என் மலர்
சென்னை
- செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.
- அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்துவரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எறும்பு திண்ணி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள், தேரைகள் உள்ளது என்று உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
எனவே நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பேசி முடிவெடுத்து வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்து அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
- கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகால் அமைக்கப்பட்டது. கடந்த 1883-ம் ஆண்டு சீன செராமிக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம் தற்போது ரூ.32.62 கோடியில் அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மகாலை பொதுமக்கள் பார்ப்பதற்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு ஸ்லாட் இருக்கும் வகையில் 60 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருவோரும் மகாலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் பெயர் பதிவு செய்யும் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.
தற்போது பொதுமக்கள் காத்திருந்து பார்க்கக்கூடிய சூழல் நிலவி வருவதால் காத்திருப்பு அறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. மழை, வெயில் பாதிப்பு இல்லாமல் பார்வையாளர்கள் அரங்கிற்கு செல்வதற்கு முன்னதாக குளு குளு வசதியுடன் கூடிய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நவீன காத்திருப்போர் அறை 4 அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதில் சிறிது நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். ஒரு அறையில் 20 பேர் வரை அமரலாம். இந்த வசதியை பொதுமக்கள் வரவேற்று இருப்பதோடு வெயில் மற்றும் மழையில் இருந்து விலகி பாதுகாப்பாக காத்திருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டுகின்றனர்.
- கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.
- தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.
சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணி குறித்து தே.மு.தி.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதுதான் இறுதியான அறிவிப்பு.
* கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.
* வெகு விரைவில் அனைவரையும் அழைத்து நல்ல செய்தியை கூறுவோம்.
* இன்று கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
* இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வெளியான செய்தியிலும் உண்மையில்லை.
* தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.
* மற்றவர்கள் பேசினால் பேச்சுவார்த்தை, தே.மு.தி.க. பேசினால் தனிப்பெயரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.
- நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நிதர்சனமான உண்மையான போட்டியே அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான். விஜயை கண்சிடரே பண்ண மாட்டார்கள்.
விஜய் நானும் ரவுடி தான்... என்னை ஜீப்பில் ஏற்றுங்கள் என்றால் எப்படி முடியும்.
கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி, ஈவு இரக்கம் இல்லாமல் கட்சியின் ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடுகிறார் விஜய். அந்த குடும்பங்கள் எவ்வளவு மனம் கஷ்டப்பட்டிருப்பார்கள்.
த.வெ.க. தலைவராக இருக்க விஜய்க்கு அருகதை இல்லை. லாட்டரி பணத்தில்தான் அரசியல் கட்சி நடத்துகிறார்.
எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான் போட்டி. அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.
பிரதமர் வந்தார். அவருடைய கட்சிக்காரர்கள் அவரை பூஸ்ட் பண்ண சொல்லலாம்.
நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.
எங்களுக்கு எல்லாம் கீழே தான். எங்களுக்கு யாரும் மேலே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் பிரத்தியேகமாக வடிவமைத்து வருகிறது.
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார வாகனங்களுக்கான ஆர்டர்களும் பெறப்பட்டு உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
இதையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் மும்ரமாக ஈடுபட்டு உள்ளன. அதன்பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 12,582 ஊராட்சிகள் மற்றும் 16 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. எனவே அரசியல் கட்சி தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் மாநில அளவிலான அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 30-40 நாட்களுக்கு இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் கி.மீ. வரை வாகனங்களில் சென்று தேர்தல் பிரசாரம் செய்யும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கோவை சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் பிரத்தியேகமாக வடிவமைத்து வருகிறது. இதற்கான பணிகளில் அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். மேலும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார வாகனங்களுக்கான ஆர்டர்களும் பெறப்பட்டு உள்ளன.
ஒரு பிரசார வாகனம் தயாரிக்க 20 முதல் 40 நாட்கள் வரை ஆகும் என்பதால் இப்போதே பல்வேறு கட்சிகள் சார்பில் வாகனங்கள் முன்கூட்டியே கொண்டுவந்து விடப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் அங்கு பிரிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்ப பிரத்தியேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த வாகனத்தின் உட்புற கட்டமைப்புகள், தலைவர்கள் அமரும் வசதி, ஹைட்ராலிக் ஏணி மூலம் வாகனத்தின் மேல் வந்து உரையாற்றும் வசதி, வாகனத்தில் இருந்தபடி வெளியில் உள்ள கூட்டங்களை கண்காணிப்பதற்காக அகன்ற டி.வி.யுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன.
