என் மலர்tooltip icon

    அரியலூர்

    அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவினர் இன்று காலை இரண்டாம் நாள் நடைபயணத்தை தொடங்கினர்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் ஆ.ராசா, வி.பி. துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சாத்தமங்கலம், கள்ளூர் பாலம் வழியாக திருமானூர் சென்றது. பின்னர் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் திருவையாறு வழியாக கும்பகோணம் சென்றடைகிறது.

    முன்னதாக நடைபயணத்தின்போது திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒட்டு மொத்த தமிழகமே காவிரி நீருக்காக போராடி கொண்டிருக்கும் போது அதை திசை திருப்பும் வகையில் ஐ.பில்.எல். போட்டிகளை நடத்துவது வேதனை அளிக்கிறது. இந்த போட்டிகளை நடத்த வேண்டாம் என சொல்லவில்லை. தள்ளி போடுங்கள் அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்றுங்கள் என வலியுறுத்தியும் அதனை மீறி நடத்துவது கண்டனத்திற்கு உரியது.

    சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி காட்டினால், நாங்கள் பச்சை கொடி காட்டுவோம் என தமிழக அமைச்சர் கூறியுள்ளது அக்கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும், இது வரலாற்று பிழையாக அமையும்.


    ஜெயலலிதா இல்லை என்பது இப்போது நமக்கு வேதனையை தருகிறது. அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்பது தெரிய வருகிறது.

    மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களே ஒன்று திரண்டு போராடி கொண்டிருக்கும் போது மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போவது மாபெரும் வரலாற்று கரையாக அமைந்து விடும். மத்திய அரசை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்கிறது.

    இதேபோல் ஐ.பில்.எல். போட்டிகள் நடத்தும் நிறுவனத்தை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    அரியலூர் அருகே நகைக்கடை அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் ஜெயங்கொண்டம் கடை வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி தேவி. இருவரும் காலையில் அங்குள்ள பள்ளி மைதானத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். அதுபோல் இன்று காலை இருவரும் வாக்கிங் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றனர்.

    பின்னர் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.3லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும்.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. கென்னடி, இன்ஸ்பெக்டர்  வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சரவணன் மற்றும் அவரது மனைவி வாக்கிங் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆர்.எஸ்.மாத்தூர் அருகே முதுகுளம் சாலையில் தொழிலாளி தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள இடையக்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது35), தொழிலாளி. இன்று காலை முதுகுளம் சாலையில் தலை நசுங்கிய நிலையில் பாலகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தளவாய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  

    பாலகிருஷ்ணன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. டிராக்டரில் பயணம் செய்யும் போது தவறி விழுந்ததில், சக்கரத்தில் சிக்கி பலியாகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவரை டிராக்டரில் அழைத்து சென்ற நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    திருமானூர் பழைய காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பதால் அதை ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பழைய காவல் நிலையம், எம்.ஜி.ஆர் சிலை எதிரே இயங்கி வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்ததையொட்டி அரியலூர் சாலையில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டு கடந்த 2012-ம் ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பழைய காவல்நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் துரு பிடித்து கிடக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு கேட்பாரற்கு கிடக்கும் இந்த மோட்டார் சைக்கிள்களை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர் அருகே மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகள் முத்துமாரி (30) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. நதியா, நதி, நதிஷ் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், முத்துமாரியை உருட்டுகட்டையால் சரமாரி தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பி னும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்துமாரி இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கூவாகம் போலீசார் கடந்த 3-ந்தேதி நடராஜன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது முத்துமாரி இறந்து விட்டதால், நடராஜன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் இறந்து, தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகள் 3 பேரும் நிர்கதியாய் தவித்து வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்தவர் சூசைமேரி (43). இவர் ஜெயங்கொண்டம் நகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சூசைமேரி பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். 

    இது குறித்து சூசைமேரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில்புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரித்ததில் மேலுரை சேர்ந்த பாலமுருகன் (38) என்பது தெரியவந்தது. இது குறித்து பாலமுருகன் மீது வழக்குபதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    அரியலூர் விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 6 கட்டமாக நடக்கிறது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொள்ளும் திட்டத்தின் கீழ் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பிரதி திங்கட்கிழமை தவிர அனைத்து நாட்களும் நடத்தப்பட உள்ளது.

    அந்த வகையில், முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தொடங்கியது. இந்த நீச்சல் பயிற்சியானது 14-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் மே (மாதம்) 12-ந்தேதி வரையிலும், நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே மாதம் 13-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும், ஐந்தாம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே மாதம் 27-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந்தேதி வரையிலும், ஆறாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஜூன் 10-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை ஆகிய நேரங்களிலும் காலை, மாலை இருவேளையும் 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பயிற்சியில் 12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுத்தரப்படும். எனவே கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன்பெறவும், நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுக்கொள்ளும் மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். உடல் திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளாக உருவாகவும், தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவும், அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ஆக்கி பயிற்றுனரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    ஆண்டிமடம் அருகே ஏரியில் குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடியை சேர்ந்தவர் பழனிவேல்-ராணி. இந்த தம்பதியின் மகள் கலையரசி (வயது 13), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார்.

