என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
- தமிழக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி போதைப்பொருட்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்டே போவதற்கு காரணம் சட்டம் ஒழுங்கில் தமிழக அரசின் கவனமின்மையே.
சென்னை, பழவந்தாங்கலில் பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு நடைபெற்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயதான பெண் காவலர் நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 10.30 மணி அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள ரெயில் நிலைய நடைபாதையில் நடந்து சென்ற போது அவரை பாலியல் தொந்தரவு செய்து, செயினை பறித்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிக்கிறார்.
பாலியல் தொந்தரவு செய்த நபர் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த குற்றச்செயலுக்கு காரணம் போதைப்பொருள் என்பதும், போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
எனவே தமிழக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி போதைப்பொருட்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளை கைது செய்வதோடு, கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயமே இல்லை. காரணம் குற்றத்திற்கான தண்டனை குறைவானதாக இருப்பதோடு, குற்றச்செயலில் இருந்து தப்பிப்பதற்கு சாதகமான சூழல் நிலவுவதும் தெரிகிறது.
எனவே பெண் காவலருக்கு நேர்ந்த கொடுமை இனி காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமல்ல வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது என்பதற்கு ஏற்ப தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, போதைப்பொருளை அழித்து, போதைப்பொருள் பழக்கத்தில் இருக்கும் நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
- மேல்மா நிலங்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தமிழக அரசு வழி வகுக்கக் கூடாது.
- அதற்கு முன்பாகவே நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உழவர்களை திமுக நிர்வாகிகளைக் கொண்டு தாக்குவது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிராக மதிக்கும் நிலங்களை தர மறுக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம். அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 2700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைக் கண்டித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 597-ஆம் நாளாக இன்றும் மேல்மா கூட்டுச் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என்று கூறி வரும் தமிழக அரசு அங்கு போராடி வரும் உழவர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியது, பொய்வழக்குகளை பதிவு செய்தது என எண்ணற்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
ஆனால் அதுமட்டுமின்றி, அதற்கு அடுத்த நாள் அண்ணாமலை என்ற விவசாயியை சந்திப்பதற்காக சென்ற ரேணுகோபால் என்ற உழவரை திமுகவைச் சேர்ந்த கருணாநிதியும், அவரது ஆட்களும் கொடூரமாகத் தாக்கியதுடன் அவரது கை விரல்களையும் கடித்து காயப்படுத்தியுள்ளனர்.
அதற்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் ரேணுகோபால், கருணாநிதி மீது அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை. மாறாக, கருணாநிதியிடம் புகார் மனு பெற்று ரேணுகோபால் மீது வழக்குப் பதியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டுமானால். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க அங்குள்ள உழவர்கள் மீது அனைத்து வகையான அடக்குமுறைகளையும் அரசு ஏவி வருகிறது. அடக்குமுறை மூலம் பணிய வைக்க நினைத்தால் அரசுக்கு தோல்வியே கிடைக்கும்.
அதிகாரம் கைகளில் இருக்கிறது என்பதற்காக மக்களைத் தாக்கலாம், அச்சுறுத்தலாம், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்களை பறிக்கலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒரு போதும் வென்றது கிடையாது. ஆட்சியாளர்களிடம் உள்ள அதிகாரத்தை விட கூடுதல் சக்தி கொண்ட வாக்குரிமை என்ற அதிகாரம் மக்களிடம் உள்ளது. அதை அவர்கள் பயன்படுத்தினால் ஆட்சியாளர்கள் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
மேல்மா பகுதியில் உள்ள விளைநிலங்கள் வளம் மிக்கவை அவற்றை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று உழவர்கள் கூறி விட்ட நிலையில் அந்தத் திட்டத்தை கைவிடுவது தான் அரசுக்கு அழகு. அதற்கு மாறாக உழவர்களை கைது செய்வது, தாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபடக்கூடாது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிக்கல் நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூகத் தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், அவரை சந்திக்க விரும்பும் உழவர்களைப் பார்ப்பதற்குக் கூட நேரம் தர மறுக்கிறார். இது நியாயமல்ல.
முந்தைய திமுக ஆட்சியின் போது சென்னை துணை நகரம். மின்சாரத் திட்டங்கள் என பல காரணங்களுக்காக பல்லாயிரக்கணக்கான நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. திருப்போரூர், செய்யூர், இராணிப்பேட்டை. பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைத் திரட்டி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்திய நான். அனைத்து நிலங்களையும் மக்களுக்கு மீட்டெடுத்துக் கொடுத்தேன்.
தேவைப்பட்டால் மேல்மா பகுதி உழவர்களின் நிலங்களைக் காப்பதற்காகவும் நான் நேரடியாக களமிறங்கி போராடத் தயங்க மாட்டேன். மேல்மா நிலங்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தமிழக அரசு வழி வகுக்கக் கூடாது. அதற்கு முன்பாகவே நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
என ராமதாஸ் கூறினார்.
- மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.
- ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது.
திருச்சி:
திருச்சி சூரியூரில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும்.
திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும். இத்தகைய பிரசித்திபெற்ற சூரியூரில் ரூ.3 கோடியில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் துணை முதலமைச்சர் உதையந்தி ஸ்டாலின் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த மைதானம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அமைய உள்ளது. கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.
இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது. மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக அமர்ந்து போட்டிகளை பார்க்கும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அடுத்தப்படியாக 2-வது ஜல்லிக்கட்டு மைதானமாக 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
- அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை.
- வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள்.
மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்து கவுரவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் சீனி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:
பாரதியாரும் அவரது பணிகளும் நமக்கு எப்போதும் தேவை. தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதியாரை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை. தமிழ்.. தமிழ்… என்று பேசுபவர்கள் யாரும் தமிழுக்கும், தமிழ் இலக்கணத்திற்கும் சேவையாற்றவில்லை.
பாரதம் ஒருங்கிணைந்த நாடு என்பதை ஏற்க மறுக்கும் கட்டமைப்பு இங்கே இருக்கிறது.
காஞ்சி - காசி இடையே இருக்கும் ஒற்றுமையை பாரதியார் பேசினார். ஆனால், வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள். பாரதியார் வேதங்களை போற்றினார், இங்கு வேதங்களை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள்.
இம்மாநிலம் முழுவதும் சுற்றி இருக்கிறேன். மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை என்று பேசினார்.
- ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள்.
- இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றபோது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கடந்த முறை சீமான் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த மனு தள்ளுபடி செய்யபட்டதால் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மும்மொழிக்கொள்கை கடைபிடித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும்.
மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம் தான் மத்திய அரசின் நிதி. இது நாட்டின் பொதுவுடைமையாக இருக்கும் இறையாண்மைக்கு நேர் எதிர்மறையானது. இந்தியா ஒருமைப்பாடு மிக்க நாடாக இருக்க வேண்டும் என்றால் எல்லா மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும்.
என்னுடைய பணத்தை எடுத்து வைத்துகொண்டு பணம் கொடுப்போம் என்பது திமிறு. இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற தேவை என்ன இருக்கிறது. இந்தி படித்தால் பசி, பட்டினி தீர்ந்துவிடுமா. மொழி வாரியாக தான் இந்தியா பிணைந்து இருப்பதாகவும், தாய் மொழி தமிழ் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதனை வேண்டுமானாலும் படிப்பேன் என்பது எனது விருப்பம்.
வேறொரு மொழியை கற்க நாடோடி கூட்டமாக வாழ வைக்க நினைக்கிறீர்களா. நடிகர் சரத்குமார் அனைத்து மொழிகளும் பேசுகிறார். விரும்பினால் எந்த மொழி வேண்டுமானாலும் கற்போம்.
மரத்தின் வேர் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு தேசம் என்பதும் ஒரு மொழி என்பதும் கொடுமையானது. அது தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்கிறோம். கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்றால் அதை செய்ய முடியாது. மும்மொழிக்கொள்கை மோசடி கொள்கை. கொள்கை மொழி அவரவர் தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்க கூடாது. அப்படி அந்த தேர்வில் தோல்வி பெற்றால் பிஞ்சு மனதில் நஞ்சு வளராதா.
ஆட்சிக்கு வந்து 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். அதை செய்யவில்லை. தமிழக அரசு கோழை கூடார கூட்டமாக உள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள். எதிர்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி என்பார்கள்.
கல்வி மாநிலத்தின் உரிமை. மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி எத்தனை அமைக்க வேண்டும் என்ற உரிமையை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்தி எதற்காக தேவை என்பதற்கு அண்ணாமலை காரணம் கூற வேண்டும்.
இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம். தமிழ் தான் பூர்வகுடி மக்கள். இந்தி தேவை என்றால் மட்டுமே கற்று கொள்வோம். அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் கல்வி பயிலவில்லை என கூறுகிறார்.
தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைக்களாக போராடி வருகின்றனர். நல்லாட்சி கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா. ஈரோடு இடைத்தேர்தலில் ஏன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்து வாக்கு சேகரிக்கவில்லை. பாலியல் வன்கொடுமை, மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை தடுத்த வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பா என்னப்பா இப்படி பண்றீங்களே என்று கேட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது.
- பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.
ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா? என்று வினவியுள்ளார்.
- குனியமுத்தூர் பகுதியில் தான் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறும், அங்கு தனியாக பேசலாம் என கூறி அழைத்துள்ளார்.
- அவரிடம் பாட்டியும், போலீசாரும் துருவி, துருவி விசாரித்தனர்.
கோவை:
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெறாததால் அடுத்து படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவரது பெற்றோர் வெளியூரில் உள்ளனர். இங்கு தனது பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார்.
சிறுமி, செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். வலைதளத்தில் மூழ்கி கிடந்த அவருக்கு குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பழக்கம் ஆனார். அந்த மாணவர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர். இங்கு தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார்.
