என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.-வா? - த.வெ.க.-வா? - முடிவு செங்கோட்டையன் கையில்
- எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் குரல் எழுப்பினார்.
- பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
சமீபத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் குரல் எழுப்பினார்.
இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினர். இதுகுறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான். இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன். தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர். இ.பி.எஸ். எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு முறை தோற்றால் மறுமுறை வரலாற்று வெற்றி பெறுவார் ஜெயலலிதா. இ.பி.எஸ்.-க்கு பதவி கிடைப்பதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுத்தவன் நான். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இ.பி.எஸ். என்று தெரிவித்தார்.
இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளர்களும் த.வெ.க. சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டையனுக்கு அதிகாரம் தரவும் வாய்ப்பு உள்ளது. த.வெ.க.வின் மாநில நிர்வாகிகள் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொடுக்க அக்கட்சி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் தி.மு.க.வுக்கு எதிராக பேசியதில்லை என்றும், அவர் தி.மு.க.வின் 'பி-டீம்' எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்த நிலையில், செங்கோட்டையனை தி.மு.க. பக்கம் இழுப்பதற்கான அரசியல் நகர்வுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன் தி.மு.க.விற்கு செல்வாரா? த.வெ.க.விற்கு செல்வாரா? என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரிந்து விடும்.