மேலும் அந்த வாகனத்திற்குள் தலைவருடன் 3-5 நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் அமர வசதியாக குஷன் இருக்கைகள், படுக்கை வசதி, போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல ஒருசில பிரசார வாகனங்களில் சமைப்பதற்கான பேன்ட்ரி யார்டு மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்படுகின்றன. தேர்தல் பிரசார வாகனத்திற்கு உள்ளேயே "பேக்ஸ், பிரிண்டர் எந்திர வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
தேர்தல் பிரசார வாகனங்களில் தலைவர்கள், நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் குண்டும் குழியுமான ரோடுகளில் "அலுங்காமல் குலுங்காமல்" செல்லும் வகையில் "ஏர் சஸ்பென்ஷன்" வசதி செய்யப்படுகிறது.
அதேபோல பெண் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்துவதற்கான பிரசார வாகனங்களும் மும்முரமாக தயாராகின்றன. இந்த வாகனங்களில் கழிப்பறை, உடை அலங்கார பகுதி போன்ற சிறப்பு வசதிகளை செய்து தர வேண்டியது உள்ளது. எனவே ஆர்டர் செய்யும்போதே பெண் தலைவர்களுக்கான வாகனமா என்று கேட்டு அதற்கேற்ப சொகுசு வசதியுடன் பிரசார வாகன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
தேர்தல் சுற்றுப்பயணத்தில் பிரசார வாகனங்கள் மிகவும் முக்கியமானவை என்று தனியார் நிறுவன உரிமையாளர் ரியாஸ் கூறுகிறார், இவர் மேற்கண்ட பணிகளில் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது தந்தை காலத்தில் தொடங்கி தற்போது வரை அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்களுக்கு தேர்தல் பிரசார வாகனங்களை செய்து வழங்கி வருகிறோம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் தேர்தல் பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு கட்சிகளும் அவரவர் வசதிக்கு ஏற்ப வாகனத்தில் வசதிகளை செய்து தர கூறுவார்கள். அவற்றை சரியாக செய்து கொடுக்க வேண்டும். பிரசார வாகனத்தில் தலைவர்கள் மிகவும் எதிர்பார்ப்பது, சாலையில் செல்லும்போது வாகனம் குலுங்க கூடாது என்பதுதான். ஏனெனில் சில தலைவர்கள் 2 ஆயிரம் கிலோமீட்டர் வரை சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியது உள்ளது.
மேலும் அந்த வாகனத்தில் உள்ள ஆடியோ வசதி மற்றும் போகஸ் விளக்குகள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் கேமிரா வசதிகள் மற்றும் வாகனம் பழுது ஏற்படாமல் எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். பிரசார வாகனத்திற்கு உள்ளே இருபுறமும், ஏ.சி. வசதி செய்து கொடுப்போம்.
நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் வாகனங்களை மிகச் சிறப்பாக தயார் செய்து கொடுத்து வருகிறோம். அதேபோல தற்போது "கேரவன்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. சுற்றுலா செல்பவர்கள், வசதியானவர்கள் வெளியில் செல்வதற்கு கேரவன் போன்ற வசதி நிறைந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் அனைத்து வசதிகளுடன கூடிய சொகுசு வாகனங்களின் தேவை தற்போது பொதுவாகவே அதிகரித்து வருகிறது.
பிரசார வாகனம் தயாரானதும் அந்தந்த கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் மற்றும் கூட்டணி கட்சி கொடிகள், சட்டசபை தேர்தலுக்கு அந்த கட்சி அறிவித்திருக்கும் கொள்கை லோகோ ஆகியவையும் பிரசார வாகனத்தில் பெயிண்டிங் செய்யப்பட்டு இறுதி வடிவம் பெற்று சம்பந்தப்பட்ட அரசியல் பிரபலங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றார்.
- வியாபார யுக்தியில் வித்தியாசமாக சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
- அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் இந்த விசில் விற்பனை சூடுபிடித்து வருகிறது.