சிறுமியும், அந்த மாணவரும் அடிக்கடி போனில் பேசியும், சமூக வலைதளங்கள் மூலமும் பேசி வந்தனர். அந்த மாணவர், மாணவியை அடைய திட்டமிட்டு நேரம் பார்த்து காத்திருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அந்த மாணவியை அவர் தொடர்பு கொண்டுள்ளார்.
குனியமுத்தூர் பகுதியில் தான் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறும், அங்கு தனியாக பேசலாம் என கூறி அழைத்துள்ளார்.
அந்த பெண்ணும், மாணவரை நம்பி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். தனது பாட்டியிடம் வெளியில் செல்வதாகவும், உடனே திரும்பி விடுவதாகவும் கூறி விட்டு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இரவை கடந்தும் அந்த பெண் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பாட்டி உக்கடம் போலீஸ்நிலையம் சென்று புகார் செய்தார். போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண் வீடு திரும்பினார். அவரிடம் பாட்டியும், போலீசாரும் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவலை அந்த பெண் தெரிவித்தார்.
குனியமுத்தூரில் கல்லூரி மாணவர் தங்கியிருந்த அறைக்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் மாணவர் ஆசைவார்த்தைகள் கூறி இருக்கிறார். பின்னர் பெண்ணை நிர்வாணப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் மாணவருடன் படித்த மேலும் 6 மாணவர்களும் அங்கு வந்துள்ளனர். அவர்களும் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். அங்குள்ள அறையில் அந்த பெண்ணை சிறைவைத்து இரவு விடிய, விடிய 7 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் காலையில் அந்த பெண்ணை வீட்டருகே கொண்டு வந்து விட்டு விட்டு 7 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.
அந்த பெண் அளித்த தகவலின் பேரில் கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை சிறைவைத்து 7 பேரும் பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதையடுத்து 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- தமிழ்நாட்டின் சிறந்த கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.
- 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
சென்னை:
கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் வாழும் கைவினைப் பொக்கிஷம்" எனும் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023-24-ம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.முருகேசன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சொ.ராஜகோபால் (பஞ்சலோக சிற்பம்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெ.ராதா (நெட்டி வேலை), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பலராமன் (சுடுகளிமண் சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சொ. நாகமுத்து ஆச்சாரி (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ச. கிருஷ்ணமூர்த்தி (தகட்டு வேலை), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா பீவி (பனை ஓலை பொருட்கள்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெ.கிருஷ்ணன் (பஞ்சலோக சிலைகள்) மற்றும் கன்னி யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செ. லில்லி மேரி (மூங்கில் பாயில் ஓவியம்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
"பூம்புகார் மாநில விருது" தமிழ்நாட்டின் சிறந்த கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023-24-ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சீ.வே.ராம கிருஷ்ணன் (உலோக சிற்பம்) மற்றும் கோ. குணசுந்தரி (காகிதக் கூழ் பொம்மைகள்), சி.காத்தான் (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் ரெ.மெய்யர் (சுடு களிமண் சிற்பம்), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கு. ரமேஷ் (மரச்சிற்பம்) மற்றும் ஹ. ஸ்ரீதர் (தேங்காய் ஓடு பொருட்கள்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கா.கார்த்திகேயன் (பனை ஓலை பொருட்கள்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.கல்யாண குமார் (காகித கூழ் பொம்மைகள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கி. சந்திரசேகரன் (கண்ணாடி கலைப் பொருட்கள்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதலமைச்சர் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது.
- விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறை வாசிகளுக்கு ரூ.3.75 கோடி உதவி தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதவி தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது. அசைவ உணவு, சத்தான உணவு வழங்கப்படுகிறது. சிறைவாசிகளுக்கு உதவி செய்வதில் தமிழக அரசு முன் மாதிரியாக திகழ்கிறது.
அவர்களது நலனில் அக்கறை கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. சிறைக் கூடங்களை தண்டனை இடமாக பார்க்கவில்லை. அது சீர்திருத்த இடமாக பார்க்கப்படுகிறது. விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சிறைவாசிகளுக்கான நலச்சங்கம் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
சிறைவாசிகள் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். இந்த நிதியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நம்பிக்கையுடன் செல்லுங்கள். புதிய உலகத்தை பாருங்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பி.கே.சேகர்பாபு , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், உயர் அதிகாரிகள் தீரஜ் குமார், மகேஷ்வர் தயாள், கனகராஜ், முருகேசன் மற்றும் சிறை மீண்டோர் நலச் சங்க கவுரவ பொருளாளர் ஞானேஸ்வரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
- 2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார்.
- விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அந்த இலக்கினை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதன் அடுத்தகட்டமாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில், ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் 6 தளங்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப் போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 12 தளங்களுடன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப்போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இப்பூங்காக்கள் சுமார் 12,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, குளிர்சாதன வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
இதன்மூலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






