என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை ஏற்றம் செய்ததை விட தமிழை வைத்து தமிழகத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டது தான் அதிகம்.
    • கலைஞர் தன் மகளுக்கு கனிமொழி என்று பெயர் வைத்துவிட்டு சர்ச் பார்க்கில் தான் படிக்க வைத்தார்கள்.

    உலகத் தாய்மொழி தினத்தையொட்டி பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று தாய் மொழிகளின் தினம்... நம் தமிழ் மொழியை போற்றுவோம்...

    ஆனால்...ஒரு மாநிலத்தில் தாய் மொழியை வைத்து அதிக அரசியல் நடந்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான்... ஆனால் அந்த அளவிற்கு... அரசியல்வாதிகள் தமிழை ஆராதித்தார்களா என்றால். . தங்கள் குழந்தைகளை கூட தமிழை ஆரத்தழுவ விடவில்லை.. ஏன் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் கூட பெயர் வைக்கவில்லை.. என்பதே உண்மை.. அதனால் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு.. தமிழ் என் பெயரில் மட்டுமல்ல.. என் உயிரிலும் உள்ளது... தமிழக அரசியல்வாதிகள்.. குறிப்பாக திராவிட மாடல் அரசியல்வாதிகள் மேடைகளில் தமிழைப் பேசிவிட்டு தங்கள் குழந்தைகளை தமிழ் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் சேர்க்கவில்லை ஆளும்போது கூட தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற உரிமையை கூட தமிழர்களுக்கு கொடுக்கவில்லை பத்தாவது வரை கல்வி தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்று வரை போராடித்தான் வருகிறோம்...

    தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை ஏற்றம் செய்ததை விட. தமிழை வைத்து தமிழகத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டது தான் அதிகம்... என் அப்பா நான் ஆறாவது வரை தமிழ் வழி கல்வி தான் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்... ஆனால் தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள். பல பேர் தங்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழி அல்லாத. பிரபலமான ஆங்கிலப் பள்ளிகளில் தான் படிக்க வைத்தார்கள். அன்று பாமரனுக்கு ஒரு நீதி தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நீதி. என்றே தமிழை வைத்து தமிழக அரசியல் சுழன்று கொண்டிருந்தது... இன்றும் அதே நிலைதான்...

    ஆரம்பக் கல்வி முழுவதும் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்ற வழி வகை செய்யும் புதியகல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.... தாய்வழி... தாய்மொழி கல்விக்கு வழிவகை செய்யும் ஒரு திட்டத்தை. மொழி திணிப்பு திட்டமாக மடைமாற்றம் செய்கிறார்கள்... இதில் தமிழக மக்கள் குறிப்பாக தமிழகப் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்... ஏன் ஆரம்ப கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டும்..?

    குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகள் அறிவாற்றல் மிக்கவர்களாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக பலமானவர்களாக வலம் வருவார்கள்... அதேசமயம்... புட்டிப் பால் குழந்தைகள் அந்த ஆற்றலில் சற்று குறைபடவும் வாய்ப்பு இருக்கிறது... அதேபோல் தான் ஆரம்பக் கல்வி தாய்மொழிக் கல்வியாக இருந்தால் நம் குழந்தைகள் சிறந்த குழந்தைகளாக விளங்குவார்கள் என்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது... இன்று வரை தமிழகத்தில் ஆரம்பக் கல்வி தாய்மொழி அல்லாத கல்வி நிலையங்கள் தான் அதிகம்... தமிழன் இன்னும் ஏமாற்றப்படக்கூடாது... தமிழுக்காக பேசுபவர்கள் தமிழுக்கு எதிராக பேசுபவர்கள் போலவும் தமிழை அரசியல் ரீதியாக போற்றுகிறோம் என்று ஏமாற்றுபவர்கள்... தமிழக குழந்தைகளைப் பயிற்றுவிப்பதிலும் தன் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதிலும் தமிழை பிரதான படுத்துவதில் தோல்வி அடைந்தவர்கள் ஏதோ தமிழுக்காக அவர்கள் தான் வாழ்பவர்கள் போலவும் ஓர் தவறான தோற்றம் தமிழகத்தில் நிலவுகிறது...

    தாய்மொழி தமிழுக்காக பேசுகிறோம் என்று தமிழுக்காக வெளியே பேசுபவர்கள்... எத்தனை பேர்... தமிழை பிரதானமாக கற்றுக்கொடுக்காத கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகளை தமிழை பிரதானமாக கற்றுக் கொடுக்காத பள்ளிகளில் படிக்க வைத்தார்கள்... பள்ளிகளில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்பதை ஆராய்ந்தாலே இவர்கள் தமிழை வைத்து தமிழனை எவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது அப்பட்டமாக வெளிப்படும்... தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிடுவது என் நோக்கமல்ல ஆனாலும் கலைஞர் அவர்கள் தன் மகளுக்கு கனிமொழி என்று பெயர் வைத்துவிட்டு சர்ச் பார்க்கில் தான் படிக்க வைத்தார்கள்... பல அரசியல்வாதிகளின் குழந்தைகள். தமிழ் பிரதானமாக அல்லாத மான்போர்ட் பள்ளி போன்ற பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்பட்டார்கள்... தமிழர்களே மறுபடியும் உங்கள் பெயரைச் சொல்லி அரசியலில் ஏமாற்ற திராவிட மாடல் கும்பல்கள் தயாராக இருக்கிறது...

