என் மலர்
சென்னை
- பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது.
- ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியது இல்லை.
கோவை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நான் ஏற்கனவே சொன்னது போல் கடலூரில் ஜனவரி 9-ந் தேதி மாநாடு நடக்கிறது. அன்றைய தினம் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்படும்.
2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம் தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியது இல்லை.
காங்கிரஸ் கட்சி சார்பான விழாவில் சுதீஷ் கலந்து கொண்டது தவறு இல்லை. பல ஆண்டுகாலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடாக சுதீஷ் விழாவில் கலந்து கொண்டார். இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை.
போதைப்பொருள் இல்லாத, டாஸ்மாக் இல்லாத, கள்ளச்சாராயம் இல்லாத தமிழ்நாட்டை தி.மு.க. அரசு உருவாக்க வேண்டும். அ.தி.மு.க. தரப்பில் விருப்பம் இருந்தாலும் கூட்டணியில் இடம்பெறுவது பற்றி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.
கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் : 1
ஈரோட்டில் ஜூன் 22-ந்தேதி நடைபெற்ற கழகத்தின் 31 ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின்படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 2
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்டிராவை உருவாக்க முனைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் செயல் திட்டங்களை ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
தீர்மானம் : 3
இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசின் நீர்வளத் துறை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரைப் பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேளாண் பயன்பாட்டுக்கு விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம் செயல்படுத்தப் போவதாக பா.ஜ.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்தே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு அளித்துள்ள விளக்கத்தில் இது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது.
ஆனால் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இது குறித்து உரிய விளக்கம் அளிக்கவில்லை.
நாடு முழுதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க, வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
தீர்மானம் : 4
மதுரையில் ஜூன் 22-ந்தேதி இந்துத்துவ அமைப்புகள் முன்னின்று நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை இழிவு படுத்தியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும்.
தீர்மானம் : 5
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடத்துவது என கழகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஜூலை 1-ந்தேதியில் இருந்து ஜூலை 17-ந்தேதி வரையில் நடைபெற இருக்கும் மண்டல வாரியான கழக செயல்வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும் என்று கழக நிர்வாக குழுத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 6
தமிழகத்தில் மேல்நிலை வகுப்பில், பொறியியல், மருத்துவம், விவசாயம், கைவினைத் தொழில்கள் உள்ளிட்ட பல துறையின் உட்பிரிவான செவிலியர் பயிற்சி, பயிர் பாதுகாப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், தையல் உள்ளிட்ட, 15 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்கியபோது, 4,000க்கும் மேற்பட்ட பகுதி நேர, முழுநேர, ஒரு பகுதி நேரம், இரு பகுதி நேரம் ஆகிய நான்கு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
1978 இல் 4,324 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2007 இல் 250 பேருக்கு பணி நிரந்தரம் அளிக்கப்பட்டது. அதன்பின், இதுவரை புதிய நியமனம் நடைபெறவில்லை. இந்நிலை தொடர்ந்தால், 2030க்குள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவே இல்லாத நிலை உருவாகும்.
கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களே, தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்கிறார்கள். இது, இடைநிற்றலைத் தவிர்க்கவும், சுயதொழில் துவங்கவும் வழிவகுக்கிறது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கழக நிர்வாக் குழு வலியுறுத்துகிறது.
- தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது.
- தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16-ந் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.
தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலமும், அவர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளையடிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பது தான் சிங்கள் அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த சில நாள்களில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலும், இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையும் பா.ம.க.வின் நீண்ட நாள் குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது. இது தொடரக்கூடாது.
தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் இரு தரப்பு மீனவர்களும் பயனடையும் வகையில் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான திட்டத்தை வகுப்பது தான் சரியானதாக இருக்கும். இதை மத்திய அரசு தான் செய்ய முடியும் எனும் நிலையில், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு தான் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான அழுத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன.
- மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பி.டி.எஸ். படிப்பை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன.
இந்த சூழலில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தணிக்க, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
- இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- பி பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.
