என் மலர்
சென்னை
- தி.மு.க.விற்கு எதிராக பிரசாரம் செய்யுங்கள்.
- ஐயாவுடன் இருக்கும் 3 பேர் சுயலாபத்திற்கு சுயலாபத்திற்காக அவரை பயன்படுத்தி கொள்கின்றனர்.
பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் தன்னிடம் கெஞ்சியதாக ராமதாஸ் கூறியிருந்த நிலையில் பா.ம.க. சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் பேசிய அன்புமணி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
பா.ம.க. சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
* 2024 தேர்தலில் ராமதாஸ் கூறிதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேசினேன்.
* வி.சி.க.விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? இதெல்லாம் தி.மு.க.வின் சூழ்ச்சி.
* தி.மு.க. தான் பா.ம.க.வின் எதிரி, தி.மு.க.விற்கு எதிராக பிரசாரம் செய்யுங்கள்.
* தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தற்போது ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது.
* என்றாவது ஒருநாள் ராமதாசை வி.சி.க. தலைவர் திருமாவளவன் புகழ்ந்து பேசி உள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்?
* வி.சி.க.வின் வன்னிஅரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது.
* சி.வி.சண்முகம் தைலாபுரம் வருகை குறித்து நான் கேட்டபோது அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்தார் என ராமதாஸ் கூறினார்.
* ஐயாவுடன் இருக்கும் 3 பேர் சுயலாபத்திற்கு அவரை பயன்படுத்தி கொள்கின்றனர்.
* கடந்த 5 ஆண்டுகளாக அய்யா அய்யாவாக (ராமதாஸ்) இல்லை. வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தையாக மாறி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள எண்களை பெறாமலேயே வைபை மூலம் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் இது வசதியாக இருக்கும்.
- ஆர்ச் குளோபல் நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து இந்த இலவச வைபை வசதியை வழங்கி வருகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக இலவச வைபை வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் இலவச இணைய சேவையை பயன்படுத்தும் வகையில் ஒரு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அந்தக் கருவியில் தங்களது கைப்பேசி எண்ணை பதிவிட்டு அதன் மூலம் 45 நிமிடங்கள் வரை 500 எம்.பி. டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகள் தங்களுக்கான வாகனங்களை முன்பதிவு செய்வதற்கும், வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள எண்களை பெறாமலேயே வைபை மூலம் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் இது வசதியாக இருக்கும்.
ஆர்ச் குளோபல் நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து இந்த இலவச வைபை வசதியை வழங்கி வருகிறது. மேலும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்-ஐ விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 'கியோஸ்க்' எனும் எந்திரத்தில் வைத்து ஸ்கேன் செய்தவுடன் அதிலிருந்து சிறிய கூப்பன் ஒன்று வெளிவரும். அதைப் பயன்படுத்தியும் இலவச வைபை வசதியை பெறலாம்.
தற்போது சென்னை விமான நிலையத்தில் 2 கருவிகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக கூடுதல் கருவிகள் நிறுவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதல் நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- மாவட்ட நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயலாற்றி வருகிறார்.
இதற்காக அனைத்து தொகுதிகளிலும் கட்சியினரை ஊக்கப்படுத்தி பணியாற்ற செய்யும் விதமாக உடன்பிறப்பே வா என்கிற தலைப்பில் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி அவ்வப்போது சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல் நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து இதுவரை 18 தொகுதி நிர்வாகிகளை நேரில் அழைத்துப் பேசி அவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம், அந்தியூர், மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடமும் தொகுதிகளில் உள்ள நிலவரங்களை அவர் கேட்டறிந்தார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தொகுதிகளின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர்.
இவர்களோடு தனித்தனியாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உங்களது தொகுதியில் அரசின்நலத்திட்ட பணிகள் முழுமையாக சென்றடைந்துள்ளதா?
நமது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறதா? மாவட்ட நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம், அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளிலும் உள்ள கள நிலவரங்களை முதலமைச்சரிடம் எடுத்து கூறி இருக்கிறார்கள்.
முதல் கட்டமாக 75 முக்கிய தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றுடன் 21 தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார்.
மீதமுள்ள 54 தொகுதி நிர்வாகிகளையும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் அழைத்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து தி.மு.க.வை மீண்டும் வெற்றி பெற செய்ய அனைவரும் உழைக்க வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டங்களின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது.
ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்.
- பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா வேதனையை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதன் விபரம் வருமாறு :-
* திருச்சி To மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3600-க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விடியா திமுக அரசின் முதலமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சிறிய மழைக்கே, புதிய பேருந்து நிலையக் கட்டடம் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகளின் வழியே மழைநீர், பயணிகள் நிற்கும் நடை மேடையில் விழுவதை பொதுமக்கள் கிண்டலடித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சப்பூரில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு இம்முனையத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் அவசர கதியில் திறந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, திருச்சியில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், வெளியூர்களில் இருந்து திருச்சி மாநகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் மற்றும் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செல்வதால், மாநகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
* திருச்சி மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, போக்குவரத்து நெரிசலால் திருச்சியே சில நேரங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக திருச்சி மாநகர மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.
* பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், தார் உருகியும் பள்ளங்கள் ஏற்பட்டு, பார்ப்பதற்கு வேகத்தடைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் பழுதடைந்துவிடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையான பாலக்கரை சாலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; திருச்சி To மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டுவரவும்; திருச்சி மாநகரில் கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்துமுடிக்கவும்; பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்; பாலக்கரை சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில் 3.7.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அம்மன் கோவில்களுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் காளிகாம்பாள் கோவில், ராயபுரம்-அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் - வடிவுடையம்மன், பெரிய பாளையம்- பவானி அம்மன், புட்லூர்- அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயில்- திருவுடையம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், வில்லிவாக்கம்- பாலியம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலாவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.1000. மற்றொரு சுற்றுலா திட்டமான மைலாப்பூர் -கற்பகாம்பாள் கோவில், முண்டகண்ணி அம்மன் கோவில், கோலவிழியம்மன் கோவில், தேனாம்பேட்டை -ஆலயம்மன் கோவில், தி.நகர்- முப்பாத்தம்மன் கோவில், சைதாப்பேட்டை -பிடாரி இளங்காளி அம்மன் கோவில், பெசன்ட் நகர் - அஷ்டலட்சுமி கோவில், மாங்காடு - காமாட்சி அம்மன் கோவில்.
திருவேற்காடு - தேவி கருமாரியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம்- பாதாள பொன்னியம்மன் கோவில் ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.800.
இதே போல மதுரையில் உள்ள அம்மன் கோவில்கள் ஒருநாள் சுற்றுலாவிற்கு ரூ.1,400, திருச்சியில் கோவில்களை தரிசிக்க ரூ.1100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ரூ.1,400 கட்டணமாகும். இந்த சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலா பயணிகள் தரிசிக்கும் வகையில் 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
ஆன்மீக சுற்றுலாக்களுக்கு https://ttdconline.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு 18004253111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர்.
- பலத்த காயமடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் எம்.எஸ்.நகரில் வசித்து வரும் பாலாஜி என்பவரின் மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த பள்ளியில் கடந்த 25-ந் தேதி வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த பணியில் பள்ளி மாணவ- மாணவிகளும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அப்போது பாலாஜியின் மகனான 8-ம் வகுப்பு மாணவனும் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறான்.
அப்போது பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஆய்வகத்தில் இருந்த ரசாயன பாட்டில்களை சாக்கு மூட்டையில் கட்டி தனியாக கழிவறையில் வைத்திருந்தனர்.
இந்த மூட்டையை தூக்கிச் சென்று வெளியில் வைக்குமாறு 8-ம் வகுப்பு மாணவனிடம் பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாணவன் அந்த மூட்டையை தூக்கி தனது தோளில் தொங்கவிட்டபடி வெளியில் சென்றுள்ளான். தன்னால் மூட்டையை தூக்க முடியாது என்று மாணவன் தெரிவித்த போதும் ஆசிரியர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மூட்டையை தூக்குமாறு கூறியிருக்கிறார்கள்.
அப்போது மூட்டையில் இருந்த ரசாயன பாட்டில்கள் உடைந்துள்ளன.
இதில் மூட்டையில் இருந்த ஆசிட் பாட்டிலும் உடைந்து மாணவனின் உடலில் பின்பகுதியில் கொட்டி உள்ளது. இதனால் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மாணவன் அலறி துடித்துள்ளான்.