    தமிழ் மொழியை காப்போம்.. தமிழ் வழி கற்போம்... நம் தமிழ் குழந்தைகளை காப்போம்... நம் தாய்மொழி காப்போம்... நம் உயிர் தமிழ் மொழி காப்போம்... என்று தெரிவித்துள்ளார்.

    • முக்கிய நிகழ்வுகளின்போது இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
    • சிவபுராணம் பாடி தீபாராதனை செய்து வழிபட்டார்.

    வால்பாறை:

    புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவாக சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சித்தர் என அழைக்கப்படும் அழுக்கு சுவாமி ஆகியோர் விளங்குகிறார்கள்.

    இவர்களில் அழுக்கு சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் உள்ளது. முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர் ரங்கசாமி இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று அவர் வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சித்தர் ஜீவசமாதிக்கு வந்தார். அங்கு பூ, பழம் வைத்தும், மாலை அணிவித்தும், சிவபுராணம் பாடியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தீபாராதனை செய்து வழிபட்டார்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதம், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.

    தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் ஆசிரியர் ஜெயக்குமார் என்பவர் எழுதிய 3 புத்தகங்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் எழுத்தாளர்கள் எத்தகைய கருத்துக்களை வேண்டுமானாலும் எழுதலாம், வெளிப்படுத்தலாம். மற்றவர்களை பாதிக்காதவாறு எழுத வேண்டும். நம்முடைய எண்ணம், செயல்பாடு எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.

    தேசிய கல்விக்கொள்கை குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது கோவிலுக்கு வந்து இருக்கிறேன். எனவே அதுபற்றி பேச முடியாது என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

    நிகழ்ச்சியில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் 2 சேவைகளை திருச்சி விமான நிலையத்திற்கு வழங்கி வருகிறது.
    • வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையை நம்பி உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மட்டும் வழங்கி வருகிறது. இந்த விமானம் தினமும் 2 சேவைகளை திருச்சி விமான நிலையத்திற்கு வழங்கி வருகிறது.

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையை நம்பி உள்ளனர். திருச்சியில் இருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், பின்னர் அங்கிருந்து இலங்கை வழியாகவே திருச்சி விமான நிலையத்திற்கு வருவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் நேரடி விமான சேவை இல்லாத காரணத்தினால் இந்த விமான சேவையை பயன்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.

    மேலும் இந்த விமான சேவை தினமும் 2 முறை மட்டுமே திருச்சிக்கு இயக்கப்படுவதால் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து வருபவர்கள் தவிர திருச்சிக்கு இலங்கையில் இருந்து வருபவர்களும் இந்த விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் புதிய விமான சேவையாக இலங்கை யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அடுத்த மாதம் (மார்ச்) மாதம் முதல் புதிய சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.

    இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக விமான தொடர்பினை பெற்று குறைந்த கட்டணத்தில் வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

    மேலும் இலங்கைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய நேரப்படி மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் மதியம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்தை சென்றடையும்.

    மீண்டும் இந்த விமானம் மதியம் 2.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமான சேவை அதிக அளவிலான மக்கள் பயன்படும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
    • ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..

    மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாகி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..

    எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.

    ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..

    இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. என்று தெரிவித்துள்ளார்.


    • 16-வது நாளாக சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்.
    • தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    தொடர்ந்து சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை கடந்த ஜனவரி 4 -ந்தேதி பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து அடுத்தநாள் மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    16-வது நாளாக சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சாம்சங் தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்திய நிலையில் 13 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்டு செய்யப்பட்ட 13 ஊழியர்களும் சிஐடியூ-வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது.
    • போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மும்மொழி கொள்கை தீவிரமாகி வருகிறது. மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க. அரசு குரல் கொடுத்து வரும் நிலையில், மும்மொழி கொள்கை ஏன் அவசியம் என்பது குறித்து மாநில பா.ஜ.க. வாதம் செய்து வருகிறது.

    மீண்டும் இந்தி திணிப்பை அனுமதிக்கமாட்டோம் என்று அரசு சார்ந்த அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்தியை எதிர்க்கும் யாரெல்லாம் இந்தி மொழி உடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து அண்ணாமலையும் தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே, அண்ணாசாலைக்கு வந்து பார்க்கட்டும் என்று துணை முதலமைச்சர் கூற அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் அங்கு வரட்டும்.. இடத்தை கூறுங்கள்' என்று அண்ணாமலை கூற தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

    இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 'தமிழ் வாழ்க' என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதுவும் ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது. இதனை ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.

