என் மலர்tooltip icon

    அரியலூர்

    பிறப்பு சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்த அரசு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முத்து முகமது. இவர் பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்கும் பணியையும் செய்து வந்தார். அரியலூர் மேலத் தெருவை சேர்ந்தவர் ராசுகுட்டி (வயது 25) தொழிலாளி. இவர் தனது மகளுக்கு பிறப்பு சான்றிதளுக்கான மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த 3 மாதமாக சான்றிதழ் வழங்கப்பட வில்லை. 

    இந்நிலையில் நேற்று ராசு குட்டி பிறப்பு சான்றிதழ் வாங்க அரியலூர்  நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது முத்து முகமது சான்றிதழ் வாங்க நாளை வரும்படி ராசுகுட்டியிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராசு குட்டி அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியால் முத்து முகமதுவை தாக்கினர். பின்னர் முத்து முகமதுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்தார். 

    இது குறித்து முத்து முகமது அரியலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் வழக்குபதிவு செய்து ராசுகுட்டியை கைது செய்தார். #tamilnews
    பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய எச்.ராஜாவை கண்டித்து செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு தி.க., தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அண்மையில் சாதி வெறியை தூண்டும் பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறியுள்ளார். இதனை கண்டித்து செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு தி.க., தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். 

    தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் பெருநர்கிள்ளி, ஒன்றிய செயலாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென சிலர் ராஜாவின் உருவ பொம்மையை கொண்டுவந்து எரித்தனர். இதையடுத்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உருவ பொம்மையை பிடுங்கி தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஆண்டிமடத்தில் திராவிடர் கழகம் சார்பில், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று பேசியதை கண்டித்து அவரை கைது செய்ய வலியுறுத்தினர். பின்னர் அவரது உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சிந்தனைசெல்வன் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews
    அரியலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி படித்த மாணவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவரது மகன் மருதுபாண்டி (15), அரியலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி, 10-ம் வகுப்பு பயின்று வந்தான்.

    மாணவன் மருதுபாண்டி தினமும் விடுதி வார்டனின் செல்போனை வாங்கி பெற்றோருடன் பேசுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் மாணவனிடம் இருந்து எந்த அழைப்பும் பெற்றோருக்கு வரவில்லை. இதனால் அவர்கள் அரியலூரில் உள்ள அரசு விடுதிக்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது 2-ந் தேதி இரவு 8 மணிக்கு வெளியே சென்ற மாணவன் இதுவரை திரும்பவில்லை என விடுதி காப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவனின் பெற்றோர் அரியலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மாணவன் மருது பாண்டியை தேடி வருகின்றனர்.

    மேலும் பள்ளி, விடுதியில் உடன் இருந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவு சின்னம் மற்றும் சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    மத்திய அரசால் வரலாற்று நினைவுசின்னங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் 300 மீட்டர் தூரத்திற்குள் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவு சின்னம் மற்றும் சுற்றுலா தலங்களில் 300 மீட்டர் தூரத்திற்குள் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். #tamilnews
    தமிழகத்தில் பெரிய தலைவர்கள் இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என சரத்குமார் கூறினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ஜமீனுக்கு சொந்தான பெரிய கோவிலில் சரத்குமார் கதா நாயகனாக நடிக்கு பாம்பன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைய அரசியலே அரசியலாக உள்ளது. நடிகர் சங்கத்தை பற்றி எனக்கு தெரியாது என்றும் தான் உறுப்பினராக கூட இல்லை. ஒக்கி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு குறைந்த அளவு நிதி கொடுத்துள்ளது. பாதிப்பின் தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசு, மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரவேண்டும்.

    நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு நல்லது தான். மக்களுக்கு யார் நல்லது செய்தால் என்ன? ஆனால் அவர்கள் அரசியலுக்கு எப்போது வரவேண்டும் என்று உள்ளது. தற்போது இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

    கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்விக்கு கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும், அவர்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றார். தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளித்து கொண்டிருந்த கப்பலை சீரமைத்து கொண்டு செல்கின்றனர். அதற்கு நான் முதலில் பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன்.

