என் மலர்
சென்னை
- வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு .
- 12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் பெரும்பாலான இடத்தில் பரவலாக மழை பெய்தது. அதன்பின் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக மதியம் நேரத்தில் அனல் காற்று வீசி வருகிறது.
கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மதியம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வரும் 13ஆம் தேதி வரை சென்னையில் மழை தொடரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
- சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 8 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2021 முதல் 2023 வரை ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது என தமிழக அரசு வாதம்.
- தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில், 60% தொகையை ஒன்றிய அரசும் 40% தொகையை மாநில அரசும் அந்தந்த பள்ளிகளுக்கு அளிக்கின்றன. ஆனால், 2021 முதல் 2023 வரை ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது என தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதத்தின்போது தெரிவித்தார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
- மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், முகப்பேர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மேலும் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காட்டிலும் கனமழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வறுத்தெடுத்த நிலையில் மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது.
- நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா?
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி "என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது. நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா? அல்லது சேர்ந்து விட்டேனா?. திமுக-வை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓய மாட்டேன். உறங்க மட்டேன்.
பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஒரு அற்புதமான அணையாத விளக்கு. எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிசாமி இருக்கமாட்டார்." தெரிவித்துள்ளார்.
- 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்
- 5.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது.
முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்
2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்
3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்
4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -இராணிப்பேட்டை மாவட்டம்
5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்
6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்
7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்
8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்
9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்
10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தருமபுரி மாவட்டம்
மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது.
- கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது என தெரிவித்தார்.
சென்னை:
கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டி இருக்கின்றன. அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?
மறந்துவிடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என தெரிவித்துள்ளார்.
- நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 12-ந்தேதி வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்தார்.
- சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும் என எக்ஸ் பக்கத்தில் பதிவு.
வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "இனி, Chennai Central, Metro Rail நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக்கொள்ளச் சென்னை புத்தகப் பூங்கா-வைத் தொடங்கியுள்ளோம்!
சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.
- வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
- சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை:
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம ஷேசாத்திரி என்ற ஒரு மாணவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது எனவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வாதிட்டார்.
480 மாணவர்கள் எழுதியதாகவும், 13 மாணவர்கள் மட்டுமே வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ. ஆர்.எஸ்.சுந்தரேசன் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என மறுத்து விட்டனர்.
அதே வேளையில் தேர்வு மையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்து உள்ளனர்.
- ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் எம்எஸ் தோனி இணைந்துள்ளார்.
- எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.
அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.
இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளநிலையில், எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எம் எஸ் தோனிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
Hall of Fame-இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள். அதிகமுறை ஒருநாள் அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டப்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.
அமைதியால் தலைமைப் பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர். எப்போதும் Thala For A Reason என்றே போற்றப்படுவீர்கள்.
- சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று மாலை இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது.
- ஏற்கனவே சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று மாலை இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. ஐகோர்ட்டு, சி.பி.ஐ. அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் நடந்தது. இந்த சோதனையில் அது வெறும் புரளி என தெரிய வந்தது.
ஏற்கனவே சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த நிலையில் 3-வது முறையாக தற்போது சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.






