என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னையில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது.
    • சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னையில் இன்று அதிகாலையில் திடீர் பனிமூட்டம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் விளக்கி இருக்கிறது.

    இது தொடர்பாக வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வருமாறு:-

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. காலை 5.30 மணியளவில் 1500 மீட்டராக இருந்த பார்வைத்திறன், 6.30 மணியளவில் 350 மீட்டராகவும், 7.30 மணியளவில் 150 மீட்டராகவும் குறைந்தது.

    இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதிக ஈரப்பதம், மிதமான முதல் அமைதியான காற்று நிலை, இரவு நேர குறைந்த வெப்பநிலை ஆகியவை பனி உருவாவதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

    பிப்ரவரி மாத இறுதிவரை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் குறைந்த முதல் மிதமான பனி மூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்களின் ஒரே நம்பிக்கை போட்டித்தேர்வின் மூலம் அரசுப்பணியில் சேர்வது.
    • போட்டித்தேர்வில் அரசு பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியத்தை புரிந்து கொள்வது என்பது போட்டித்தேர்வின் கேள்விகளைவிட கடினமானதாகத்தான் உள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குளறுபடிகளுக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். இன்று நடைபெற இருந்த குருப் 2, 2A தேர்வுக்கு சென்னை, அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட மையங்களில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் தேர்வர் எண் இல்லை என்பன உள்ளிட்ட புகார்களை கூறி சுமார் 500 தேர்வர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கரோனா தொற்று காலகட்டத்தில் எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்புகின்றன. ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஏராளமானோர் தேர்வானது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் வெளியாகி மேலும் சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.

    கடந்த 2023 மே மாதம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் தனியார் கல்லூரி மையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற தேர்வு முடிந்த பிறகு பிற்பகல் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்னும் விதியின் அடிப்படையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் தாமதமாக வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை உள்ளே விட அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

    பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள், சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இது குறித்த விசாரணை நடைபெற்றது. இது குறித்து சட்டமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் பின் அதன் முடிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

    இளைஞர்களின் ஒரே நம்பிக்கை போட்டித்தேர்வின் மூலம் அரசுப்பணியில் சேர்வது. அதற்கான நுழைவு வாயில்களில் ஒன்றாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி காட்டும் அலட்சியப்போக்குக்கு அளவே இல்லை என்பதற்கு இன்றைய குளறுபடியும் உதாரணம். தொடர்ந்து போட்டித்தேர்வில் அரசு பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியத்தை புரிந்து கொள்வது என்பது போட்டித்தேர்வின் கேள்விகளைவிட கடினமானதாகத்தான் உள்ளது.

    இன்று நடைபெற்ற குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அரசு வெளிப்படையாக அறிவித்து இளைஞர்களுக்கு தேர்வாணையம் மீது நம்பிக்கை பொய்த்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட…!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்வுகள் நடைபெற இருந்தது.
    • முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் நாட்டில் சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட க்ரூப் 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட க்ரூப் 2 ஏ என காலியாக உள்ள 828 பணியிடகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கக தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப். 8) காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சா்பில் தேர்வுகள் நடைபெற இருந்தது.

    எனினும், பல்வேறு நிர்வாகக் கோளாறு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்று நடத்தப்பட இருந்த முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக

    இன்றைய தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வு மையம் முறையாக ஒதுக்கப்படவில்லை என கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வர்கள் எதிர்கொண்ட இன்னல் மற்றும் கடைசி நேர அலைகழிப்புகளுக்கு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சுவுந்தரராஜன் தனது X தளப்பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த பதிவில், "திமுக மாடல் அரசாங்கம் முற்றிலும் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்... 9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இளைஞர்களின் வாழ்க்கை நசுக்கி விட்டு இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் திமுகவின் அரசியல் நாடகம்.. பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.. இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம்.. வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும் இந்த இந்த இளைஞர்கள்.. விடிவு காலம் வேண்டும் என்று கடுமையாக தயாரித்து... தேர்வுக்கு வந்தால்.. தேர்வு எழுதுவதே போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை... ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேரத்தையும் பொருளையும் செலவிட்டு.. ஆர்வமுடன் வந்தவர்கள் அலை கழிக்கப்பட்டிருக்கிறார்கள்... நியாயமாக சரியான திட்டமிடலுடன் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.. மறுபடியும் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை...," என குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
    • தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை, இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

    #TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

    அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன.

    "Technical Fault" என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற தி.மு.க. ஆட்சியாளர்கள், குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

    தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் தி.மு.க. அரசு.

    ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி, அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள், 2026-ல் அமையவுள்ள அ.தி.மு.க. அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.
    • ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.

    சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருடன் நடிகர் சூர்யா, கார்த்தி சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    • தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
    • மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளானார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசில் சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

    தொகுதி 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் தான் ரத்து செய்யப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டாலும், தேர்வுக்கான அடிப்படையான ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கோட்டை விட்டது தான் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் ஆகும்.