    சம்பவத்தன்று தனது தோழிகளுடன் அருகில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழம் அதிகமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியபடி சத்தம் போட்டுள்ளார். இதனை குளக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

    அதற்குள் சிறுமி கலையரசி மூச்சு திணறி நீருக்குள் மூழ்கினார். நீண்ட நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பழனிவேல்-ராணி சம்பவ இடத்திற்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். அது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அரியலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசினை கண்டித்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி அரியலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், மாவட்ட அவைதலைவர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், குணா, மணிவண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவி விஜயலட்சுமி உள்பட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு அரியலூர் பஸ் நிலைய நுழைவு வாயிலுக்கு வந்தனர்.

    பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். #tamilnews
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாமரைக்குளம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட தவறிய மத்திய அரசினை கண்டித்தும், மத்திய அரசிற்கு துணைபோன மாநில அரசினை கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் அரியலூர் தேரடியில் இருந்து ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், மெரினாவை திறந்து விட்டால் மாணவர்கள் போராட்டத்தின் மூலம் காவிரியை திறந்து விடுவோம் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மாணவர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களிடம் அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி ஆகியோர் போராட்டத்திற்கு அனுமதி பெற்று போராட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மாணவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அரியலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் அரியலூர் பஸ் நிலைய பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.
    டி.டி.வி. தினகரன் அணியினரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கோவில் எசனை கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் தேவைப்படும் 11 இயக்குனர்களுக்கு ஆளும் அ.தி.மு.க. சார்பில் 11 பேரும், டி.டி.வி. தினகரன் அணி சார்பில் 11 பேரும் கடந்த 26-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனு கடந்த 27-ந்தேதி பரிசீலனை நடைபெற்றது. இதில் எந்த மனுவும் நிராகரிப்பு இல்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அ.தி.மு.க.வை சேர்ந்த 11 பேரின் மனுவை மட்டும் தேர்வு செய்து இயக்குனர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் 11 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திர மடைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று முன்தினம் இரவு ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் தலைமையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

    இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கோவில் எசனையில் பரபரப்பு ஏற்பட்டது. 
    செந்துறை அருகே பொதுமக்களிடம் இருந்து தப்பிய கொள்ளையன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தீமிதி திடல் அருகே இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. நிறுத்தப்பட்டிருந்தது. அதனை திருடிக்கொண்டு வந்த வாலிபர் ஒருவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கொண்டு கடைக்கு வந்தார்.

    கடை உரிமையாளரிடம் வண்டியை ஸ்டார்ட் செய்து தரும்படி கேட்டுவிட்டு, தனது வண்டிக்கு அனைத்து லாக்குகளையும் மாற்ற எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டுள்ளார்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் இந்த வண்டி என்னுடைய நண்பருக்கு சொந்தமானது, நீ எப்படி எடுத்து வந்தாய் என்று கேட்டவுடன் திருடன் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் மருதூர் நோக்கி அந்த வாலிபர் வாகனத்தில் தப்பினார்.

    இதையறிந்த கடை உரிமையாளர் மற்றும் பொது மக்கள் தப்பியோடிய திருடனை விரட்டி சென்றார்கள். இதில் தப்பி ஓடிய திருடன் பொன்பரப்பி பெரிய ஏரி அருகே குறுக்கு வழியில் சென்று விடலாம் என நினைத்து இடது புறமாக திருப்பியுள்ளார்.

    ஆனால் திரும்பும்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். மேலும் பொது மக்கள் தன்னை துரத்தி வருவதை அறிந்த திருடன் எழுந்து அருகில் இருந்த ஏரியில் குதித்து தப்பி விடலாம் என நினைத்து குதித்துள்ளார்.

    ஆனால் பொது மக்கள் ஒரு மணி நேரமாக ஏரியை சுற்றி தேடியுள்ளனர். திருடன் தண்ணீரில் நீந்தி அடுத்த கரை வழியாக தப்பியிருக்கலாம் என நினைத்து கலைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஏரிக்கு குளிக்க வந்தவர்கள் சிலர் ஏதோ சடலம் மிதப்பதாக கூறினர். இதை கேள்விப்பட்டு ஊர்மக்கள் கூட்டம் கூடியது.

    தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடம் வந்த செந்துறை போலீசார் விசாரணை செய்ததில் அந்த வாலிபர் நாச்சியார் பேட்டை மேற்கு தெருவைச்சேர்ந்த கலியபெருமாள் மகன் தளபதி (22)என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×