே அகலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பணி நடைபெற்று வருகிறது.

    இந்த மேம்பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது. இதை சரி செய்ய சி.ஐ.டி. நகர் மேம்பாலம், ரங்கநாதன் தெருவுக்கு முன்பே முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் தரை மட்டத்தில் 100 மீட்டர் தூரம் சென்று, பிறகு புதிய மேம்பாலத்தில் ஏற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் பனகல் பூங்கா நோக்கி செல்லும் பொதுமக்களுக்கு ரங்கநாதன் தெருவுக்கு அருகில் ஒரு வெளியேறும் வழியும் இருக்கும். மேலும் சர்வீஸ் சாலையை உருவாக்க அருகில் உள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணா

    சாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்.

    இதேபோல் சென்னை ஆர்.கே.நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எனவே தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதம் திறக்கப்பட உள்ளன. இதை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையிலும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தென் மாநிலங்களிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோடை வெயில் உக்கிரமாக தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்து உள்ளன.

    குறிப்பாக இந்த தடவை கோடை காலத்தில் வெப்ப அலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மதியம் நேரத்தில் உடலை சுட்டெரிக்கும் வகையில் வெப்ப அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நாட்டில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வெப்ப தாக்கம் இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் மாநிலங்களிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வெப்ப தாக்கத்தின் பாதிப்பை இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

    தமிழகத்தில் வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் வெப்ப தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

    சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதியம் நேரத்தில் வெப்ப காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அத்தியவாசிய பணிகளுக்கு வெளியில் செல்பவர்கள் குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது என்றும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

    • 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
    • ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.

    டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

    புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும். புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை.
    • பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் உள்பட உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85 சதவீதம் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.

    துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

    கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. எனவே அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    • இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது.

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின்பு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.
    • பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும்.

    * தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து முதல் மாநிலமாக 14-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

    * அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசித்தோம்.

    * சென்னை கூட்டத்தில் 3 மாநில முதலமைச்சர்கள், கர்நாடக துணை முதல்வர், முக்கிய கட்சி தலைவர்கள் நேரடியிலும், ஒடிசா முன்னாள் முதல்வர் காணொலியிலும் பங்கேற்றனர்.

    * தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என தீர்மானம்.

    * தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சென்னையில் பிறமாநில கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம்.

    * முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.

    * பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும் என்றார். 

    • சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது
    • பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

    * அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்

    * அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    * 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    என்று தெரிவித்துள்ளார்.

    • திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில்
    • படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி தாம்பரத்தில் இருந்து மாா்ச் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06048) பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06047) இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். இதில் இருக்கை வசதி கொண்ட இரு ஏசி வகுப்பு பெட்டிகள் மற்றும் 10 சாதாரண பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்பு லியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மரு வத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை-பெங்களூரு

    பெங்களூரில் இருந்து 28-ந்தேதி முதல் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07319) பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07320) இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலார் பேட்டை, ஆம்பூா், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதும் இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் தொடக்க நாளான 17-ந்தேதி தங்கம் விலை சவரன் ரூ.65,680-க்கு விற்பனையானது. அதன்பின் தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை வார இறுதிநாளான 22-ந்தேதி சவரன் ரூ.65,840-க்கு விற்பனையாது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,215-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும் விற்பனையானது.

    கடந்த வாரம் அதிரடியாக விற்பனையான வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160

    20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480

    19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-03-2025- ஒரு கிராம் ரூ.110

    22-03-2025- ஒரு கிராம் ரூ.110

    21-03-2025- ஒரு கிராம் ரூ.112

    20-03-2025- ஒரு கிராம் ரூ.114

    19-03-2025- ஒரு கிராம் ரூ.114

    • விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
    • மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.

    அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேசுவார்கள். அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

    அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.

    எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.

    • தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.
    • கூட்டத்தில் 18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னையில் இன்று பிற்பகலில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இக்கூட்டத்தில் 18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. 

    ×