என் மலர்tooltip icon

    சென்னை

    • தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பயணம் நேற்று தொடங்கியது.
    • ஜூலை 1-ந்தேதி உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை முதலமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    அண்ணா அறிவாலயத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற தலைமை பயிற்றுனர்களுக்கான பயிற்சியை தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார். அதன்பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் ராஜா அளித்த பேட்டி வருமாறு:-

    தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பயணம் நேற்று தொடங்கியது. இந்த பயணத்தில் 234 தொகுதிகளிலும் இருந்து எங்களது அணியைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அடுத்ததாக இந்த 234 பேரும் நாளை (வெள்ளிக்கிழமை) 27-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுப்பர்.

    இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஜூலை 1-ந்தேதி உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை முதலமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 2-ந்தேதி இந்த பணியை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்வர். ஜூலை 3-ந்தேதி இது மாபெரும் இயக்கமாக மேற்கொள்ளப்படும். இதுபோன்ற முயற்சி இதுவரை இந்தியாவில் எந்த கட்சியிலும் நடந்தது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களாகவே மந்திரவாதி ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
    • மாலை நேரங்களில் மட்டும் சங்கு ஊதிய மந்திரவாதி ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் வந்திருக்கிறார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அவர் கூறியுள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆவி புகுந்து விட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எம்.ஜி.ஆர். மாளிகை என்று அழைக்கப்படும் தலைமைக் கழக பகுதியில் கடந்த சில நாட்களாகவே மந்திரவாதி ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

    மாலை நேரங்களில் மட்டும் இது போன்று சங்கு ஊதிய அந்த மந்திரவாதி ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் வந்திருக்கிறார்.

    இது பற்றி அறிந்ததும் அவரை பிடித்து அலுவலகத்தில் இருந்தவர்கள் யார் நீங்கள்? எதற்காக இதுபோன்று சங்கு ஊதிக்கொண்டு சுற்றுகிறீர்கள் என கேட்டு உள்ளனர். இதற்கு சரியாக பதில் அளிக்காமல் ஒரு வாரத்துக்கும் மேலாக நான் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் என்னை வந்து கேட்கிறீர்களா என கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இதற்கிடையே சில நம்பூதிரிகள் அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் முன்புறம் உள்ள சிலையை பின்பக்கமாக மாற்றி வைக்குமாறு அறிவுரை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சி அலுவலகத்துக்குள் ஆசைகள் நிறைவேறாத ஆத்மா ஒன்று ஆக்ரோஷமாக சுற்றி வருவதாகவும் நம்பூதிரிகள் தெரிவித்திருப்பதாக பரபரப்பான திகில் ஊட்டும் வகையிலான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, அ.தி.மு.க. பற்றி பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்றாகும். அதுபோன்று எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்று ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

    • விசாரணையின் போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
    • கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    விசாரணையில், நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்கள் சிலரிடம் CODE WORD-ல் பேசியிருந்தது தெரியவந்தது.

    இதன்மூலம் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு ஏதேனும் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் வாங்குவதற்கு நடிகர் கிருஷ்ணா தனது கார் ஓட்டுநரின் செல்போன் எண்ணை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

    நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துள்ளதால் இவ்வழக்கில் தொடர்பில் உள்ளவர்களின் பட்டியல் நீளும் என்று கூறப்படுகிறது. 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    28-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    29-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கிருஷ்ணா வீட்டில் இருந்த பீரோக்கள் அலமாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
    • நடிகர் கிருஷ்ணா வெப் சீரியல் ஒன்றை வெளியிடுவது தொடர்பாக பிரசாத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருப்பதாக தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

    அதே நேரத்தில் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மனும் அனுப்பி இருந்தார்கள்.

    இதனை ஏற்று நடிகர் கிருஷ்ணா நேற்று மதியம் 2 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார்.

    சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    இந்த விசாரணையின்போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    இதற்கு பதில் அளித்த கிருஷ்ணா நான் கொகைன் உள்ளிட்ட எந்த போதைப்பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை என்றும் அவைகளை பயன்படுத்தும் அளவுக்கு எனது உடல்நிலை கிடையாது எனவும் கூறியுள்ளார்.

    இருப்பினும் கிருஷ்ணா போதைப்பொருட்களை பயன்படுத்தி உள்ளாரா என்பதை கண்டறிவதற்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.

    இதில் கிருஷ்ணா போதைப்பொருட்கள் எதையும் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இருப்பினும் கிருஷ்ணாவிடம் 20 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை இன்று காலையிலும் நீடித்தது. இன்று காலை 9 மணியளவில் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்த திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் கிருஷ்ணாவிடம் மீண்டும் விசாரணையை தொடங்கினார்.

    போலீஸ் நிலையத்தில் வைத்து நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்பது போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு அவரது வீட்டில் அனைத்து அறைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.

