என் மலர்
சென்னை
- நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
- வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், தவெக பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதம் 13ம் தேதியில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தது.
மேலும், வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், வரும் 27ம் தேதி அன்று சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம செய்ய உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.
- தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் .
- சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள்.
திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 26, 28, அக்டோபர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய நாட்களில் செங்கல்பட்டிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து வாரம் இருமுறை மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் ஞாயிறு இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திங்கள் மதியம் 1.50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக குமரியில் இருந்து செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21 நாட்களில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
- உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்து கொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன்.
- 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான 5-வது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தக் கூட்டத்தில், தீன்தயாள் அந்தியோ தயா யோஜனா, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞரால் 1989-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழு, இயக்கமாகி இன்று இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் "தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்" ஒன்றிய மற்றும் மாநில அரசின் 60:40 என்ற நிதிப்பங்களிப்பின் அடிப்படையில் முதல் 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.41 லட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் 55.12 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக 67 கோடியே 97 லட்சம் ரூபாயும், சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு 801 கோடியே 62 லட்சம் ரூபாயும், நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு 75 கோடியே 73 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,57,316 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.
இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 25 கோடியே 81 லட்சம் ரூபாய் சிறப்பு சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களின் தடையற்ற செயல்பாடுகளுக்காக நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று வரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டு உள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3-9-2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்து கொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டைகள் விரைவில் அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் முழுவீச்சில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
சுய உதவிக் குழு மகளிருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் மூலமாக சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான தூரத்திற்கு விலையின்றி கிராம மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட எண்ணற்ற சலுகைகளைப் பெறலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26 வரை ரூபாய் 1,274 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 12,045 பணிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்பான ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டு 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு ஒரு நிதியாண்டிற்கு ரூ.3 கோடி வீதம், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஆண்டொன்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றது.
மாநில அரசே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை பத்து கோடி ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, இதனை ஒன்றிய அரசு 10 கோடி ரூபாயாக உயர்த்திட இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே" நமது முக்கிய நோக்கமாகும்.
* குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டில் செயல்படும் 54 ஆயிரத்து 449 குழந்தைகள் மையங்களில் பயன்பெற்று வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான சுமார் 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. மேலும், சுமார் 5.50 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் இத்திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
* குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட சுமார் 10 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் மூன்று தினங்களுக்கு முட்டைகளும் 1 முதல் 2 வயது வரையிலான 6 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வீதம் தாய்மார்கள் மூலம் வீட்டிலேயே வழங்கப்படுகிறது.
* அனைத்து குழந்தைகளுக்கும் 2 செட் வண்ணச்சீருடைகளும் நமது அரசு வழங்குகிறது. அனைத்து மையங்களிலும் 100 சதவீதம் குடிநீர், கழி வறைகள், மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* இதுவரை 3,397 குழந்தைகள் நேய மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
* 6,390 குழந்தைகள் மையங்களை திறன்மிகு குழந்தைகள் மையமாக தரம் உயர்த்தி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* மேலும் 5,582 மையங்கள் தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
* நமது அரசின் முனைப்பான செயல்பாடுகளின் விளைவாக தமிழ்நாடு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி 25 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8 விழுக்காடாக குறைந்துள்ளது.
* 14.6 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் மெலிவுத் தன்மை 3.6 விழுக்காடாக குறைந்து உள்ளது.
* 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
* குழந்தைகளின் வளர்ச்சி வீதம் பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது.
* "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15-11-2024 அன்று தொடங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்குக் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
* நம்முடைய அனைத்து திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒன்றிய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்தப் படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர்கள் தங்களது துறைவாரியான திட்டங்கள் தொடர்பான கருத்துகளை விளக்கினர். எம்.பி.க்கள் டி.ஆ. பாலு, தொல். திருமாவளவன், கே. சுப்பராயன், மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், துரை வைகோ, நவாஸ்கனி ஆகியோர் தங்கள் கருத்து களை தெரிவித்தனர்.
மேலும், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வலர்கள், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
- நியோமேக்ஸ் வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நிவாரணம் வழங்குவது எளிமை.
- நியோமேக்ஸ் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
நியோமேக்ஸ் நிறுவன வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிமையாகும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் எனக்கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ம் தேதி வரை உயர்நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியது.
அக்டோபர் 8ம் தேதி வரை புகார் அளிப்பவர்களுக்கு மட்டும் இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
- அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார்.
- கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவையும் விதித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட பிறகு எழுந்த சலசலப்புகள் எல்லாம் அடங்கி எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அணி வகுத்துள்ளனர்.
இந்த நிலையில் செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு கோஷத்தை எழுப்பியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ். அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பணிகளை நானே ஒருங்கிணைப்பேன் என்றும் செங்கோட்டையன் கூறி இருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் கட்சியில் இருந்து அவரை நீக்கவில்லை.
செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் அவரது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக செங்கோட்டையன், சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். இப்படி சசிகலா, ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே கட்சி பதவிகளை பறித்த பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாகவும், அவர்களுடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாக பரபரப்பு தீயை பற்ற வைத்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க. இணைப்பு பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வற்புறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல்களை எல்லாம் மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகள் செங்கோட்டையனின் இணைப்பு முயற்சிக்கு போடப்பட்டுள்ள முட்டுக்கட்டை என்றே அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இதையும் தாண்டி செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்று கூறிக் கொண்டு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினால் அடுத்தக்கட்டமாக அவரை அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, செங்கோட்டையன் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் அவரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதே நேரத்தில் அவர் கட்சி விரோத செயல்களில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினால் நிச்சயம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-ந்தேதி மற்றும் 23-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரோபோ சங்கர் உடலுக்கு நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் உடலைக்கண்டு கதறி அழும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
மறைந்த ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
- வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில், ரூ.36 கோடியை செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நோட்டீசுக்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை கேட்டு தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தற்போது, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூ.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீசு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ''ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது'' என்று உத்தரவிட்டார்.
- வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம்.
- காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது. சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி என்று பல்வேறு உபாதைகளுடன் சிரமப்படுகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மருந்து மாத்திரைகள் எடுத்து நான்கைந்து நாட் களில் காய்ச்சல் குணமானாலும் இருமல், உடல் சோர்வு இரண்டு, மூன்று வாரங்களுக்கு நீடிக்கிறது.
சென்னையில் வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருக்கிறது. வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம். எனவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகவள்ளி கூறும்போது, ஒரே பள்ளியில் படிக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்த 13 மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்ததில் டெங்கு, மலேரியா அறிகுறிகள் இல்லை என்றார்.
டாக்டர்கள் கூறும்போது, இன்புளூயன்சா காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்கள்.
மேலும் அவர்கள் கூறும் போது, முக கவசம் அணிவது, கூட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றார்கள். காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். புரத சத்து உணவுகளையும், கீரை, காய்கறிகள் ஆகியவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்றார்கள்.
வறட்டு இருமல், தலை வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பதாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
- கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) அன்று நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 29.9.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண 5-ம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025, 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வருகிற 4.10.2025 (சனிக்கிழமை) நாமக்கல், பரமத்திவேலூரிலும், 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






