என் மலர்tooltip icon

    சென்னை

    • நாங்கள் அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும்.
    • எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை.

    இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேருவுக்கு எதிராக நமபிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    அதற்கு சபாநாயகர் அப்பாவு, 'எதிர்க்கட்சியினர் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் பரிசீலனையில் உள்ளது. அதை இன்று எடுத்துக்கொள்ள முடியாது' என்று கூறினார்.

    இதையடுத்து சபாநாயர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

    பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்கு வழங்கப்படுமா? என்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    நாங்கள் அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும். ஒரு கட்சி வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

    சேருகின்ற வாக்குகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எதிரிகளை அகற்ற வேண்டும் என்ற கருத்து உள்ள கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் முதல் கட்டமாக பா.ஜ.க. எங்களுடன் இணைந்திருக்கிறது.

    எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்திருக்கிறது. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கிறது.

    ஆனால் எந்த கட்சிகள் வரும் என்பதை வெளியில் சொல்ல முடியாது. சிலவற்றை தான் வெளியில் சொல்ல முடியும்.

    அ.தி.மு.க. எங்கள் கட்சி. நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதற்கு தி.மு.க.வினர் ஏன் எரிச்சல் படுகிறார்கள். ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள்? இன்றைக்கு அவர்களுக்கு பயம் வந்து விட்டது.

    அ.தி.மு.க. ஒரு பிரதான கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. எங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். நாங்கள் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது.

    நீங்கள் ஏன் எரிச்சல் படுகிறீர்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்கள் இஷ்டம். இவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள், அவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள் என்கிறார்கள். இதை சொல்ல தி.மு.க. வினருக்கு அருகதை இல்லை. இதை மக்கள் முடிவு செய்வார்கள். வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.

    வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அரசு என்று அமித்ஷா சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆனால் ஆட்சியில் பங்கு என்று அவர் சொல்லவில்லை. ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது.

    டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு என்னுடைய பெயரை சொல்லி அமித்ஷா சொன்னார். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி நீங்கள் ஏதேதோ கண்டு பிடிக்கும் வேலையை விட்டு விடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    தி.மு.க.வை வீழ்தத வேண்டும் என்று ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

    அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என்றுதான் அமித்ஷா கூறினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் கூட்டணி அல்ல. ஆட்சியில் பா.ஜ.க.வினருக்கு பங்கு என கூறவில்லை.

    சட்டசபையில் இன்று சட்டமன்ற பேரவை விதி 72-ன் கீழ் அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையை தெரிவிக்கும் தீர்மானத்தை அ.தி.மு.க. சார்பாக நாங்கள் கொண்டு வந்தோம். அது குறித்து அவையில் பேசுவதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். அதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

    அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன், சகோதரருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இடங்கள், இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் 7.4.25 அன்று மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியதுடன், சோதனைக்கு பின்பு மேல் விசாரணை நடத்தி 11.4.2025 அன்று விளக்கமான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கும் போது அளித்த உறுதி மொழியை மீறி இந்து மதத்தை பற்றியும், பெண்கள் பற்றியும் அவர் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு அவதூறாக பேசியது, அமைச்சர் பதவி ஏற்கும் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறிய செயலாகும்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையான டாஸ்மாக் நிறுவனம் மற்றும் கடைகள் தனியார் மதுபான ஆலைகளில் மத்திய அமலாக்கத்துறை 6.3.2025 அன்று சோதனை நடத்தியது. முதல் கட்டமாக ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

    எனவே இந்த காரணங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாங்கள் கடிதம் கொடுத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்ற போது அதை அப்போதைய சபாநாயகர் அனுமதி கொடுத்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேற்கோள் காட்டி நாங்கள் பேசினோம். எங்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்த காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

    தமிழகத்தில் மக்களிடம் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அமலாக்கத்துறை பல்வேறு துறைகளில் சோதனை நடத்தி இந்த துறையில் இவ்வளவு கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று செய்தி வெளியிடுகிறது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வெளியிடப்படுகிறது.

    ஒரு அமைச்சர் இந்து மதத்தை புண்படுத்துகிற விதமாகவும், பெண்களை இழிவுபடுத்துகின்ற விதமாகவும் பேசி இருக்கிறார். இதெல்லாம் முக்கிய பிரச்சனைகளாக இந்த ஆட்சிக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அவையில் விவாதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. இதை விளக்குவது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • தற்போது பா.ஜ.க. யுவமோர்ச்சா தலைவராக கர்நாடக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பணியாற்றி வருகிறார்.

    தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து இவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்தியில் பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்த நிலையில், பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    பா.ஜ.க. யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பா.ஜ.க. யுவமோர்ச்சா தலைவராக கர்நாடக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
    • அடுத்த 12 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 12 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்துட்டது.
    • வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா? என்பது தேர்தலின் போது தான் தெரியும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது, செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சரவை மீதான நம்பிக்கை போய்விட்டது.

    * 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி விதி 72-ன் கீழ் சபாநாயகரிடம் கடிதம் அளித்தோம்.

    * கடிதம் அளித்தும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

    * கடந்த காலங்களில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

    * பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில் மாநிலத்தில் நிலவக்கூடிய பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் ஜீரோ ஹவரில் பேச பல முறை தி.மு.க.விற்கு அனுமதி அளித்தோம், இன்று எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    * நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்துட்டது.

    * வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா? என்பது தேர்தலின் போது தான் தெரியும்.

    * தேர்தல் நெருங்குவதால் மாநில சுயாட்சி குறித்து பேசி தி.மு.க. அரசு திசை திருப்புகிறது என்றார்.

    முன்னதாக, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர், கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்.. சபாநாயகரை கண்டிக்கின்றோம்.. மு.க.ஸ்டாலினை கண்டிக்கின்றோம் என முழக்கமிட்டனர். 

    • அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    • சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

    3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம் என அதிமுகவினர் சபாநாயகரிடம் முறையீடு செய்தார்கள்.

    இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "அரைமணி நேரத்திற்கு முன்னதாக கடிதம் கொடுத்தீர்கள், அது பரிசீலனையில் உள்ளது. நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை. ஏற்கனவே அலுவல் நிறைய இருக்கிறது அதனால் இன்று எடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ரூ.68 ஆயிரம், ரூ.69 ஆயிரம், ரூ.70 ஆயிரம் என புதிய உச்சங்களை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உயரத்தையும் எட்டியது. நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்றும் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,815-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,520-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    14-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    13-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    12-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    11-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-04-2025- ஒரு கிராம் ரூ.110

    14-04-2025- ஒரு கிராம் ரூ.108

    13-04-2025- ஒரு கிராம் ரூ.110

    12-04-2025- ஒரு கிராம் ரூ.110

    11-04-2025- ஒரு கிராம் ரூ.108

    • இன்றைய முக்கிய செய்திகள்...
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்.
    • அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றினால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடைகளின் பெயர் மற்றும் அறிவிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    துறைத்தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு, பிற அலுவலங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவை.
    • முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் குரியன் ஜோசப்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், தமிழக உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று நேற்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த நிலையில், மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவை. மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம், ஊதியம் வாங்கமாட்டேன் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் ஏற்றுக் கொண்டார் என்றார்.

    மத்திய-மாநில அரசுகளின் அதிகார உறவுகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டு உள்ள உயர்மட்டக்குழுவின் தலைவரான நீதிபதி குரியன் ஜோசப், 1979-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் வக்கீல் பணியை தொடங்கியவர். 1987-ல் அரசு வக்கீலாகவும், 1994-1996 இடைபட்ட காலங்களில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும், 1996-ல் மூத்த வக்கீலாகவும் நிலை உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2000-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2 முறையும், இமாசலபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி முதல் 2013-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி வரையும் இருந்தார். அதனையடுத்து 2013-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 5 ஆண்டுகள் பணியாற்றி, 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    மேலும் கல்வி, சட்டச் சேவைகள் சார்ந்து பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 2017-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். நீதிபதி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர கொலீஜியத்தில் சீர்திருத்தம் தேவை என்று கூறியவர். குறிப்பாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் குரியன் ஜோசப்.

    • மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
    • முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை மாற்றிய சட்டம் உச்சநீதிமன்றத்தில் வழியே சமீபத்தில் அமலுக்கு வந்தது. மேலும் முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    • கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    நாளை காலையில் சட்டசபையில் சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவல்கள் நாளை பிற்பகலில் நிறைவடைந்துவிடும்.

    அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
    • பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும்.

    மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது. நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநிகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    ×