என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
- இன்று நடக்க இருந்த முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதை அடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
828 பணியிடங்களை நிரப்புவதற்காக காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் காலையில் நடைபெறும் தேர்வை 9223 பேர் எழுத இருப்பதாகவும் பிற்பகலில் நடைபெறும் தேர்வை 9244 பேர் எழுத இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் பல்வேறு மையங்களில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 3585 பேர் தேர்வுகளை எழுதுவதற்கு தயாராகி இருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு தேர்வு மையங்களில் இன்று காலையில் கடும் குளறுபடி ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். தேர்வு மையங்கள் முறையாக ஒதுக்கப்படாதது மற்றும் கடைசி நேர மாற்றங்கள் காரணமாகத் தேர்வர்கள் குழப்பம் அடைந்து பீதிக்குள்ளானார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி மாநிலக் கல்லூரியில் காலை மற்றும் மாலை நேரத் தேர்வுகளுக்காக மொத்தம் 821 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தேர்வு மைய முகவரி மற்றும் இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால், காலை 9 மணி ஆகியும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே மையத்திற்குள் வந்து சேர்ந்தனர். மீதமுள்ள நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தங்களது மையத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட சிரமத்தால் தடுமாறினார்கள்.
அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி தேர்வு மையத்திலும் கடுமையான குழப்பம் ஏற்பட்டது. அங்கு தேர்வு எழுதச் சென்ற தேர்வர்கள், தங்களது பதிவு எண்கள் அங்கு உள்ள பட்டியலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது உங்களுக்கு நந்தனம் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
கடைசி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள், கல்லூரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் தேர்வர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தேர்வு மைய குளறுபடி பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை எடுத்து மறியலில் ஈடுபட்ட தேர்வர்கள் மறியலை கைவிட்டனர்
நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில், தேர்வு தொடங்க வேண்டிய நேரமான காலை 9 மணி ஆகியும் வினாத்தாள்கள் வந்து சேரவில்லை . இதனால் தேர்வு எழுதத் தயாராக இருந்த தேர்வர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இது தேர்வர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேர்வு மையங்களுக்கு டிஎன்.பி.எஸ்.சி அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மையங்கள் மாற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட தேர்வர்களைப் பேருந்துகள் மூலம் உரிய மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தேவர்கள் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏன் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
அரசுப் பணிக்கான முக்கியத் தேர்வில் தேர்வாணையம் முறையான முன்னேற்பாடுகளைச் செய்யாததே இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம் எனத் தேர்வர்களும், அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர்.
இது போன்ற குழப்பங்கள் காரணமாக இன்று நடைபெற இருந்த குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகரன் இதனை தெரிவித்தார்.
தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது அந்த தேர்வுகளுக்காக தயாரானவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