பின்னர் பள்ளி வளாகத்தில் வைத்தே மாணவனின் உடலில் ஏற்பட்ட காயத்தை பள்ளி ஊழியர்கள் கழுவி உள்ளனர்.
காயம் ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை போட்டு விட்டுள்ளனர். இது பற்றி பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றி மாணவனின் தாய் சந்தியா சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே பலத்த காயமடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் பற்றி மாணவனின் பெற்றோர் கூறும்போது, எங்கள் மகனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த மாணவனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து சேத்துப்பட்டு போலீசார் யாருடைய தவறுதலின் பேரில் மாணவனின் உடலில் ஆசிட் கொட்டி காயம் ஏற்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது.
- இழப்புகளை ஈடு செய்வதற்காகவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திராவிட மாடல் அரசு, அடுத்த சில நாள்களில் மேலும் 3.16% மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தப் போகிறது. மக்களை வாழவைக்கப் போவதாக ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டி ஊழல் செய்வது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது.
தமிழ்நாட்டின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, மகாராஷ்டிரத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை இணைப்புகளுக்குமான மின்கட்டணங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 26% குறைக்கப்படும்; முதல் கட்டமாக நடப்பாண்டில் 10% கட்டணம் குறைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சரும், மின்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் அறிவித்திருக்கிறார். மகாராஷ்டிர அரசின் இம்முடிவுக்கு அம்மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. மகாராஷ்டிர அரசின் இந்த முடிவு அம்மாநில மக்களிடம் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதில் வியப்பில்லை.
ஆனால், தமிழ்நாட்டில்....?
திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில், அதாவது 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 52 விழுக்காடும், சராசரியாக 32 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அந்த நிதியாண்டின் எஞ்சிய 7 மாதங்களில் மட்டும் ரூ.23,863 கோடியும், முழு ஆண்டுக்கும் சேர்த்து ரூ.31,500 கோடியும் மின்வாரியத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2.18 விழுக்காடும், 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் 4.83 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 39.81% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.41,500 கோடியும், கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலாகவும் வாரியத்திற்கு வருவாய் கிடைத்திருக்கக் கூடும்.
இவை மட்டும் போதாது என்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகும் என்று அழைக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 42.17%, அதாவது ரூ.45,000 கோடி மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது உண்மையாகவே தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் சாபமாகும்.
ஒருவேளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்து, இதே அளவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மகாராஷ்டிரத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாகவும் வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாம் ஆண்டின் முடிவில் தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிரத்திற்கும் இடையிலான மின் கட்டண வேறுபாடு இப்போது இருக்கும் அளவை விட 50% அதிகரித்திருக்கும். தமிழகத்தை ஆளும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களை எவ்வாறு சுரண்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கும், மகாராஷ்டிரத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதற்கும் முதன்மைக் காரணம் நிர்வாகத் திறன் தான். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியிருக்கிறது. மகாராஷ்டிர மாநில மின்வாரியம் நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, அடுத்த ஐந்தாண்டுகளில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம் போன்ற பசுமை மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் ரூ.66,000 கோடியை மகாராஷ்டிர மின்வாரியம் சேமிக்கப் போவதாக அதன் நிர்வாக இயக்குனர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவ்வாறு சேமிக்கப்பட்ட தொகை தான் மின்கட்டண குறைப்பாக அம்மாநில மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது. 2022-23ஆம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை ரூ.13,179 கோடி கூடுதலாக கொடுத்து தமிழ்நாடு மின்வாரியம் வாங்கியிருக்கிறது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் ஆகும். அந்த ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடிக்கு, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கினால் மின்வாரியத்தை எவ்வாறு லாபத்தில் இயக்க முடியும்? இந்த இழப்புகளை ஈடு செய்வதற்காகவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது.
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளது. திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள். அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில், மின்கட்டணம் குறைந்தபட்சம் 25% அளவுக்கு குறைக்கப்படும்; நேர்மையான நிர்வாகத்தின் மூலம் இதை பாமக சாதிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.
- கழக நிர்வாகிகள் 'ஒன் டூ ஒன்'-ஆக என்னைச் சந்தித்து, தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் தெரிவிக்கலாம்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டு வருகிறேன். இரண்டு நாட்களாக வேலூர் - திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றான ரெயில் மூலம் ஜூன் 25 அன்று காலையில் பயணத்தை மேற்கொண்டேன். சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வரும் வரையில் மக்களின் பேரன்பை ஏற்றுக்கொண்டு, காட்பாடி வரை ரெயிலில் அலுவல் பணிகளையும் ஆலோசனைகளையும் நடத்தியபடியே வந்தேன். எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றான ரெயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதைக் கைவிடக்கோரி பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுத்தேன்.
