என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த அதிகாரி மனைவியை கொன்று நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 5-வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 50). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி பாரதி (45). இந்த தம்பதிக்கு ஆதித்யன் (12) என்ற மகனும், ஆர்த்தி (14) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    நேற்று காலை இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். குணசேகரன் திட்டக்குடிக்கு சென்று விட்டார். தினமும் பள்ளி முடிந்தவுடன் பாரதி பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து வருவார்.

    ஆனால் நேற்று தாய் வராததால் குழந்தைகள் இருவரும் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை. பின்பக்கமாக சென்று சமையலறை ஜன்னல் வழியே பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தைகள் அலறினர்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாரதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    பாரதியின் கழுத்தில் கத்தி குத்தும், பின்புறம் தலையில் பலத்த காயமும் இருந்தது. பாரதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயின் மற்றும் 5 பவுன் செயின் ஒன்றையும் அறுத்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அனைத்து பீரோக்கள் உடைந்த நிலையிலும் இருந்தன. பீரோ மற்றும் லாக்கரில் இருந்த பவுன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த வீட்டிலிருந்து அருகில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள பாப் பாங்குளம் கிராமம் தெற்கு தெரு வரை சென்று அங்கேயே சிறிது நேரம் சுற்றி வந்தது. அதன்பின்னர் பெரம்பலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

    அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபிநவ்குமார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பாரதி அணிந்திருந்த தாலிச்செயினில் தாலியை மட்டும் துண்டாக்கி அதனை விட்டு விட்டு, செயின்களை மட்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் பாரதி பயன்படுத்திவந்த 2 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

    அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    அரியலூர்:

    தஞ்சையில் மாநகராட்சி ஆணையரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாநகராட்சி ஆணையர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இதேபோல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தஞ்சை மாநகராட்சி ஆணையர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். 
    ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிமடம்:

    ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர் அருகே விஏஓ பால சுப்ரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கீழமைக் கேல் பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்ச் அருகே செல்லும்போது எவ்வித அனுமதி இன்றி மணல் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி கேட்ட போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து விஏஓ பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    மேலும் சாத்தம்பாடி விஏஓ வீரபாண்டியன் செங்குழி பறனேரி ஓடையில் ஜேசிபி வைத்து டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டிருந்த போது மறித்து விக்கிரமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குபதிந்து செட்டிதிருக்கோணத்தை சேர்ந்த வன்னிய ராஜன்(41), டிராக்டர் டிரைவர் கும்பகோணம் குருங்குடியை சேர்ந்த பழனி செல்வம்(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார். மேலும் ஜேசிபி எந்திரம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    அரியலூர் நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    எனவே உயர்த்தப்பட்ட வரியை வாபஸ் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி அரியலூரில் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று அரியலூர் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் நிலையம், சின்னக்கடை, பெரிய கடை வீதிகள், திருச்சி மற்றும் பெரம்பலூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. கார், ஆட்டோ, பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

    கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே அரியலூர் நகராட்சி கமி‌ஷனர் வினோத், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #Tamilnews
    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. 

    இதையொட்டி ஏலாக்குறிச்சி கடைவீதியில் பங்குதந்தை சுவக்கின், உதவி பங்குதந்தை திமோத்தி, திருத்தொண்டர் லூக்காஸ் மற்றும் அடைக்கல அன்னையின் பங்கு மக்கள் முன்னிலையில் குருத்தோலை மந்திரிக்கப்பட்டு, பக்தர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஆலயத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    தொடர்ந்து, பங்கு தந்தை சுவக்கின் தலைமையில் உதவி பங்கு தந்தை திமோத்தி முன்னிலையில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஏசுவின் பாடுகள் பற்றி கூறப்பட்டு ஜெபிக்கப்பட்டது. 
    இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், திருமானூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்கு தந்தை பெல்லார்மின் தலைமையில் குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது. 