நடிகர் விஜய்யின் த.வெ.க.விற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இந்த சின்னம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பிரபலம் ஆகிறதோ அது அரசியல்! ஆனால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. சாதாரணமாக ஒரு விசில் என்பது பிளாஸ்டிக் மற்றும் மெட்டலை பொறுத்து 10 ரூபாய் முதல் ரூ.25 வரை சாதாரண கடைகளில் கிடைப்பது தான். ஆனால் இப்போது இதை வியாபார யுக்தியில் வித்தியாசமாக சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இளைய தலைமுறையிடம் விஜய் மோகம் அதிகமாகவே இருக்கிறது. அவர்களை குறிவைத்து தான் இந்த விசில் வியாபரமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. த.வெ.க.வின் கொடி நிறத்துடன் விசிலை வடிவமைத்து விற்கிறார்கள். குறிப்பாக அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் இந்த விசில் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

6 விசில்கள் அடங்கிய ஒரு பாக்கெட் விலை ரூ.150 முதல் 380 வரை விற்கப்படுகிறது. 'வோட் பார் விஜய்' என்ற எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு விசில்களின் விலை ரூ.280. எப்படியோ அரசியல் தலைவர்கள் அரசியலில் சாதித்தாலும் சரி வியாபார யுக்தியில் வியாபாரிகள் சாதிக்கிறார்கள்.
- ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைத்தார்.
கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள மறுவாழ்வு மையம், நியாய விலைக்கடைகளை அவர் திறந்து வைத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.
- 'மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்..' என்று ஜனநாயகத்தின் அடிப்படையை சொல்லித்தந்த மாபெரும் தலைவர்.
- அண்ணா வழியில் மீண்டுமொரு சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம்.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
'மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்..' என்று ஜனநாயகத்தின் அடிப்படையை சொல்லித்தந்த மாபெரும் தலைவர். கொள்கை அரசியலையும் மக்களுக்கான நடைமுறை தீர்வுகளையும் கற்றுத் தேர்ந்து, 'இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சியும் மாநிலத்தின் ஆட்சியை அமைக்கலாம், ஒரு சாமானிய மனிதனும் அதிகாரத்தை அடையலாம்' என்ற ஜனநாயக புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்.
தமிழ்நாட்டின் தலைமகன், மாநில சுயாட்சியின் உரிமை முழக்கம், மக்கள்நல அரசியலின் நாயகர், ஜனநாயக-தேர்தல் அரசியலின் வழிகாட்டி மற்றும் தமிழ்நாடு அரசியலின் நிரந்தர அடையாளம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம். அவர் வழியில் மீண்டுமொரு சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
- அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.
அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த வந்தபோது திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.
- அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
- தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அ.தி.மு.க. இயக்கத்தின் வரலாற்று கடமையாகும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த
சாமானிய மனிதன்!
தலைமுறைகள் தாண்டி,
எல்லோரும் விரும்பி விளிக்கும்
"அண்ணா"!
"தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"
என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...
அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அ.தி.மு.க. இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
#அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்!
அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
அண்ணா நாமம் வாழ்க! என்று கூறியுள்ளார்.
- ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் முறையாக மேற்கொள்ளப்படும்.
- ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரெயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் நிருபர்களுக்கு விளக்கினார். பின்னர் ரெயில்வே அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது கூறியதாவது:-
கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்பத்தூர், மகாபலிபுரம், கடலூர் ஆகிய ரெயில் பாதை பணிகள் மீண்டும் தொடங்க பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் முறையாக மேற்கொள்ளப்படும்.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ரெயில் நிலைய பணிகளில் ரெயில்வே துறை சார்ந்த பணிகள் முடிந்துள்ளன. ஆனாலும் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கான செல்லக்கூடிய அணுகு சாலை, மேம்பால நடை பாதைகள், உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த பணிகள் முடிக்க வேண்டி உள்ளது.
அந்தப் பணி நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டுக்கு கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் தொடங்கி வைக்கப்படும். மார்ச் மாதத்துக்குள் பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரெயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் இந்த சேவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கம் விலை உயர்ந்தநிலையில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ந்தேதி கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்தது.
அதனையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி மேலும் கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் சரிந்திருந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாத சூழலில், நேற்றும் இறங்குமுகத்தில் விலை பயணித்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை 3-வது நாளாக சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600 குறைந்தது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 850-ம், சவரனுக்கு ரூ.22 ஆயிரத்து 800-ம் சரிந்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்ந்தநிலையில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
2-2-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
1-2-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
31-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
30-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800
29-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
2-2-2026- ஒரு கிராம் ரூ.300
1-2-2026- ஒரு கிராம் ரூ.320
31-1-2026- ஒரு கிராம் ரூ.320
30-1-2026- ஒரு கிராம் ரூ.405
29-1-2026- ஒரு கிராம் ரூ.425