    இதனிடையே இன்று சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 'தமிழ் வாழ்க' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

    • தொடக்கத்தில் ஆயிஷாவுக்கு சிறிய தொகை லாபமாக கிடைத்துள்ளது.
    • கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆயிஷா புகார் செய்தார்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி சண்முகா தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா ஷர்மி ஜெகன் (வயது 29). என்ஜினீயரிங் படித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆலியா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் ஆனார். அப்போது ஆலியா, ஆயிஷாவிடம் பகுதிநேர வேலை மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதைநம்பி அவருடன் ஆயிஷா தொடர்ந்து பேசத் தொடங்கினார்.

    முதலில் குறிப்பிட்ட இலக்கு வழங்கப்படும் என்றும் அதை வெற்றிகரமாக செய்து முடித்து கொடுத்தால் பிறகு கூடுதல் லாபம் கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆலியா கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி தொடக்கத்தில் ஆயிஷாவுக்கு சிறிய தொகை லாபமாக கிடைத்துள்ளது. இதனால் ஆயிஷா தொடர்ந்து முதலீடு செய்தார். மொத்தம் ரூ.5 லட்சத்து 42 பணத்தை அவர் பல்வேறு தவணைகளில் செலுத்தி உள்ளார்.

    இதற்கான லாபத்தொகையை ஆயிஷா வங்கி கணக்கில் இருந்து எடுக்க முயன்றார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து கேட்பதற்காக தனக்கு பழக்கமான ஆலியாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டத்தை ஆயிஷா உணர்ந்தார்.

    இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆயிஷா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் ஆயிஷாவை ஏமாற்றிய ஆலியா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.520-ம் நேற்று சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,560-க்கு விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,025-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,200-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

    19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280

    18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760

    17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-02-2025- ஒரு கிராம் ரூ.109

    19-02-2025- ஒரு கிராம் ரூ.108

    18-02-2025- ஒரு கிராம் ரூ.108

    17-02-2025- ஒரு கிராம் ரூ.108

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது.
    • ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

    நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

    உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது பிரதமர் நரேந்திர மோடிகொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என்று கூறியுள்ளார். 



    • அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன்,
    • நட்பு பாராட்டுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயம் வரலாம், செங்கலை பிடுங்க வருவேன் என்றால் எப்படி அனுமதிப்பது?

    சென்னை :

    என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு, தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன், வரக்கூடாது என்றால் அது என்ன ரெட் லைட் ஏரியாவா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

    இது குறித்து, இன்று அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நட்பு பாராட்டுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயம் வரலாம், செங்கலை பிடுங்க வருவேன் என்றால் எப்படி அனுமதிப்பது? மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் ரெட் லைட் ஏரியா என சொல்வது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

    GET OUT என்ற வார்த்தைக்கு உகந்தவராக இருப்பவர் பிரதமர் மோடி தான் என்றார். 

    • தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றவிட்டது.
    • தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    சென்னை:

    சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- நாளை (இன்று) காலை 6 மணி வரை ஒட்டு மொத்த தி.மு.க. மற்றும் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி 'கெட் அவுட் மோடி' என்று டுவீட் போடுங்கள். நானும் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று டுவீட் போடுகிறேன். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று பாருங்கள்.

    தி.மு.க. ஐ.டி. விங்கிற்கு சவால் விடுகிறேன். 24 மணி நேரம் தருகிறேன். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. 2 கட்சிகளும் போடும் டுவீட்டில் எவ்வளவு வித்தியாசம் என்று நாளை மறுநாள் (சனிக்கிழமை) கணக்கு பார்ப்போம் என்று தெரிவித்து இருந்தார்.

    அதன்படி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் #GetOutStalin என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள செய்தியில்,

    ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள இந்த தி.மு.க. தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். 



    • மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
    • பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.

    அந்த வகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூருக்கு வருகை தருகிறார்.

    இதையொட்டி சென்னையில் இருந்து காலை 9.30 மணிக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், மாலை 4.30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் புறப்படுகிறார். பின்னர் மாலை 5.15 மணி அளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 44,689 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் வடலூர் வழியாக நெய்வேலி புறப்பட்டு செல்கிறார். அங்கு மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    இதையடுத்து நெய்வேலியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்குகிறார். பின்னர் நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு நெய்வேலி விருந்தினர் மாளிகையில் இருந்து வேப்பூர் அருகே உள்ள திருப்பெயருக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 9.30 மணிக்கு நடக்கும் மாநில அளவிலான பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு வேப்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லைகளில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில் கடலூர், நெய்வேலி, வேப்பூர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே நேற்று மதியம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முதலமைச்சரின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.

    ×