    அதேபோல், புதுக்கோட்டை தூய மங்கள மாதா, குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியர், கோக்குடி புனித இஞ்ஞாசியர் ஆலயம் போன்றவற்றில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. 
    கல்விதுறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் பேசினார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே காத்தான் குடிகாட்டில் சென்னை அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரியான அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஆதி லட்சுமி வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குனர் அருண்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கூடுதல் பதிவாளரும், விளையாட்டு வாரிய தலைவருமான செல்லதுரை, எம்.பி.  சந்திர காசி, எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம், கல்லூரி துறை தலைவர்கள், பேரா சிரியர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,  கல்விதுறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கல்வி கற்ற மனிதன்தான் சிறந்த மனிதனாக விளங்க முடியும். கல்விதுறைக்கு அதிக நிதி ஒதுக்கியது ஜெயலலிதா தான். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதாதான். அவர் விட்டு சென்ற பணியை தற்போதைய எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான தமிழக அரசு கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  

    அரசாங்க தேர்வுகளில் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகலாம். முயற்சியை மேற்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். கல்வி அறிவுடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அது உடல் நலத்திற்கு நல்லது.ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை. மாணவர்கள் அரசியலுக்கும் வரவேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    முடிவில் மின்னியல்துறை தலைவர் ஷோபனா தேவி நன்றி கூறினார். 
    அரியலூரில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை ஜோலார்பேட்டையில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் பஸ் நிலையம் எதிரே சிறைச்சாலை (சிறுவர் சீர்திருத்தப்பள்ளி) உள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த 19-ந் தேதி வழக்கம் போல் சிறையில் உள்ளவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக அறை கதவு திறந்து விடப்பட்டது. கழிவறைக்கு சென்ற சிறை கைதி நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்த காமராசன் மகன் மணிகண்டன் (வயது 19) திடீரென சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். 

    இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பாலு, அரியலூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் தப்பியோடிய கைதியை பிடிக்க திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு நிஜிலா ராஜேந்திரன் தலைமையில், சிறைத்துறை தலைமை காவலர்கள் பட்டுக்கோட்டை மணிகண்டன், செந்தில்குமார், அரியலூர் பாலசுப்பிரமணியன், தஞ்சை கமானந்தன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மணிகண்டன் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 

    பின்னர் தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்தனர். இதில் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் உள்ள தனது அக்காள் வெண்ணிலா வீட்டில் அவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று மணிகண்டனை பிடித்தனர். பின்னர் போலீசார் மணிகண்டனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி வக்கீல்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூரில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று கண்ணில் கருப்பு துணி கட்டி நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். போராட்டத்தில், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தில் உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வக்கீல்கள் பேசினர். போராட்டத்தில் திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கொளஞ்சி நாதன் நன்றி கூறினார். 
    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆண்டிமடம்:

    தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என சட்டசபையில் வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின்  மற்றும்  தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

    தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் அங்கு மறியல் நடைபெற்றது. மறியலில் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூசைராஜ், நாகராசன், எழிலரசி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், கண்ணதாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகைகுமரன் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி ராஜா தியேட்டர் பேருந்து நிலைய த்தின் முன்பு பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் நகரச்செயலாளர் பால்துரை, முத்துக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் கோல்டன் ராஜேந்திரன் ,பெரியசாமி, செந்தாமரைக்கண்ணன், முருகேசன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கண்ணன் உள்பட சுமார் 35 பேர்  மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் கந்தர்வகோட்டை ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில்  சாலை மறியல் போராட்டம் மாவட்ட அவைத் தலைவர் மாரியய்யா தலைமையில் நடைபெற்றது.  தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், கந்தர்வகோட்டை நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட துணை அமைப்பு  பொறுப்பாளர்கள் சுந்தம்பட்டி ராமசாமி, அண்டனூர் முருகையா, நியூஸ் ராஜேந்திரன், சௌந் தர்ராஜன், அரவம்பட்டி முத்துக்குமார் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    அரியலூர்:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சிக்கு அடுத்தபடியாக அரியலூரில் தான் கோர்ட் அமைக்கப்பட்டது.

    தற்போது மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மகிளா கோர்ட், சப்கோர்ட், குடும்பநல கோர்ட், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதிதுறை நடுவர் நீதிமன்றம் எண்-1, எண்-2, நுகர்வோர் கோர்ட் உட்பட 11 கோர்ட்டுகள் உள்ளது.

