என் மலர்
சென்னை
- மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
- மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:
* மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
* மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
* ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.
* மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
* மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.
* சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
* பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்.
* மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
* மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
* பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
* தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க. கட்சியில் ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார்.
- அன்புமணி தரப்பு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் நிலையில் அவர் டெல்லி செல்கிறார்.
பா.ம.க.வின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்படையில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவராக தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின்போது 'ஏ' மற்றும் 'பி' படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அன்புமணி கையொப்பமிட்ட படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து ராமதாஸ் தரப்பு அணி ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர்கள் அருள் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு அணியினர் கூறுகையில்,
பா.ம.க. கட்சியில் ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அந்த விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாம்பழச் சின்னம் ராமதாஸ் அணிக்கு மட்டும் தான் சொந்தமாகும். ராமதாஸ் தரப்பில் 12 கடிதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்து மறைக்கப்பட்டு, போலியான ஆவணங்களை அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எங்களது கடிதங்களை ஆய்வு செய்து ஒரு நியாயமான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்றால், ராமதாஸ் அணி தரப்பில் இருந்து கண்டிப்பாக நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் மன்றம் ஆகியவை முன்னிலையில் எங்களது கோரிக்கையை முன்வைத்து சட்ட போராட்டங்களை மேற்கொள்வோம். பா.ம.க. கட்சி விவகாரத்தில் ராமதாசை ஏமாற்ற மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பா.ம.க.வை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான பணிகளில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணி தரப்பு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் நிலையில் அவர் டெல்லி செல்கிறார். ஓரிரு வாரங்களில் ராமதாஸ் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன.
இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உள்ளது.
இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 3-வது கட்டமாக கடந்த 2021-ம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்பட உள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் 39 கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ம.க. தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது.
இதேபோல் ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
- நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. 18-ந்தேதி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,230-க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,290-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 82,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 145 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840
18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 82,160
16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240
15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-09-2025- ஒரு கிராம் ரூ.143
18-09-2025- ஒரு கிராம் ரூ.141
17-09-2025- ஒரு கிராம் ரூ.142
16-09-2025- ஒரு கிராம் ரூ.144
15-09-2025- ஒரு கிராம் ரூ.143
- கட்டண உயர்வு தொடர்பாக யு.ஐ.டி.ஏ.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
- கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும்.
சென்னை:
ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து யு.ஐ.டி.ஏ.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது உள்ள ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயருகிறது. அதேபோல் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிற புதுப்பிப்பு சேவைகளின் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- இன்றும் நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
- நம் தாய்மடி எனச் சொன்னோம்!
- இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பட்டினப்பாலையின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நம் தாய்மடி எனச் சொன்னோம்!
இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும்.
இஸ்ரேல் நடத்தி வரும் போரில் காசா மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
கடந்த 2023 அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் பீரங்கிகள் மூலம் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இது ஒரு இனப்படுகொலை என என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தினர்.
இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "ஒரு அநியாயத்திற்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால் நாங்கள் அரசியல் தான் பேசுவோம்.
நாம் மவுனமாக இருந்தால் பாதிப்புகள் மோசமாகவே இருக்கும். ஒரு கவிஞன் சொன்னான், எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும். பறவைகளின் சத்தம் எனக்குக் கேட்க வேண்டும் என்றால் யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும் என்கிறான்.
ஒரு மனிதனின் உடலில் காயம் ஏற்பட்டிருந்தால் மவுனமாக இருந்தால் கூட அது சரியாகிவிடும். ஆனால், ஒரு நாட்டிற்கு நாட்டு மக்களுக்குக் காயம் ஏற்படும்போது மற்றவர்கள் அமைதியாக இருந்தால் அந்தக் காயம் அதிகரிக்கவே செய்யும். எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும். வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம். மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்றார்.
- இன்று மாலை மும்பையில் இருந்து 176 பயணிகளுடன் தாய்லாந்துக்குக்கு விமானமானது புறப்பட்டது.
- சென்னை விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மும்பை - தாய்லாந்து இடையே இயக்கப்படும் இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் தரையிறங்கியது.
இன்று மாலை மும்பையில் இருந்து 176 பயணிகளுடன் தாய்லாந்துக்குக்கு விமானமானது பயணத்தை தொடங்கியது.
இதற்கிடையே மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, விமானத்தின் கழிவறைக்குள் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாகவும், நடுவானில் அது வெடித்துச் சிதற இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து உடனே சென்னை விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டு இரவு 7.20 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், விமானத்துக்குள் இதுவரையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முழுமையான சோதனைக்கு பிறகு விமானம் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் எனத் தெரிகிறது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி வரை பிரசாரம்.
- ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொள்ளும் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி கோவை வடக்கு வரை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மேலும், 5ம் தேதி கிருஷ்ணகிரி, 6ம் தேதி தருமபுரி, 7ம் தேதி ஈரோடு நகரம், ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
8ம் தேதி ஈரோடு தெற்கு, 9ம் தேதி திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு பகுதிகளிலும், 10ம் தேதி திருப்பூர் வடக்கு, 11ம் தேதி கோவை நகர், கோவை தெற்கு, 12ம் தேதி நீலகிரி, கோவை வடக்கில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
- வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், தவெக பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதம் 13ம் தேதியில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தது.
மேலும், வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், வரும் 27ம் தேதி அன்று சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம செய்ய உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.
- தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.






