என் மலர்
அரியலூர்
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கமலம். இவர்களுக்கு பொன் குடிக்காட்டில் கமலத்தின் அண்ணன் அண்ணாதுரை வீடு அருகே வீட்டு மனை உள்ளது. இதில் இரு குடும்பதினருக்கும் இடையே எல்லை தகராறு இருந்து வந்தது.
பொன் பரப்பி ஊராட்சி சார்பில் பொன் குடிக்காட்டில் உள்ள ரவிசந்திரன் வீட்டு மனை முன்பு குடிநீர் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தகவலறிந்த ரவி சந்திரன் ,ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அங்கு குடிநீர் தொட்டி அமைக்கக் கூடாது என கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் கமலத்தின் அண்ணன் அண்ணாதுரை பிரச்சினைக்குரிய இடத்தில் போர் போடுவதற்காக போர் வெல் இயந்திரத்தை கொண்டு வந்தார். இதனை ரவிசந்திரன், கமலம் தடுத்தனர்.
அப்போது அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் இவர்களை தாக்கியுள்ளனர், காயமடைந்த ரவி சந்திரன், கமலம் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக செந்துறை போலீஸ் நிலையத்தில் ரவிசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாதுரை அவரது மனைவி இளவரசி, மகன் அருண்குமார் மற்றும் உறவினர் இளவரசன் மீது வழக்குபதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை பெருமாள் கோவில் பின்புற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஆதிகுடிக்காடு பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (வயது 30), பழனியம்மாள் (45), அசலம்பாள் (39) ஆகியோர் அறுவடை பணியில் ஈடுபடுவதற்காக இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக அறுவடை பணிக்கு டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்ட அறுவடை எந்திரத்தின் மீது ஏறி 3 பேரும் அமர்ந்து சென்றனர். டிராக்டரை ஆதிகுடிக்காடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (35) ஓட்டிச் சென்றார்.
பெருமாள் கோவில் அருகே வயல் பகுதிக்கு சென்றதும், அங்குள்ள வரப்புகளில் டிராக்டர் ஏறிச் சென்ற போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. அப்போது 3 பேரும் அறுவடை எந்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அறுவடை எந்திரத்தை தூக்கி நிறுத்தினர். அதன்பிறகு உள்ளே இருந்த 3 பேரையும் மீட்டனர். அப்போது அவர்கள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்னக்கிளி பலியானார்.
டிராக்டர் டிரைவர் ராமச்சந்திரன் குடிபோதையில் டிராக்டரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக செந்துறை போலீசார், டிரைவர் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அறுவடை எந்திரம் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று அரியலூர் அருகே பெண் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் அவரது மகள் திருமணத்திற்காக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் தேவைப்பட்டதால், இலுப்பையூர் கிராம நிர்வாக அதிகாரி ராமசாமியை சந்தித்து சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாத்துரை, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ராமசாமியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதனை அவர் இலுப்பையூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, ராமசாமியிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் ராமசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார். அதில், வி.ஏ.ஓ. ராமசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். #Tamilnews
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே காலனி நகரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55), கொத்தனார். இவர் இன்று காலை தா.பழூர் அருகே சிந்தாமணியில் உள்ள மயான கொட்டகையில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மேற்கூரையில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது மயான கொட்டகைக்கு மேலே சென்ற மின்சார வயர் தங்கராசு கையில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து சேகர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்தும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா. பழூர் அருகே உள்ள சிந்தாமணியில் திடீர் சாலை மறியல் செய்தனர்.
மாயன கொட்டகையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்தும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இறந்துபோன கொத்தனார் சேகருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். #tamilnews
ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகராட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கடை வீதி, பேருந்து நிலையம், நகர்புற சுகாதார மையம் உள்ளிட்ட 24 மையங்ளும், மீன் சுருட்டி வட்டாரத்தில் 123 மையங்களில் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்பட்டது.
மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்ள், ஊட்டசத்து பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற் பார்வையாளர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் என 650 பேர் பணியாற்றினார். மேலும் இந்த முகாம் இன்று விடுபட்டவர்களுக்காக மீண்டும் 13-ம் தேதி வரை ஒவ்வொரு வீடாக சென்று கிராம சுகாதார செவிலியர்கள் மருந்து கொடுக்கவும் உள்ளனர்.
மீன்சுருட்டி வட்டாரத்தில் உள்ள 12 ஆயிரத்து 50 குழந்தைகளில் 11 ஆயிரத்து 752 பேருக்கு கொடுக்கபட்டுள்ளது. மேலும் இரண்டு தினங்களில் 100 சதத்தை முடிக்க உள்ளனர்.
போலியோ சொட்டு மருந்து முகாம் தினத்தை முன்னிட்டு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லஷ்மிதரன் தலைமையில் முகாம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெற்றோர்கள் 5 வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து கொடுத்து அழைத்து சென்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 60). இவர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே அன்பழகனுக்கு செந்துறை அருகே உள்ள சேரன்குடிகாட்டை சேர்ந்த சிவஞானம் என்ற (45) பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அதுவே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. அன்பழகன், சிவஞானத்துடன் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். வசந்தா தனது மகன் சாமிநாதனுடன் ஒக்கநத்தம் கிராமத்தில் வசித்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலையில் வசந்தாவுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் உங்களது கணவர் அன்பழகன் வேலாயுதநகரில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இது குறித்து வசந்தா ஜெயங்கொண்டம் போலீசுக்கு தகவல் கொடுத் தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது வீட்டின் குளியறையில் கைலியில் தூக்கு போட்ட நிலையில் அன்பழகன் பிணமாக தொங்கினார். உடனே ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வசந்தா போலீசில் அளித்த புகாரில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கூறி உள்ளார். அன்பழகன் இறந்தவுடன் அவரது கள்ளக்காதலி சிவஞானம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அன்பழகன் கள்ளத்தொடர்பு பிரச்சனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்லும் பயணிகள் நிற்கும் வகையில் இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை கடந்த 1998ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த நிழற்குடை பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் இடத்துக்கு இடையூறாகவும், கடைகள் மறைக்கும் வகையில் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பயணிகள் நிழற்குடை 2016 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவையடுத்து இடிக்கப்பட்டது.
ஆனால், இன்று வரை மக்கள் தஞ்சை செல்ல பேருந்துக்காக மழை,வெயிலில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தஞ்சை சாலையில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதைக் கண்டித்தும், உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவுக்கு நீதி கேட்டும், அவருக்கு அநீதி இழைத்த காவலருக்கு தூக்கு தண்டனை வழங்க கோரியும், தற்காலிக இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க கோரியும் குடை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்க தலைவர் வரதராசன் தலைமை வகித்தார். மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன், தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர் தங்க ஜெயபாலன், மாவட்ட காங்கிரஸ் மகளிரணி மாரியம்மாள், சமூக ஆர்வலர்கள் பாஸ்கர், பாளை. திருநாவுக் கரசு உட்பட பலரும் கலந்து கொண்டனர். #tamilnews