    இதில் மகிளா கோர்ட், குடும்ப நலநீதிமன்றம், நுகர்வோர் கோர்ட் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதில் 2 நீதிபதிகளுக்குதான் நீதிபதி குடியிருப்பு உள்ளது. மற்ற நீதிபதிகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசிற்கு மாதம் பல லட்சம் ரூபாய் செலவாகிறது.

    பழமையான கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சுற்றிலும் முட்புதர்கள் மண்டிகிடப்பதால் பாம்பு, பல்லி, பூச்சிகள் படையெடுத்து வருகின்றது. பாதுகாக்கப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் மழை காலங்களில் நனைகின்றது.

    கோர்ட்டில் சுமார் 200 வழக்கறிஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 17ஆண்டு காலமாக வக்கீல்கள், அனைத்து தரப்பு பொதுமக்கள், அரசியல்வாதிகள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக உருவாக்கப்பட்டது. அனைத்து தரப்பு அரசு அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட தலைநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுப்பது அரசின் கடமை. ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் கொடுக்கும் முதல் தேர்தல் வாக்குறுதி அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படும் என்று. வெற்றி பெற்ற பிறகு எட்டிகூட பார்ப்பதில்லை என்று புகார் கூறுகின்றனர் பொதுமக்கள். வக்கீல் சங்கத்தினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

    மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 23.8.2017 அன்று அரியலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வக்கீல் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

    தலைமை செயலகத்திலிருந்து மனு மீது பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் வந்ததே தவிர எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூர் - திருச்சி பைபாஸ் சாலையில் அம்மாகுளம் கிராம பகுதியில் அமீனாபாத் எல்லையில் நிலம் பார்வையிடப்பட்டு சர்வே செய்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க போதுமான இடம் என அரசு அறிக்கை அனுப்பியும் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

    இந்நிலையில் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துக் கொடுக்க கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என வக்கீல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    எனவே அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #tamilnews
    அரியலூர் கிளை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் நகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் அருகே ஒரே வளாகத்திற்குள் வட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், தீயணைப்புத்துறை அலுவலகம் அமைந்துள்ளது.

    இதே வளாக்ததிற்குள் சிறுவர் சீர்திருத்த பள்ளியான கிளைச்சிறைச்சாலையும் உள்ளது. இந்த சிறையில் 18 முதல் 21 வயது வரையிலான கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம்.

    20 பேர் வரை அடைக்கப்படும் இந்த சிறையில் நேற்றைய தினம் 3 பேர் மட்டும் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைபிரியான் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் மணிகண்டன் (வயது 19) என்பவர் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த 18-ந்தேதி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைதான மணிகண்டன் நேற்று மாலை உணவு உண்பதற்காக அறையில் இருந்து திறந்துவிடப்பட்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று காம்பவுண்டு சுவரின் மீது ஏறிய மணிகண்டன் அங்கிருந்து கீழே குதித்து தப்பிச்சென்றார்.

    உடனடியாக பணியில் இருந்த சூப்பிரண்டு மற்றும் 3 போலீசார் பல்வேறு இடங் ளில் தேடினர். ஆனால் தப்பிய மணிகண்டன் சிக்கவில்லை. இதுகுறித்து சூப்பிரண்டு பாலு அரியலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் இருந்து தப்பிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகிறார்கள். #Tamilnews
    அரியலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
    அரியலூர்: 

    அரியலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில், மரம் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். 

    சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சுமார் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 138 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இதில், மாவட்ட வனத்துறையின் சார்பில் அடர்த்தி குறைவான காடுகளில் 24 ஆயிரத்து 138 மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 20 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது. மாவட்ட வனத்துறையின் சார்பில், நடப்பாண்டிற்கு தேக்கு, செம்மரம், பெருமரம், எலுமிச்சை மரம், பலா, மாதுளை, கொய்யா, வேம்பு ஆகிய மரக்கன்றுகள் விவசாய பட்டா நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகளை இம்மாவட்டம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. 

    இத்திட்டத்தினை இம்மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பயன்படுத்தி அரியலூர் மாவட்டத்தை பசுமையாக்கிட வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட வன அலுவலர் மோகன் ராம், வனவியல் விரிவாக்க அலுவலர் (விரிவாக்க கோட்டம் பெரம்பலூர்) இளங்கோவன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, வனச்சரக அலுவலர் கணேசன், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×