என் மலர்tooltip icon

    சென்னை

    • நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும்.
    • சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

    அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை எழுத இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் (ஹால்டிக்கெட்டில்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தவகையில் தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.

    வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச்செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது உள்ளிட்ட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக கத்திரி வெயிலின்போது வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வருகிற 28-ந்தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து இயற்கை மருத்துவர்கள் கூறும்போது, 'அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குறிப்பாக, பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கோடைகாலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும்' என்கின்றனர்.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறும்போது, 'தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 6-ந்தேதி இதேபோன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 7, 8-ந்தேதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதேபோல், இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது' என்றார்.

    • பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
    • படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

    இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது.

    பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பைசன் திரைப்படம் நடப்பு ஆண்டின் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை, இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வௌியிட்டுள்ளார்.

    • ஸ்டாலின் ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
    • சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுவாக எனக்கு பாராட்டு விழா என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

    விழாவுக்கு ஒப்புக் கொண்டதே தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்புதான்.

    ஸ்டாலினின் ஆட்சி சமூக நீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும். சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் தகுதிப்படுத்திக் கொள்ள கடுமையக உழைப்பேன்.

    ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு நிர்ணயித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இனி மசோதாவை நிறுத்தி வைத்தால் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

    முதலமைச்சராகி மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டினால், After all மத்திய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட, Temporary-அ தங்கி இருக்கிற ஒரு ஆளுநர் அவைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற ஓட்டுக்கு என்ன மரியாதை ?

    பிரதமரின் உரிமைகளை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பார்களா ?

    ஆளுநர் தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்.

    திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு, இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெற உழைக்கிறோம்.

    அறிவியலை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும், மூட நம்பிக்கைகளை கற்றுத் தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது.

    இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலை சமூக வலைத்தளங்களில் தேட வேண்டாம்.

    படிக்காமலேயே பெரிய ஆளாகிவிடலாம், யூடியூப் உள்ளிட்டவற்றில் சம்பாதிக்கலாம் என சொல்வார்கள் அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள்.

    கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. உலகம் மிகப்பெரியது. அதைப்பார்க்க கல்வி என்ற கண்ணாடி வேண்டும். சாதி, மதம் என்று சுருங்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக- பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல வெற்றிக் கூட்டணி.
    • இன்னும் பல கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரப்போகின்றன.

    சென்னை தி.நகரில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இது எங்கள் கட்சி, நாங்கள் வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்திருக்கிறோம்.

    அதிமுக- பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல வெற்றிக் கூட்டணி.

    இன்னும் பல கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரப்போகின்றன.

    அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

    வெற்றி கூட்டணி அமைத்திருக்கிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுக்குள் இணையும்.

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என முதலமைச்சர் நினைத்தார்.

    திமுகவுக்கு அதிகாரம் தான் முக்கியம், கொள்கை முக்கியம் இல்லை.

    எந்தக் காரணத்தையும் கொண்டு திமுக மீண்டும் ஆட்சி வரக் கூடாது என்பது மக்களின் எண்ணம்.

    பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா ? நீங்கள் மட்டும் யாருடனும் கூட்டணி வைப்பீர்கள்?

    அதிமுகவை மிரட்டி பாஜக பணிய வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

    பச்சோந்தியை விட வேகமாக நிறத்தை மாற்றுவது போல் கூட்டணியை மாற்றும் திமுக

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
    • அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா தொடங்கியது.

    மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.

    துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.

    • திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    • கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கைகள் குறித்து விவாதிக்க முடிவு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கைகள் குறித்து திமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
    • எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    தேமுதிக கட்சியில் இருந்து தான் விலகுவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை என அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேமுதிக பொதுக்குழுவில் நான்கு பேர் துணை பொது செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    அதில் ஒரு பதவி எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அது கிடைக்கவில்லை என்பதால் வருத்தம் அடைந்தேன்.

    உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

    ஆனால், எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை தேமுதிகவில் தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.

    இந்நிலையில் இந்த கூட்டத்தில்," சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து, பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.

    திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது.

    அதனால், சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • 7 பாடல்களை பாமக சார்பில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலை பா.ம.க வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராமதாஸை முன்னிலைப்படுத்தி அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    மே 11ம் தேதி வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுவதை ஒட்டி 7 பாடல்களை பாமக சார்பில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், சித்திரை முழுநிலவு மாநாடு 2ம் பாடலை பாமக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    • கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
    • த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    அண்ணா நகர்:

    அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் டாஸ்மாக் மது பான கடை செயல்பட்டு வருகிறது.

    கடைக்கு எதிர்ப்புறம் ரேஷன் கடை, அரசு மருத்துவமனை, சுமார் 2000 பள்ளி மாணவிகள் படித்து வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம் அமைந்துள்ளது.

    இதன் அருகே அமைந்து உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு வரும் குடிமகன்கள் தினந்தோறும் சாலையில் இருந்தபடி மதுபானங்களை குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இந்த மது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

    மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் செனாய் நகர் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.பழனி தலைமையில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் பற்றி மாவட்ட செயலாளர் பழனி கூறியதாவது:-

    பொது மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்து இருந்தோம். எங்கள் மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று போராட்டம் நடத்தப்போவதாக போலீசாரிடமும் உரிய அனுமதியை பெற்று இருந்தோம். ஆனால் திடீரென போராட்டம் நடத்துவதற்கு எங்களை போலீசார் அனுமதிக்காமல் கைது செய்து உள்ளனர். வேண்டுமென்றே த.வெ.க.வினரை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்று வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு பல்வேறு இடங்களில் நடக்கும் வணிகர் தின மாநாடுகளில் பங்கேற்பது வழக்கம்.

    வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக வணிகர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் கூறுகையில், 'வணிகர் தினத்தையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகளின் வரத்து அதிக அளவில் இருக்காது. எனவே வணிகர் தினத்தையொட்டி வருகிற 5-ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் சில கடைகள் திறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×