கழகத்தின் பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதியின் தொடர் வெற்றி நாயகரும் அமைச்சருமான துரைமுருகனுடைய சொந்த ஊருக்கு ரெயிலில் பயணித்ததும், அவருடைய நீண்ட நெடிய அரசியல் அனுபவங்களைப் பகிரக் கேட்டதும் பயணத்தை மேலும் இனிமையாக்கியது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் தலைமையில் கழகப் பணியாற்றி, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் தன் பணியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவது கொள்கையுணர்வின் வெளிப்பாடாகும்.
காட்பாடி சந்திப்புக்குச் சென்றடைந்து அங்கிருந்து வேலூர் வரையிலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்துதான் சென்றேன். வேலூரில் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையைத் திறந்து வைத்ததுடன், மாவட்டக் கழகச் செயலாளர் நந்தகுமார் அவர்களின் அணைக்கட்டு தொகுதியில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையையும், கழக அலுவலகத்தையும் திறந்து வைக்கும் வாய்ப்பும் அமைந்தது. கழகத்தினரும் பொதுமக்களும் வழியெங்கும் திரண்டிருந்து அன்பைப் பொழிந்தனர்.
எப்போது தொலைபேசியில் அழைத்தாலும், ஹலோ என்பதற்குப் பதிலாக 'வாழ்க கலைஞர்' என்றே கூறும் அன்புத் தொண்டர் – கழகத் தணிக்கைக் குழு உறுப்பினர் – மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகமது சகி. அவர் அண்மையில் தொலைபேசியில் அழைத்து, தனது தம்பியும் வேலூர் மாநகர முன்னாள் துணை மேயருமான வழக்கறிஞர் முகமது சாதிக் அவர்கள் மறைந்துவிட்டார் என்று சொன்னபோது துடித்துப் போனேன். தலைவர் கலைஞரின் மீது பெரும் பற்றுகொண்ட குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு என்பது தனிப்பட்ட முறையிலும் என்னைப் பாதித்தது. எனவே, வேலூரில் முகமது சகி அவர்களது இல்லத்துக்குச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினேன்.
மறுநாள் (ஜூன் 26) அன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்குச் சென்றபோதும் மக்களின் பேரன்பில் திளைத்தேன். மாவட்டப் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு, நான் அடிக்கடி சொல்வது போல எதிலும் வல்லவர் என்பதைத் திருப்பத்தூரில் நடந்த அரசின் சார்பிலான மக்கள் நலத் திட்ட விழாவிலும், முத்தமிழறிஞர் கலைஞர் சிலைத் திறப்பு விழாவிலும் நிரூபித்துக் காட்டினார். திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் தேவராஜி அவர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. வழியெங்கும் மக்கள் திரண்டிருந்தனர்.
சாலையில் இறங்கி நடந்து, அவர்களுடன் கைகுலுக்கியும் செல்ஃபி எடுத்தும் இருதரப்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடனான சந்திப்புகள் நடைபெறுகின்றன. இது வெறும் ரோடு 'ஷோ' அல்ல. திராவிட மாடல் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகின்ற அன்புக் கூடல்.
திருப்பத்தூரில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் திரண்டிருந்த அரசு விழாவில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எந்தெந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன என்பதையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் எடுத்துரைத்து, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.
எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அளவற்ற அன்பைப் பொழியும் மக்களிடம், நான்காண்டுகாலக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். அந்தந்த மாவட்டத்திற்கு நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களால் விளைந்துள்ள பயன்களைக் கேட்டறிகிறேன். திராவிட மாடல் அரசில் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகளையும் அதன் மூலமாக ஆண் - பெண் இரு தரப்பினருக்கும் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகளையும் கேட்கத் தவறுவதில்லை.
ஆட்சியின் பயன்களை அன்பும் நன்றியும் கலந்த குரலில் சொல்கின்ற பொதுமக்கள்… குறிப்பாக பெண்கள், இளம் வயதினர் ஆகியோர் தங்களின் தேவைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு சில திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அதையும் தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரிவிப்பதைக் கவனமுடன் கேட்டு, அதனை நிறைவேற்றுவதைத்தான் முதல் கடமையாகக் கொண்டிருக்கிறேன்.
உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அந்த விமர்சனங்களில் உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம்.
பொதுமக்களுக்கான அரசாகத் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டுகளாகப் பாடுபட்ட கழகத் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒருபோதும் மறந்ததில்லை. மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல, கழகத்தினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 1 அன்று மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் இந்தச் சந்திப்பு குறித்து நான் உரையாற்றும்போது அறிவித்து, அதன்படியே நடைபெற்று வருகிறது. கழக நிர்வாகிகள் 'ஒன் டூ ஒன்'-ஆக என்னைச் சந்தித்து, தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் தெரிவிக்கலாம் என்ற உறுதியினை வழங்கியிருந்தேன். ஆட்சிப் பொறுப்பையும் சுமந்திருக்கும் ஒரு கட்சியின் தலைவர், தன் இயக்கத்தின் நிர்வாகிகளை நேரில் அழைத்து மனம் விட்டுப் பேசுவதைக் கூட பொறுக்க முடியாத அரசியல் எதிரிகளும், இன எதிரிகளும் இந்தச் சந்திப்பு குறித்த உண்மைக்குப் புறம்பான அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக அள்ளித் தெளிக்கும் வேலையைச் செய்தார்கள்.
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் ஒன்று தன்னுடைய இதழில், 'உடன்பிறப்பே வா' சந்திப்பு குறித்து, தன் பேனாவில் மைக்குப் பதிலாகப் பொய்யை ஊற்றி எழுதியிருப்பதைப் படித்தபோது, தன் இதழியல் அறத்தைத் தொலைத்து அந்த நிறுவனம் ஏன் இந்தளவு காழ்ப்புணர்வு காட்டுகிறது என்றுதான் தோன்றியது. அறிவாலயத்தில் நடக்கும் சந்திப்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்பதைக்கூட பெருங்குற்றம் போல அந்த ஏடு சித்தரித்திருந்தது. கழகத்தின் கட்டமைப்பைக்கூட பாரம்பரியப் பத்திரிகை அறியவில்லையே என்று நகைத்தபடி பக்கத்தைப் புரட்டினேன்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் காலத்தில் கழகம் எப்படியெல்லாம் சிறப்பாக இருந்தது என்று இப்போது எழுதும் இத்தகைய ஏடுகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரது பேராற்றலைப் பாராட்டி எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கின்றன? தலைவர் கலைஞர் காலத்திலும் கழகத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசியதை அவற்றின் பழைய ஏடுகளின் பக்கங்களைப் புரட்டினால் புரிந்துகொள்ளலாம். பேரறிஞர் அண்ணா காலத்துக் கழகம் போல, கலைஞர் காலத்தில் இல்லை என்றார்கள். கலைஞர் காலத்துக் கழகம் போல இப்போது இல்லை என்கிறார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா காலம் தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், தற்போது உங்களில் ஒருவனான என் தலைமையிலும் வலிமை குறையாமல் இருப்பதால்தான் 75 காலமாக உயிர்ப்புடன் வாழ்கிறது. ஆறாவது முறையாகத் தமிழ்நாட்டை ஆள்கிறது. ஏழாவது முறையும் ஆட்சி அமையும்.
'உடன்பிறப்பே வா' எனும் கழக நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அதில் பங்கேற்ற ஒவ்வொரு தொகுதியின் நகர - ஒன்றிய - பகுதி - பேரூர் நிர்வாகிகள் அறிவார்கள். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியைச் சேர்ந்த உடன்பிறப்பு கிள்ளை ரவீந்திரன் அந்த அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததைப் படித்தேன்.
