என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக தீவிரமாகிறது - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
- தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும்.
சென்னை:
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக உருவாகியது.
இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-
நேற்று மலேசியா ஜலசந்திர் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த மண்டலம் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அதன் பின்னர் இன்று காலையில் அது புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் இந்தோனேசியா பகுதிகளை கடந்து அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தீவிரமடையும் என்பதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தென் மாவட்டத்திலும், டெல்டா மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 செ.மீ. ராமேஸ்வரம் 6 செ.மீ. மண்டபம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.