    மத்திய அரசுடன் மாநில அரசு அதிக இணக்கத்துடன் உள்ளது. நான் 21 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். ஓய்வு பெற்று ஓய்ந்த பிறகு அரசியலுக்கு வரவில்லை வெற்றி படங்கள் தந்தபோதும், சூப்பர் ஸ்டாராக இருந்த போது அரசியலுக்கு வந்தேன். நேரம் வரும், காலம் வரும், நானும் ஆட்சி பொறுப்பில் வந்து அமருவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி உடனிருந்தார்.
    அரியலூர் அருகே பெண் எஸ்.ஐ. தாக்கியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 33). நேற்றிரவு இவர் அப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ் பெக்டர் காயத்ரி, சின்னதுரையை மறித்து வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டார். அப்போது சின்னதுரை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை எச்சரித்த, சப்- இன்ஸ்பெக்டர் காயத்ரி, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற சின்னதுரை, நடந்த சம்பவம் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்து விட்டு தூங்கி விட்டார். இன்று காலை எழுந்து பார்த்தபோது சின்னதுரையை காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய போது, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் சின்னதுரை பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சிய டைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

    மேலும் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரும்புலிக்குறிச்சி,- உடையார்பாளையம் சாலையில் திரண்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்த தும் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சப்- இன்ஸ்பெக்டர் காயத்ரி, சின்னதுரையை அவதூறாக பேசி தாக்கியதால்தான் மன முடைந்து சின்னதுரை தற்கொலை செய்துள்ளார்.

    எனவே எஸ்.ஐ.காயத்ரியை கைது செய்ய வேண்டும் என்று புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய விசாரணை நடத்துவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சின்னதுரை உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்கொலை செய்த சின்னதுரைக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். நேற்று ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    அரியலூர் அருகே ரூ.800 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், தொழிலாளி. குடும்பத்தகராறு காரணமாக இவரது உறவினர்கள் 4 பேர் மீது விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களை ஜாமீன் எடுக்க 8 பேரின் அத்தாட்சி தேவைப்படவே, பரமசிவம், ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியான கீழப்பளூர் கிராமத்தை சேர்ந்த நாராயணனை சந்தித்து அத்தாட்சி வழங்குமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் நாராயணன், அத்தாட்சி வழங்க வேண்டுமென்றால் தனக்கு 800 ரூபாய் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பரமசிவம், இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை பரமசிவத்திடம் கொடுத்து அனுப்பினர். அவர் ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வி.ஏ.ஓ. நாராயணனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 21.5.2004 அன்று நடந்தது.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார். அதில் நாராயணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். #Tamilnews
    தமிழகத்தில் உள்ள 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களும் ஜெயலலிதாவைத்தான் வணங்கினோமே தவிர பின்னால் இருந்த பணிப்பெண் சசிகலாவை அல்ல என குன்னம் எம்.எல்.ஏ. பேசினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது:-

    ஒரு ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் மக்கள் அனைவரும் பயபக்தியுடன் பவ்வியமாக சிவனை வணங்கி வந்தார்கள். சிவன் கழுத்தில் இருந்த பாம்பு நம்மைதான் இந்த மக்கள் வணங்குகிறார்கள் என்று நினைத்து கொண்டு இருந்ததாம்.

    கோவிலில் சிவன் இல்லாதபோது ஊருக்குள் சென்ற பாம்பை தீயசக்தி வந்து விட்டதாக எண்ணி அந்த பாம்பை விரட்டி அடித்தனர். அதேபோன்று தமிழகத்தில் இருக்கும் 1½ கோடி தொண்டர்களும் ஜெயலலிதாவைதான் விழுந்து வணங்கினோமே தவிர அவரது பின்னால் இருந்த பணிப்பெண் சசிகலாவை அல்ல.


    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் வேலைக்காரி சசிகலா, தானே ஜெயலலிதாவாக எண்ணிக்கொண்டு தொண்டர்களிடம் வந்த போது அ.தி.மு.க. தொண்டர்கள் தீயசக்தி வேலைக்காரி சசிகலாவை வெறுத்து ஒதுக்கினோம்.