    வீட்டில் இருந்த பீரோக்கள் அலமாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் கிருஷ்ணா பயன்படுத்திய காரிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கிருஷ்ணாவின் வீட்டிலிருந்தோ காரில் இருந்தோ போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

    இருப்பினும் போலீசார் கிருஷ்ணாவிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க. பிரமுகரான பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவருடன் யார்-யார் தொடர்பில் இருந்தார்கள்? பண பரிமாற்றத்தில் ஈடுபட்டார்கள்?என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடத்தியபோது நடிகர் கிருஷ்ணாவும் பண பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

    இதன் அடிப்படையிலேயே கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

    அ.தி.மு.க. நிர்வாகி பிரசாத்துடன் எந்த மாதிரி தொடர்பில் இருந்தீர்கள்?

    உங்கள் இருவருக்கும் இடையே எந்த அடிப்படையில் பண பரிமாற்றம் நடைபெற்றது என்பது போன்ற கேள்விகளும் கிருஷ்ணாவிடம் கேட்கப்பட்டு உள்ளது.

    இதற்கு பதிலளித்த கிருஷ்ணா சினிமா தொடர்பாக இருவருக்கும் இடையே நட்பு இருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அ.தி.மு.க. பிரமுகரான பிரசாத்துடன் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    நடிகர் கிருஷ்ணா வெப் சீரியல் ஒன்றை வெளியிடுவது தொடர்பாக பிரசாத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருப்பதாக தெரிகிறது. இதற்காகவே அவர் பிரசாத்துக்கு பணம் அனுப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இருப்பினும் இது உண்மையான தகவல் தானா? இல்லை போதைப்பொருளுக்காக அவர் பணம் ஏதும் கொடுத்தாரா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை தீவிரபடுத்தப்பட்டு வருகிறது

    இந்த விசாரணை முடிவில் தான் ஸ்ரீகாந்த் போன்று நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

    கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் முன்பு பத்திரிகையாளர்கள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடமும் போதைப்பொருள் வழக்கில் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருவது தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கிருஷ்ணாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் மருந்துகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை போலீசார் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சோதனையின் முடிவிலும் போதைப்பொருள் வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

    எனக்கு இரைப்பை அலர்ஜி இருக்கிறது. அது மட்டுமின்றி இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதனால் அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறேன். தான் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக வெளியாகும் தகவலில் எந்த உண்மையுமில்லை.

    அதுபோன்ற போதைப்பொருளை பயன்படுத்தினால் நான் உயிருடனே இருக்க முடியாது என்றும் நடிகர் கிருஷ்ணா போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ்களையும் அவர் போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

    நடிகர் கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் அளித்திருப்பதாகவும் தெரிகிறது.

    • நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்கள் சிலரிடம் CODE WORD-ல் பேசி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு ஏதேனும் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அவரிடம் பிரசாத்துடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்கள் சிலரிடம் CODE WORD-ல் பேசி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா தனது நண்பர்களோடு வாட்ஸ்-அப் சாட்டிங் மூலமாக பல்வேறு தகவல்களை பரிமாறி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் நான் பெற்றுக் கொண்டேன்... எடுத்துக் கொண்டேன் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. இதனை மையமாக வைத்தே கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன்மூலம் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு ஏதேனும் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    நேற்று மதியம் 2 மணியில் இருந்து இன்று மதியம் வரையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நீண்டு கொண்டு செல்வதால் அவர் கைது செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ஸ்ரீகாந்துடனான தொடர்பு குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதற்கு பதில் அளித்த நடிகர் கிருஷ்ணா, "ஸ்ரீகாந்த் எனக்கு நல்ல நண்பர். மற்ற படி அவருடன் எனக்கு தவறான தொடர்புகள் எதுவும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

    கிருஷ்ணாவுடன் விசாரணை நீண்டு கொண்டு செல்வதால் அவர் கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி போலீசாரிடம் கேட்டபோது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அடுத்து என்ன நடைபெறும் என்று இப்போதே தெரிவிக்க முடியாது என கூறியுள்ளனர்.

    • தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
    • தி.மு.க. பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகி முத்துபாலகிருஷ்ணனை, தி.மு.க. நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்று செய்திகள் வருகின்றன.

    இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடந்து செல்ல முனையுமா?

    தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு தி.மு.க.-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?

    சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள தி.மு.க. பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.
    • கலைஞர் கருணாநிதி படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

    சென்னை:

    தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது 20 வயது முதல் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்து உள்ளார்.

    80 ஆண்டுகாலம் பொது வாழ்வு, 5 முறை முதலமைச்சராக ஆட்சிபுரிந்தது மட்டுமல்லாமல், 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களையும், 15 புதினங்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.

    "நண்பனுக்கு", "உடன் பிறப்பே" எனும் தலைப்புகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களும் "கரிகாலன்" என்னும் பெயரில் கேள்வி பதிலும் எழுதி இருக்கிறார்.

