என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி த.வெ.க.-வினர் போராட்டம் - போலீசாருடன் தள்ளுமுள்ளு - பரபரப்பு
- கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
- த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
அண்ணா நகர்:
அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் டாஸ்மாக் மது பான கடை செயல்பட்டு வருகிறது.
கடைக்கு எதிர்ப்புறம் ரேஷன் கடை, அரசு மருத்துவமனை, சுமார் 2000 பள்ளி மாணவிகள் படித்து வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம் அமைந்துள்ளது.
இதன் அருகே அமைந்து உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு வரும் குடிமகன்கள் தினந்தோறும் சாலையில் இருந்தபடி மதுபானங்களை குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இந்த மது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் செனாய் நகர் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.பழனி தலைமையில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் பற்றி மாவட்ட செயலாளர் பழனி கூறியதாவது:-
பொது மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்து இருந்தோம். எங்கள் மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று போராட்டம் நடத்தப்போவதாக போலீசாரிடமும் உரிய அனுமதியை பெற்று இருந்தோம். ஆனால் திடீரென போராட்டம் நடத்துவதற்கு எங்களை போலீசார் அனுமதிக்காமல் கைது செய்து உள்ளனர். வேண்டுமென்றே த.வெ.க.வினரை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.