"உடன்பிறப்பே வா என்று அழைத்தார். சென்றேன். தாய், தந்தை இல்லாத எனக்குப் பெற்றோராய்த் தெரிந்தார். வாங்க கிள்ளை.. உட்காருங்க என்றார். 1986-இல் என் தொண்டை நரம்பு புடைக்கத் தளபதி வாழ்க.. தளபதி வாழ்க என்று கோஷம் போட்டேனே, அதே உணர்வுதான் வந்தது. தலைவரைப் பார்த்ததும் அதுபோல கத்தலாமே என்ற எண்ணம் வாய்வரை வந்துவிட்டது. என்னைப் பற்றியும், ஊர் பற்றியும், ஊரார் பற்றியும் அறிந்து தெரிந்து வைத்திருந்த ஆதாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பேசினார். தலைவரின் இன்றைய அழைப்பு என்னை உற்சாகப்படுத்தியது. தலைவர் என் பெயரைக் கைப்பட எழுதி, வாழ்த்துகள் சொன்னார். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களில் இப்படி அடிமட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்துக் கேட்டும், சொல்லியும், திருத்தியும், பாராட்டவும் செய்தவர்கள் யார்? கலைஞர் எனும் வீரிய வித்தில் பிறந்தது எதுவும் சொத்தை இல்லை. வித்தைத் தாங்கும் வேர்களும் பழுது இல்லை" என்று உடன்பிறப்புக்கேயுரிய உணர்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார் கிள்ளை ரவீந்திரன். உடன்பிறப்பே வா நிகழ்வில் பங்கேற்ற நிர்வாகிகள் யாரிடம் கேட்டாலும் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.
இதுதான் கழகத் தலைமைக்கும் உடன்பிறப்புகளுக்குமான உறவு. பேரறிஞர் அண்ணா காலம் முதல் உங்களில் ஒருவனான என் தலைமை வரை இந்த உறவுதான் இந்த இயக்கத்தின் பலம். நமக்கிடையிலான உணர்வுமிக்க உறவையும் பாசத்தையும் சீரழிக்கலாமா என எதிரிகளும் ஏடுகளும் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்பதைத்தான் 75 ஆண்டுகால இயக்கத்தின் வளர்ச்சி காட்டுகிறது.
'மக்களிடம் செல்' என்று பேரறிஞர் பெருந்தகை அறிவுறுத்திய வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் மொழி -இன - சமுதாய முன்னேற்றத்திற்கான இயக்கமாகக் கழகத்தை வளர்த்தெடுத்தார். பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் வகுத்த பாதையில் நம் பயணம் தொடர்கிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் கழகத் தொண்டர்கள் முடங்கிக் கிடக்காமல், 'ஒன்றிணைவோம் வா' என்று களப்பணியாற்றிய நெஞ்சுரம் மிக்கவர்களாக இருந்தார்கள். அதனால்தான் கழகத்தின் மீதான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் - தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.
இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள். மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. கழகத்தின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள்.
இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் - தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது. ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன்.
தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் - அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (30.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அஸ்தினாபுரம் : ராதாநகர், ஜிஎஸ்டி சாலை, பார்வதி மருத்துவமனை.
பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் 3-வது அவென்யூ, 5-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு, 32 முதல் 35 குறுக்குத் தெரு, ஆல்காட் குப்பம், கஸ்டம்ஸ் காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு, ஊரு எல்லையம்மன் கோவில் தெரு.
மேற்கு தாம்பரம்: கிருஷ்ணா நகர் 1 மற்றும் 8-வது தெரு, வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணன் நகர்
நேரு நகர்: ஆர்.பி.சாலை, அய்யாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, பட்டேல் தெரு, சங்கர்லால் தெரு, சிட்லாபாக்கம் பகுதி 1 முதல் மெயின் ரோடு, பழைய அஸ்தினாபுரம் சாலை, சந்தான கிருஷ்ணன் தெரு, மகாதேவன் தெரு மற்றும் ராமமூர்த்தி தெரு.
- கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது.
சென்னை :
ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வாழ்த்து செய்தியில், உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!
மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது.
அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. 21-ந் தேதி கிராமுக்கு ரூ.9,235-க்கும், சவரன் ரூ.73,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 22-ந் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 23-ந் தேதி சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்னையானது. கடந்த 24-ந் தேதி கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
25-ந் தேதி தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. அன்றைய தினம் கிராம் ரூ.9,070 எனவும், சவரன் ரூ.72,560 ஆகவும் விற்பனையானது. 26-ந் தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், நேற்றும் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்பக்கப்பட்டது. சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71,880-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8,930 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,880
26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-06-2025- ஒரு கிராம் ரூ.120
26-06-2025- ஒரு கிராம் ரூ.120
25-06-2025- ஒரு கிராம் ரூ.119
24-06-2025- ஒரு கிராம் ரூ.120
23-06-2025- ஒரு கிராம் ரூ.120