    தற்போது சிறையில் இருக்கும் சசிகலா மீண்டும் இரட்டை இலையை மீட்டு, தி.மு.க.வின் குடும்ப ஆட்சியைப்போன்று தனது குடும்ப ஆட்சியை கொண்டு வந்த தமிழக மக்களின் வரிப் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று கனவு காண்கிறார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலில் ஒரு நாளும் ஜெயிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பேசினார்.
    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசெயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பேரவை நகர செயலாளர் லோகராஜ் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன்  எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன் பேசியதாவது:-

    மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறோம். அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர் கட்சி துவங்கவில்லை. பொதுமக்களும், ரசிகர்களும் தலைவா வா கட்சி ஆரம்பிக்க என்று சொன்னததால்தான் இந்த இயக்கம் உருவானது. 1கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். நடிகராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் முதலமைச்சரானார். ம.பொ.சி, சிவாஜிகணேசன், பாக்கியராஜ், ராஜேந்தர், அனைவரும் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? கமலஹாசன், ரஜினிகாந்த், ஆகியோர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அரசியலில் ஒரு நாளும் ஜெயிக்க முடியாது.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. எம்ஜிஆர். மறைவிற்கு பிறகும் ஒன்றரை கோடி தொண்டர்களை கட்டி காத்தவர் ஜெயலலிதா. ஆற்றல் மிக்க தலைவி. நாடாளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும் தனித்து நின்று வெற்றி பெற்றவர். 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது. ஜெயலலிதா இல்லாமல் இந்த பிறந்தநாளை கொண்டாடி வருகின்றோம். மிகுந்த வேதனையை அளிக்கின்றது. தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி தொடர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனையில் நர்சுக்கு மிரட்டல் விடுத்த போலி நிருபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிபவர் சுலோச்சனா (வயது 38). இவர் நேற்றிரவு பணியில் இருந்த போது மணப்பத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான சுரேஷ்(35) , அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பால்சாமி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க வந்தனர்.

    அப்போது மருத்துவமனையில் மின்விசிறி இயங்காதது குறித்து சுலோச்சனாவிடம், சுரேஷ் தகராறு செய்தாராம். மேலும் தான் நிருபர் எனக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

    இது குறித்து தகவலறிந்து செந்துறை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அதற்குள் சுரேஷ் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து செவிலியர் சுலோச்சனா அளித்த புகாரின் பேரில் போலீசார் சுரேசை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணையில் சுரேஷ், போலி நிருபர் எனவும் தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில்  போலி நிருபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசு அதிகாரிகள் -மருத்துவமனை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    அரியலூரில் நடை பெற்ற திராவிடகழக கலந்துரையாடல் கூட்டத்தில் திக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    அரியலூர்:

    அரியலூர் ஜி.ஆர் திருமண மண்டபத்தில் திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் துரைசந்திரசேகர், ஓய்வு பெற்ற பேராசிரியர் தங்கவேல்,மண்டல தலைவர் காமராஜ், மண்டல செயலாளர் மணி வண்ணன், மாவட்ட தலைவர் சிந்தனைச் செல்வன், மாவட்ட செயலாளர் விடுதலை நீலமேகம், ஒன்றிய செயலாளர் கோபால், நகர தலைவர் கோவி ந்தராஜ், சிவக் கொழுந்து, செல்லமுத்து, செந்துறை சிவமூர்த்தி, அரியலூர் டாக்டர் வசந்தா மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மோடி துவங்கி வைப்பது அவசியமல்ல, காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்யது மிக முக்கியம், வரும் 22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது வரவேற்கதக்கதாகும். 

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் காழ்ப்புனர்ச்சிகளை விட்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் நல்ல தீர்வு கான முன்வர வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் நானும் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். #tamilnews
    அரியலூரில் தினகரன் அணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசானை கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரியலூர்:

    அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று அ.தி.மு.க. தினகரன் அணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் எம்.எல்.ஏ.வும், தினகரன் அணியின் பொருளாளருமான ரெங்கசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன் , முன்னாள் எம்.எல்.ஏ. துரை மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரெங்கசாமி எம்.எல்.ஏ.பேசும் போது, திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து நாற்காலியில் அமர வைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். #tamilnews
    ×