என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன்: இந்திய கபடி வீராங்கனைகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
- இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
- இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கபடி அணி இந்தத் தொடர் முழுவதுமே தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டியிலும் தங்கள் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
இறுதிப்போட்டியில் 35- 28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணியினர் வென்று உலக அரங்கில் இந்திய மகளிரின் விளையாட்டு வீரத்தை நிரூபித்திருக்கிறார்கள். மொத்தம் 11 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றதால் ஒட்டு மொத்ததேசமும் பெருமை அடைந்துள்ளது.
மேலும் இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்திய மகளிர் கபடி அணியின் வீராங்கனைகளுக்கு துணை நின்ற பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