சென்னை:
14-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த பிரிவில் இடம்பெற வேண்டும் என்பதை குலுக்கல் மூலம் நேற்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் முடிவு செய்தது.
'ஏ' பிரிவு: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து
'பி' பிரிவு: முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து
'சி' பிரிவு: முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா
'டி' பிரிவு: ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா
'இ' பிரிவு: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா
'எப்' பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேச அணிகளும் இடம்பிடித்துள்ளன.
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
- இந்தத் திட்டத்தில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்
சென்னை:
தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து ,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.
விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
- சமூக ஊடகப் பக்கங்களில் ‘ஓரணியில் தமிழ்நாடு' லோகோவை முகப்புப் படமாக(DP) திமுகவினர் வைக்க வேண்டும்.
- ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம். நம்மை அடக்க நினைத்தால் ஒன்றிணைந்து எதிர்ப்போம். இது தமிழர்களின் தனிக் குணம்.
சமூக ஊடகப் பக்கங்களில் 'ஓரணியில் தமிழ்நாடு' லோகோவை முகப்புப் படமாக(DP) திமுகவினர் வைக்க வேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் திரட்டுவதற்கான முயற்சி. ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரியன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதோடு, சர்வதேச செஸ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், " UzChess Cup Masters 2025 ஐ வென்று, இந்தியாவின் முதல் தரவரிசையில் கிளாசிக்கல் வீரராகவும், சர்வதேச செஸ் தரவரிசையில் நம்பர் 4 வீரராகவும் உயர்ந்ததற்கு பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துகள்.
ஃபார்மில் ஒரு சாம்பியன், செக்மேட்-ப்ரூஃப் கைகளில் ஒரு எதிர்காலம்" என குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.
- போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா? இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.
மும்பையில் அதானியின் துறைமுகத்தில் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருள் கப்பலில் வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அந்த கப்பலை திருப்பி அனுப்பினீர்களா? போதைப் பொருளை என்ன செய்தீர்? என்று நான் ஒருவன் தான் கேள்வி கேட்டேன்.
போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?
காட்டுக்குள் சந்தனக் கடத்தல் வீரப்பன், யானை தந்தம் கடத்தல், கடத்தல்காரர்கள் என்று கூறுவீர்கள். விற்றவன் காட்டுக்குள் இருந்தான். வாங்கினவன் எங்கு இருந்தான்? அவர்களில் எத்தனை பேரை கைது செய்தீர்கள்?
கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும்தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவன் அதிமுக நிர்வாகி என்பதால் இதை திருப்புகிறீர்கள். அப்போ, திமுகவிற்கும், போதைப் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா?
நீ குற்றவாளி யார் என்று பார்? போதைப் பொருள் எப்படி புழங்குகிறது. அதன் வேரை வெட்டு. இளையும், கிளையையும் வெட்டுகிறீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநிலம் முழுவதும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
- தெற்கு ரெயில்வே விளையாட்டு அதிகாரி வி.தேவராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு குத்துச்சண்டை போட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் நேற்று தொடங்கியது.
5 பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன், உலகக் கோப்பை குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்றரும், தெற்கு ரெயில்வே விளையாட்டு அதிகாரியுமான வி.தேவராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
ஆண்களுக்கான சப்-ஜூனியர் பிரிவின் கால் இறுதியில் ரித்விக் (வி.எஸ்.பி.சி.), ரிதிஷ் (ராவணன்), மோனிஷ் (கே.எஸ்.பி.சி.), பிரதீஷ் (எலைட்) ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். நாளை வரை இந்தப் போட்டி நடக்கிறது.
- இளைஞர் மீது அண்ணா பல்கலை. மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவியை தாக்கிய புகாரில் முன்னாள் காதலனை காவல்துறை கைது செய்துள்ளது.
நடத்தை சரியில்லாததால் மாணவி காதலை துண்டித்த ஆத்திரத்தில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பெண்ணை காதலன் தாக்கியுள்ளார்.
மேலும், நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலரான பொறியியல் பட்டதாரி இளைஞர் மீது அண்ணா பல்கலை. மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4 -ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4 -ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






