என் மலர்
செய்திகள்

திருமானூரில் குடை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்லும் பயணிகள் நிற்கும் வகையில் இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை கடந்த 1998ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த நிழற்குடை பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் இடத்துக்கு இடையூறாகவும், கடைகள் மறைக்கும் வகையில் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பயணிகள் நிழற்குடை 2016 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவையடுத்து இடிக்கப்பட்டது.
ஆனால், இன்று வரை மக்கள் தஞ்சை செல்ல பேருந்துக்காக மழை,வெயிலில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தஞ்சை சாலையில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதைக் கண்டித்தும், உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவுக்கு நீதி கேட்டும், அவருக்கு அநீதி இழைத்த காவலருக்கு தூக்கு தண்டனை வழங்க கோரியும், தற்காலிக இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க கோரியும் குடை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்க தலைவர் வரதராசன் தலைமை வகித்தார். மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன், தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர் தங்க ஜெயபாலன், மாவட்ட காங்கிரஸ் மகளிரணி மாரியம்மாள், சமூக ஆர்வலர்கள் பாஸ்கர், பாளை. திருநாவுக் கரசு உட்பட பலரும் கலந்து கொண்டனர். #tamilnews






