என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் ரத்து: அன்புமணி கண்டனம்
    X

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் ரத்து: அன்புமணி கண்டனம்

    • தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
    • மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளானார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசில் சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

    தொகுதி 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் தான் ரத்து செய்யப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டாலும், தேர்வுக்கான அடிப்படையான ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கோட்டை விட்டது தான் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் ஆகும்.

    தமிழ்நாடு முழுவதும் காலையில் 9,223 தேர்வர்களும் மாலையில் 9244 தேர்வர்களும் எழுத இருந்த இந்தத் தேர்வுகளுக்காக சென்னையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 3221 பேர் தேர்வுகளை எழுத இருந்தனர். அவர்களில் 600 தேர்வர்களுக்கு சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் சென்னை அரும்பாக்கம் டி ஜி வைஷ்ணவா கல்லூரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத் தான் இந்தக் குளறுபடி தெரியவந்தது.

    இதைக் கண்டித்து தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை நந்தனம் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் தேர்வு தொடங்காத நிலையில் கோவை உள்ளிட்ட பல மையங்களில் தேர்வு தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் ரத்து செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளானார்கள்.

    தேர்வு மையங்கள் மற்றும் அவற்றில் தேர்வு எழுதும் தேர்வர்களை ஒதுக்கீடு செய்வதை டி.என்.பி.எஸ்.சியில் இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள பணியாளரே தெளிவாக செய்ய முடியும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி என 3 இ.ஆ.ப. அதிகாரிகளும், 6 உறுப்பினர்களும் மேற்பார்வையிட்டும் கூட இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×