    தமிழ்நாடு முழுவதும் காலையில் 9,223 தேர்வர்களும் மாலையில் 9244 தேர்வர்களும் எழுத இருந்த இந்தத் தேர்வுகளுக்காக சென்னையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 3221 பேர் தேர்வுகளை எழுத இருந்தனர். அவர்களில் 600 தேர்வர்களுக்கு சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் சென்னை அரும்பாக்கம் டி ஜி வைஷ்ணவா கல்லூரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத் தான் இந்தக் குளறுபடி தெரியவந்தது.

    இதைக் கண்டித்து தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை நந்தனம் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் தேர்வு தொடங்காத நிலையில் கோவை உள்ளிட்ட பல மையங்களில் தேர்வு தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் ரத்து செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளானார்கள்.

    தேர்வு மையங்கள் மற்றும் அவற்றில் தேர்வு எழுதும் தேர்வர்களை ஒதுக்கீடு செய்வதை டி.என்.பி.எஸ்.சியில் இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள பணியாளரே தெளிவாக செய்ய முடியும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி என 3 இ.ஆ.ப. அதிகாரிகளும், 6 உறுப்பினர்களும் மேற்பார்வையிட்டும் கூட இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
    • திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து செல்லும் சுமார் 10 விமானங்களின் புறப்பாடும் தாமதம் ஆகி உள்ளதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    அதேபோல, திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

    • இன்று நடக்க இருந்த முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதை அடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    828 பணியிடங்களை நிரப்புவதற்காக காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் காலையில் நடைபெறும் தேர்வை 9223 பேர் எழுத இருப்பதாகவும் பிற்பகலில் நடைபெறும் தேர்வை 9244 பேர் எழுத இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னையில் பல்வேறு மையங்களில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 3585 பேர் தேர்வுகளை எழுதுவதற்கு தயாராகி இருந்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் பல்வேறு தேர்வு மையங்களில் இன்று காலையில் கடும் குளறுபடி ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். தேர்வு மையங்கள் முறையாக ஒதுக்கப்படாதது மற்றும் கடைசி நேர மாற்றங்கள் காரணமாகத் தேர்வர்கள் குழப்பம் அடைந்து பீதிக்குள்ளானார்கள்.

    சென்னை திருவல்லிக்கேணி மாநிலக் கல்லூரியில் காலை மற்றும் மாலை நேரத் தேர்வுகளுக்காக மொத்தம் 821 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தேர்வு மைய முகவரி மற்றும் இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால், காலை 9 மணி ஆகியும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே மையத்திற்குள் வந்து சேர்ந்தனர். மீதமுள்ள நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தங்களது மையத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட சிரமத்தால் தடுமாறினார்கள்.

    அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி தேர்வு மையத்திலும் கடுமையான குழப்பம் ஏற்பட்டது. அங்கு தேர்வு எழுதச் சென்ற தேர்வர்கள், தங்களது பதிவு எண்கள் அங்கு உள்ள பட்டியலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது உங்களுக்கு நந்தனம் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    கடைசி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள், கல்லூரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

    இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் தேர்வர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தேர்வு மைய குளறுபடி பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை எடுத்து மறியலில் ஈடுபட்ட தேர்வர்கள் மறியலை கைவிட்டனர்

    நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில், தேர்வு தொடங்க வேண்டிய நேரமான காலை 9 மணி ஆகியும் வினாத்தாள்கள் வந்து சேரவில்லை . இதனால் தேர்வு எழுதத் தயாராக இருந்த தேர்வர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இது தேர்வர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேர்வு மையங்களுக்கு டிஎன்.பி.எஸ்.சி அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மையங்கள் மாற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட தேர்வர்களைப் பேருந்துகள் மூலம் உரிய மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தேவர்கள் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏன் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

    அரசுப் பணிக்கான முக்கியத் தேர்வில் தேர்வாணையம் முறையான முன்னேற்பாடுகளைச் செய்யாததே இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம் எனத் தேர்வர்களும், அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர்.

    இது போன்ற குழப்பங்கள் காரணமாக இன்று நடைபெற இருந்த குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகரன் இதனை தெரிவித்தார்.

    தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது அந்த தேர்வுகளுக்காக தயாரானவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ஐந்து திட்டங்களுக்கு ரெயில்வே துறையால் நிலத் திட்ட அட்டவணை (LPS) இன்னும் வழங்கப்படவில்லை.
    • நில எடுப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவது மிக முக்கியம்.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில்,

    தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரெயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு, குறிப்பாக, நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை முறையாக விடுவித்தல் மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குதல் போன்றவற்றில் இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு உரிய நேரத்தில் தீர்வு காணவேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதோடு, ஊடகங்களில் இதுதொடர்பாக பரவி வரும் உண்மைக்குப் புறம்பான சில செய்திகளுக்காகவும் இக்கடிதத்தினை எழுதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் பல்வேறு ரெயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2500.61.06 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதில் 931.52.96 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு ரெயில்வே துறை நிதியை ஒதுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், ரெயில்வே துறையிடமிருந்து சமீபத்தில் திருத்தப்பட்ட நிலத் திட்ட அட்டவணை (LPS) பெறப்பட்ட இரண்டு திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி செயல்பாட்டில் உள்ளது என்றும், அது விரைவில் வழங்கப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 19 முக்கிய ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1273.05.15 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களில், 1198.02.34 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்கள், அதாவது 94 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, அவை ரெயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், ஐந்து திட்டங்களுக்கு ரெயில்வே துறையால் நிலத் திட்ட அட்டவணை (LPS) இன்னும் வழங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை, மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை, மணியாச்சி-நாகர்கோவில் அகல ரெயில் பாதை, கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல ரெயில் பாதை இரட்டிப்பாக்குதல், நாகர்கோவில்-இரணியல் அகல ரெயில் பாதை இரட்டிப்பாக்குதல், தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல ரெயில் பாதை (கட்டம்-I), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரெயில் பாதை, மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரெயில் பாதை, பட்டுக்கோட்டை நான்கு முனை சந்திப்பு, புதிய அகல ரெயில் பாதை (சேலம்-கரூர் வழித்தடம் உருவாக்குதல்), மன்னார்குடி-நீடாமங்கலம் அகல ரெயில் பாதை, சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது, நான்காவது வழித்தடம் மற்றும் விழுப்புரம்-திண்டுக்கல் அகல ரெயில் பாதை ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும், மேலும், மீதமுள்ள திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    நில எடுப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவது மிக முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், துரதிர்ஷ்டவசமாக, ரெயில்வே அமைச்சகத்தால் நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்கள், தனிப்பட்ட திட்டங்களுக்குப் பெரும்பாலும் நிதியினை முழுமையாக வழங்காமல் பிரித்து வழங்குவது என்பது, தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தினைத் தடுத்து, தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நீடித்த நிச்சயமற்றதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    'திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையேயான அகல ரெயில் பாதை இரட்டிப்பு' திட்டத்திற்கான 16.86.51 ஹெக்டேர் நில எடுப்புப் பணி முடிக்கப்படாமல் இருப்பது இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்திற்கான நில எடுப்பிற்கு உரிய இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான 289.78 ரூபாய் கோடி நிதியினை ரெயில்வே துறை இன்னும் ஒதுக்கவில்லை என்றும், இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு பெரிய திட்டம் என்றும், இது ஒன்றிய அரசின் திட்டக் கண்காணிப்புக் குழுவின் (PMG) வலைதளத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை பகுதி, பகுதியாக வழங்குவதற்குப் பதிலாக, மொத்தமாக, சரியான நேரத்தில் ஒதுக்குவதன் மூலம், இந்த முக்கியமான திட்டங்களைத் தடையின்றி விரைவாக முடிக்க முடியும்.

    தமிழ்நாடு அரசு, ரெயில்வே திட்டங்களுக்கு உயரிய முன்னுரிமை அளித்து, வலுவானதொரு கண்காணிப்பு வழிமுறையினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்தவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், போக்குவரத்துத் துறை செயலாளரும் ரெயில்வே அதிகாரிகளுடன் தொடர்ந்து மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்தத் தருணத்தில், சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரெயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது குறித்து தாம் கவலையோடு குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் விளங்கும் தமிழ்நாடு, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குத் தொடர்ந்து கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும், மேம்பட்ட ரெயில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் மகத்தான ஆற்றலை தமிழ்நாடு கொண்டுள்ளது.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு,

    • நில எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக, அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி, முழுமையாக, முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்கவும்;

    • ரெயில்வே துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களான தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகலப்பாதை மற்றும் திண்டிவனம்-திருவண்ணாமலை அகலப்பாதை (ஏற்கெனவே 931.52.96 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன) திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், இதற்குத் தேவையான நிதியினை வழங்கிடவும்;

    • தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப, கூடுதலாக புதிய ரெயில் திட்டங்களை அனுமதிப்பது குறித்து பரிசீலித்திடவும்;

    இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு, ஒன்றிய ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் அவர்களின் தலையீடு, கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதோடு, ஒன்றிய மற்றும் மாநில அரசின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்க உதவிடும்.

    இந்நிலையில், ரெயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழ்நாடு அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் அவர்களிடமிருந்து விரைவில் சாதகமான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    • பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
    • கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் புறநகர் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

    • கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
    • தாம்பரத்தில் இருந்து இரவு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை (8 மணி நேரம்) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இயக்கப்படும்.

    இதில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்கமாக செல்லும் ரெயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இதன் காரணமாக சில மின்சார ரெயில் சேவைகள் பகுதிநேரமாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

    அதன் விவரம் வருமாறு:-

    * இன்று முதல் 18-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8.55, 10.20, 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரெயில் சேவைகள் முழுவதுமாகவும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9.05, 10.10, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    * இன்று மற்றும் 15-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து இரவு 10.00, 11.00. 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    • யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை :

    தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சார்பில், தே.மு.தி.க. வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் சந்தோஷ்குமார் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பற்றியும் தே.மு.தி.க. பற்றியும் யூடியூப் தளங்களில் சிலர் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள்.

    இத்தகைய அவதூறு பேச்சுகள், தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகின்ற திருச்சி சூர்யா, தமிழா தமிழா, பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×