    இதைத் தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும்.

    பள்ளிப் பருவம் தொடங்கி அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் பாராட்டுக்குரியவை. கவித்துவமும் இலக்கியத் திறனும் கொண்ட கருணாநிதியின் படைப்பாற்றலைப் போற்றும் வண்ணம் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லா ல்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்த முதன்முறையாக "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்", நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடத்த உள்ளது.

    தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.

    விழாவில், சாகித்திய அகாடமி செயலர் முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ், வரவேற்புரையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கம் 3-ம் தளத்தில் உள்ள சிற்றரங்கில் "கவிதை" என்கிற அமர்வு நடைபெறுகிறது.

    இதேபோன்று, 28-ந்தேதி (சனிக்கிழமை) 2-ம் நாள் நிகழ்வில் "நாடகம்" என்கிற அமர்வு நடை பெறுகிறது. நிறைவு விழாவில், கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.

    • பெரியார், அண்ணாவை விமர்சித்தவர்களோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க.வினர் எப்படி துணிகிறார்கள்?
    • கொள்கையை முன் வைத்து வி.சி.க. கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பெரியார், அண்ணாவை விமர்சித்தவர்களோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க.வினர் எப்படி துணிகிறார்கள்?

    * பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு சமம்.

    * பா.ஜ.க.வின் திட்டத்தை அ.தி.மு.க.வினர் எப்போது புரிந்துகொள்ள போகிறார்கள்.

    * அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்.

    * கொள்கையை முன் வைத்து வி.சி.க. கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
    • உண்மை நிலை ஏமாற்றமும், வேதனையும் அளிப்பதாகவே உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டு மக்களில் ஒரு தரப்பினரின் வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளை அளித்து விட்டு, வெற்றி பெற்ற பிறகு அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதை தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக அரசு செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் 37,328 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை கூட்டுறவுத் துறை, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்பட்டு வருவதால், அதில் பணியாற்றும் பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் காணப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (வாக்குறுதி எண் 236) அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் நியாயவிலைக்கடை பணியாளர்களின் துயரங்கள் தொடருகின்றன. அவர்களுக்கான ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. அனைத்துப் பொருள்களும் பொட்டலம் செய்து வழங்கப்படும் (வாக்குறுதி எண் 238), ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்- நிறுத்தப்பட்ட உளுந்து மீண்டும் வழங்கப்படும் (வாக்குறுதி எண் 240) என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் திமுக அரசு கடைக்கண் கொண்டும் பார்க்கவில்லை.

    கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; இனி நிறைவேற்றுவதற்கு வாக்குறுதிகளே இல்லை என்றெல்லாம் கதை கட்டி வருகின்றனர். ஆனால், உண்மை நிலை ஏமாற்றமும், வேதனையும் அளிப்பதாகவே உள்ளது.

    ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றங்களில் முதன்மையானது மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகம் ஆகும். ஆனால், அதைத் தான் திராவிட மாடல் அரசு தொழிலாகவும், வாடிக்கையாகவும் வைத்திருக்கிறது. தமிழகத்தை ஆளும் முதலமைச்சருக்கு மனசாட்சியும், நேர்மை உணர்வும் இருந்தால் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
    • ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர்.

    கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். வரும் ஜூலை 13-ந் தேதி இந்த நூலை வெளியிட இருக்கிறார்.

    இந்த நிலையில் இன்று அந்தப் புத்தகத்தின் முகப்போவியத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    உலகத் தமிழ் உறவுகளே!

    வணக்கம்.

    வள்ளுவர் மறை வைரமுத்து உரை

    ஜூலை 13-ல் வெளியாகிறது.

    பன்னிரெண்டு வயதில் நான் கண்ட கனவு 72 வயதில் நனவாகிறது.

    உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.

    ஓவியத்தில் ஐயன் வள்ளுவரையே மையப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் காலங்காலமாக பெற்ற வெற்றி உட்காரும் நெற்றி, சூரியனை வெட்டி ஒட்டி வைத்த கண்.

    இந்தியாவின் தெற்கை போல் கூரிய நாசி,

    ஒரு வனாந்தரத்தின் ரகசியம் பேசும் மீசை,

    முன்தோன்றிய மூத்த குடியின் தொன்மை சொல்லும் கல் உருவம் இவற்றின் தொகுப்போவியமாக வந்திருக்கிறது முகப்போவியம்.

    ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். முதலில் ஓவியம் படைக்கிறேன். ஜூலை 13-ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன். இதோ நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம் என்று தெரிவித்துள்ளார்.

    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

    23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-06-2025- ஒரு கிராம் ரூ.119

    24-06-2025- ஒரு கிராம் ரூ.120

    23-06-2025- ஒரு கிராம் ரூ.120

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    21-06-2025- ஒரு கிராம் ரூ.120

    ×